[X] Close

அனாதைகளுக்கும் தர்ப்பணம் செய்யுங்கள்! ஆயிரம் மடங்கு பலன் நிச்சயம்!


mahalaya-amavasai

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Oct, 2018 19:13 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இந்த உலகில், உறவுகளற்று, உறவுகளிருந்தும் தனியே எங்கோ திரிந்து, ஏதோவொரு சூழலில் அழக்கூட எவருமின்றி இறந்துவிடுகிறார்கள். இவர்களை ஒற்றை வார்த்தையில் அனாதை என்றும் அனாதைப் பிணம் என்றும் சொல்லிச் சென்று கொண்டே இருக்கிறோம். இவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தான்; இவர்களுக்கும் மனசும் ஆத்மாவும் உண்டு. இந்த ஆத்மாக்களுக்காகவும் இந்த    புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யலாம்.

பித்ருக்களின் ஆசியை விட, அவர்கள் குளிர்ந்து போவதைவிட  எவருமில்லாமல் இறந்துவிட்ட அந்த ஆத்மாக்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். எனவே, நாளை திங்கட்கிழமை  8ம் தேதி, புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை நாளில், இப்படி முன்னோருக்கும் இறந்துவிட்ட தோழமைகளுக்கும் உறவுக்காரர்களுக்கும் அறிந்தவர் தெரிந்தவர்களுக்கும் உங்களின் குருமார்களுக்கும் உங்கள் வீட்டில் வளர்த்த, இறந்துவிட்ட செல்லப்பிராணிகளுக்கும், எவருமே இல்லாமல் இறந்துவிட்டவர்களுக்கும் என தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும்தண்ணீரும் கொண்டு, மூன்று முறை விடுங்கள்.

சைக்கிளில் பயணித்து ஓரிடத்தை அடைவதற்கும், காரில் அந்த இடத்தை அடைவதற்கும் வேறுபாடு இருக்கிறதுதானே! அதேபோல, புண்ணிய காலங்களில் முன்னோர் ஆராதனை செய்வதென்பது மிக உயர்வானது. தவிர, (சூரியன் புதனின் வீடான கன்னியில் இருப்பதே புரட்டாசி மாதம்) புதனின் அதிபதியான ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமும், மனிதனாக வாழ்ந்து தர்மத்தை நிலைநாட்டியவருமான ஸ்ரீராமபிரான் வழிபட்ட ராமேஸ்வரத்துக்கு முடிந்தால் சென்று, பித்ரு கடனை நிறைவேற்றலாம்.  சகல நலன்களையும் பெற்று சந்துஷ்டியுடன் வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

  புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ செய்ய முடியாதவர்கள், அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் தங்களது கடமையை நிறைவேற்றுங்கள்.

  இறந்துபோனவர் குழந்தை இல்லாதவர் எனில், அவருடைய மனைவியானவர் வாத்தியாரிடமே தர்ப்பணம் செய்யச் சொல்லலாம். இதேபோல், ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில், அந்த வீட்டின் பெண் குழந்தைகள் தங்களின் தந்தைக்காக, பெற்றோருக்காக வேறு ஒருவரை நியமித்துக் கடமையை நிறைவேற்றலாம்.

   தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். இதுதான் இந்து மதத்தின் மகோன்னதம் என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

  புண்ணியம் நிறைந்த மஹாளய அமாவாசை நாளில், நம் முன்னோர் கடனை அளித்து, நல்வாழ்வு வாழ்வோம்.!

 நாம் எவ்வளவு தெய்வ ஆராதனைகள் செய்தாலும், நமக்குக் கண்கண்ட தெய்வம், நம்மைப் பெற்றவர்கள்தான். அவர்கள் வாழும் காலத்தில் அவர்களை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்வதோடு, இறந்த பிறகு அவர்களுக்கான கடனைச் சரிவரச் செய்தால்தான் தெய்வ அருள் முழுமையாகக் கிடைக்கும். வெறும் பத்து ரூபாய் என்றாலும், அது கடன்தான். தலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான். கடமைதான்.

நாளை திங்கட்கிழமை... புரட்டாசி அமாவாசை. மிக உன்னதமான நாள்... இறந்தவர்களை ஆராதிக்க மறந்துவிடாதீர்கள்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close