[X] Close

நன்றி ஈசனே ; உலகுக்கே படியளப்பவனுக்கு ஒரு கைப்பிடி அரிசி கொடுங்களேன்!


annabishegam

தஞ்சை பெரியகோயில் பெருவுடையார்

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 09:56 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கு ஒப்பற்ற விழாக்களில் ஒன்று... அன்னாபிஷேகம். நமக்குப் படியளந்த பரமனை, அன்னத்தால் அலங்கரித்து அழகு பார்க்கும் ஆனந்தத் திருவிழா இது.

கல்லுக்குள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கிற உயிர்வரை எத்தனையோ கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதே அன்னாபிஷேகம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?இதற்கும் ஒரு காரண காரியம் வைத்திருக்கிறார்கள் ஆன்றோர்களும் முன்னோர்களும்!
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்ந்தான் என்கிறது புராணம்.

அந்த சாபம் என்பதைப் பார்ப்போமா?

அதாவது, சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்திவந்தான் சந்திரன். மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சன் கடும் கோபமானார். அதனால் அவனின் உடல் தேயட்டும் என்று சாபமிட்டார்.
சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்தினான். அழுதான். புலம்பினான். கெஞ்சினான்.

திங்களூர் எனும் இப்போதைய தலத்தை அப்போது சொன்னார் தட்சன். அங்கு சென்று, சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். கடும் தவம். முழு ஈடுபாட்டுடன் சிவபூஜை. அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், மனமிரங்கினார். கிட்டத்தட்ட முழு நிலாவாக இருந்தவன், பிறையாகிப் போனான். அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார் சிவனார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாகவே இருக்குன் என அருளினார் சிவபெருமான்.

திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 24.10.18 புதன்கிழமை. அன்னாபிஷேகம். சிவாலயங்களில் கோலாகலமாக நடைபெறும் அன்னாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிவதரிசனம் செய்யுங்கள். ஒருகைப்பிடியேனும் அன்னாபிஷேகத்துக்கு அரிசி வழங்குங்கள். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் எப்போதும் இல்லத்தில் குடிகொண்டிருக்கும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close