[X] Close

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தவண், ரோஹித் சர்மா


virat-kohli-record-will-be-broken-today

ஷிகர் தவண், ரோஹித் சர்மா : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 21 Nov, 2018 14:04 pm
  • அ+ அ-

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் செய்துள்ள சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஷிகர் தவணும், ரோஹித் சர்மாவும் தீவிரமாக உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 தொடரில் விராட் கோலியின் சாதனையை தவணும், ரோஹித் சர்மாவும் முறியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஷிகர் தவண், ரோஹித் சர்மா புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய 3 பேரும் இந்த ஆண்டில் சூப்பர் பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஷிகர் தவண் இந்த ஆண்டில் டி20 போட்டியில் அதிகமான ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் உள்ளனர்.

இந்த ஆண்டில் ஷிகர் தவண் 15 டி20 போட்டிகளில் விளையாடி 572 ரன்கள் குவித்து, சராசரியாக 38.13 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 அரை சதங்கள் அடங்கும்.

டி20 போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரன்கள் சேர்த்ததில் கேப்டன் விராட் கோலி 2016-ம் ஆண்டு 641 ரன்கள் சேர்த்தார். இந்த சாதனையை எந்த சர்வதேச வீரரும் முறியடிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது ஷிகர் தவண் இந்த ஆண்டில் 572 ரன்கள் சேர்த்து விராட் கோலியின் சாதனையை நெருங்கியுள்ளார். விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

அதுபோல், ரோஹித் சர்மாவும் கோலியின் சாதனையை எட்டுவதற்கு 79 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 560 ரன்கள் சேர்த்து 2-ம் இடத்தில் உள்ளார்.  இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தவண், ரோஹித் அந்த சாதனையை முறியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான நிடாஹாஸ்கோப்பையில் 5 போட்டிகளில் 198 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா முன்னணியில் இருந்தார். அதேபோல, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் 138 ரன்கள் சேர்த்து தவண் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close