[X] Close

'கோல்டன் விக்கெட்' புவனேஷ், பும்ரா, கலீல் அபாரம் :ஆஸி 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்


australian-team-in-trouble

கோல்டன் விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமாரை பாராட்டும் சக வீரர்கள்: படம் உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 15:27 pm
  • அ+ அ-

மெல்பர்னில் நடந்துவரும் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. மெல்பர்னில் இன்று 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கிறது. தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தப் போட்டியில் இந்தியஅணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஷார்ட் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்வர் குமார் தான் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே கோல்டன் விக்கெட்டை கழற்றினார். முதல் பந்தைச் சந்தித்த ஆரோன் பிஞ்ச் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த கிறிஸ் லின், ஷார்டுடன் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை வீசிய கலீல் அகமதுவின் பந்தில் ஷார்ட் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது.

3-வது ஓவரை புவனேஷ் வீசினார். இந்த ஓவரிலும் முதல்பந்தில் விக்கெட்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷார்ட்டின் பேட்டில் இன்சைட் எட்ஜ் வாங்கி வந்த பந்தை ரிஷப் பந்த் தவறவிட்டார். அதே ஓவரில் லின் ஒருபவுண்டரி விளாசினார். ஆனால், கடைசி பந்தில் டீப் மிட்பாயிண்டில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து லின் 13 ரன்களில் வெளியேறினார்.

கலீல் அகமது வீசிய 6-வது ஓவரின் 2-வது பந்தை சரியாகக் கணிக்க மறந்து அடிக்க முயன்றார் ஷார்ட். ஆனால், பந்து பீட்டன் ஆகி, ஸ்டெம்பை பதம்பார்த்து. ஷார்ட் 14 ரன்களில் கிளீன் போல்டாகி கலீலிடம் விக்கெட்டை இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டோய்னிஸும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பும்ரா வீசிய 7-வது ஓவரின் 2-து பந்தில் டீப் பாயிண்டில் தினேஷ் கார்த்திகும் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் நடையைக்கட்டினார் ஸ்டோய்னிஸ். 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரலிய அணி தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், மெக்டார்மார்ட் இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ஆனால், குல்தீப் யாதவும், குர்னல் பாண்டியாவும் பந்துவீச அழைக்கப்பட்டனர். மேக்ஸ்வெலுக்கும், மெக்டார்மார்ட்டுக்கும் நிற்க வைத்து இருவரும் படம் காட்டினார். அதிலும் குல்தீப் தனது சினாமேன் பந்துவீச்சில் திணறடித்தார்.

பாண்டியா வீசிய 11-வது ஓவரின் கடைசிப் பந்தில் பொறுமை இழந்த மேக்ஸ்வெல் அடிக்க முற்பட்டு க்ளீன் போல்டாகினார். மேக்ஸ்வெல் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்துக் களமிறங்கிய காரேயும், சுழற்பந்துவீச்சைக் கண்டு நடுங்கினார்.

குல்தீப் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் காரே.

மெக்டார்மார்ட், கோல்டர் நீல் இருவரும் திடீரென அடித்து ஆடினார்கள். கோல்டர் நீல் அதிரடியாக இரு சிக்ஸர்களை விளாசினார். நீண்டநேரம் நிலைக்காத நீல், 20 ரன்கள் சேர்த்திருந்த போது புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பும்ரா வீசிய 17-வது ஓவரை தொடுவதற்கே பேட்ஸ்மேன்கள் அஞ்சினார்கள். 139 கிமீ வேகத்தில் பந்துகள், மின்னல் வேகத்தில் ஸ்விங் ஆகியது. இந்த ஓவரில் பும்ரா ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கலீல் அகமது வீசிய 18-வது ஓவரை ஆன்ட்ரூ டை பொளந்து கட்டிவிட்டார். ஆன்ட்ரூ இரு பவுண்டரிகளும், மெக்டார்மார்ட் ஒருசிக்ஸர் விளாசினார்.

19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. மெக்டார்மார்ட் 32, ஆன்ட்ரூ டை 12 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்தியத் தரப்பில் புவனேஷ், கலீல் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப், குர்னல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close