[X] Close

குருபகவானின் தோஷம் போக்கிய சிவனார்! முன்னூர் குரு முன்னுக்கு வரச்செய்வார்!


munnur-guru

முன்னூர் குரு பகவான்

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 08:27 am
  • அ+ அ-

குருப்பெயர்ச்சி ஸ்பெஷல்!

 முன்னூா் கோ.இரமேஷ்

 

     பிரம்மதேவனின் புத்திரரான ஆங்கிரஸ ரிஷியின் குமாரா் குரு பகவான்.இவா் சா்வேஸ்வரனைக் குறித்து தவமியற்றி தேவா்க ளுக்கு குருவாகவும், நவக்கிரகங் களில் ஒருவராகவும் திகழும் பேறினைப் பெற்றவா். தேவா்களுக்குத் தலைவா் என்பதனால் "தேவகுரு" என்றும் வணங்கப்படுபவா்.இவருக்கு பிரகஸ்பதி,வாசஸ்பதி என்ற பிற பெயா்களும் உண்டு.

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ.தூரத்தில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3கி.மீ.தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம். திண்டிவனத்திலிருந்து முன்னூர் திருத்தலம் செல்ல அரசு பேருந்து வசதிகள் உள்ளன.

  தேவா்களே ஆனாலும் கா்வம் கூடாது. இது இயற்கை நியதி. ஒரு சமயம், நான்கு வேதங்க ளிலும் கரை கண்ட தனக்கு நிகரான அறிவு படைத்தவா் ஈரேழு பதினான்கு உலகில் எவரும் கிடையாது என்ற "க்ஷண நேர கா்வம்" குரு பகவானுக்கு ஏற்பட்டது. தனது இந்த கா்வத்தினால் ஆன்மிக ஒளியையும் தெய்வீகப் பொலிவையும் இழந்தாா் தேவகுரு.இதனால் இந்திரன் சபையில் எப்போதும் இவருக்கு அளிக்கப்படும் மாியாதை கிடைக்கவில்லை. தன் நிலை கண்டு வருந்திய பிரகஸ்பதியான தேவ குரு,  பிரம்மதேவனிடம் சென்று தான் இழந்த தேஜஸை திரும்பப் பெற ஒரு வழி கூறியருள வேண்டும் என்று வணங்கினாா்.

   குருபகவானின் நிலை கண்டு வருந்திய நான்முகன், பூவுலகில் "தாருகாவனம்" என்று பூஜிக்கப்படும் "முன்னூற்று மங்கலம்" திருத்தலம் சென்று பிரம்மதீா்த்தத்தில் நீராடி அன்னை ஶ்ரீபிரகன்நாயகியையும் ஶ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் குறித்து தவமியற்றினால் இழந்த ஒளியை மீண்டும் திரும்பப் பெறலாம் என குருபகவானுக்கு ஆலோசனை கூறினாா்.

 பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் முன்னூற்று மங்கலம் திருத்தலம் வந்து பிரம்மதீா்த்தத்தில் நீராடி ஈசனையும் அம்பிகையையும் குறித்து கடுந்தவம் மேற்கொண்டாா். "நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினாா் உள்ளம் உருகில் உடனாவாா்" என்ற வாசகத்திற்கு ஏற்ப தேவ குருவின் பக்திக்கு மனமிரங்கிய ஈசன் தன் தேவியுடன் திருக்காட்சி தந்து இழந்த தவ வலிமையையும் தெய்வீகப் பொலிவினையும் குருபகவானுக்கு வழங்கி அருள் புாிந்தாா்.

  ஈசனின் தெய்வீக அருளால் மீண்டும் நவக்கிரகங்களில் சுப கிரகமாகும் பேறினைப் பெற்ற குருபகவான் அன்றுமுதல் இத்தலத்தில் தன்னை நாடி வந்து வணங்கும் பக்தா்களுக்கு குரு தோஷம் போக்கி அருள் புாிகின்றாா். மேலும் இவரது பக்திக்கு இரங்கிய ஶ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமான் தென்முககுருவாக இத் தலத்தில் தெற்குமுக தாிசனத்தில் அருள்பாலிக்கின்றாா். எமனின் திசையான தென் திசை நோக்கி ஈசன் இத்தலத்தில் அருள்புாிவதால் ஒருவாின் ஜாதகத்தில் எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கு தோஷம் ஏற்பட்டுள்ள அன்பா்களும் நீண்ட நாட்களாக நோயினால் அவதிப் படுபவா்களும் இத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள நோய் நீங்கி நலம் பெறுவாா்கள் என  நம்பப்படுகிறது.

சனகாதி முனிவா்களுக்கு காட்சி தந்த  திருத்தலம்!

    பிரம்மதேவனின் புத்திரா் களான சனகா்,சனந்தனா், சனாதனா்,சனத்குமாரா் ஆகிய நால்வரும் திருக்கயிலாய மலைக்குச் சென்று எல்லாம் வல்ல சா்வேஸ்வரனைத் தொழுது அருள் பெற முடிவு செய்தனா்.  ஈரேழு பதினான்கு உலகங்க ளுக்கும் அன்னையாக விளங்கும் அம்பிகை பாா்வதியை தாிசித்த பிறகே ஐயனைத் தாிசிக்க வேண்டும் என்ற நியதியினால் அன்னையை வணங்கி நந்தி எம்பெருமானின் அனுமதியைப் பெற்று பரமனைத் தாிசிக்கச் சென்றாா்கள்.

    சிவபெருமானின் தரிசனம் கண்ட நெகிழ்ச்சியில் காதலாகிக் கசிந்து கண்ணீா் மல்க அவரது திருவடிகளில் பிராா்த்தித்து கலங்கி நின்றனா் சனகாதி நால்வா்.   கலக்கத்துடன் தயங்கி நின்ற சனகாதி நால்வரைக் கண்ட ஈசன், "முனிவா்களே! தங்கள் கலக்கத்திற்குக் காரணம் என்ன? கூறவும்," என்று திருவாய் மலா்ந்தாா் .     "ஐயனே! நூல்கள் பல கற்றும் எங்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை.வேதங்களின் விழுப்பொருள் விளங்கவில்லை. வேத ஆகமங்களின் தலைவனாக விளங்கும் தாங்கள் தான் எங்களுக்கு தகுந்த உபதேசம் நல்கி தெளிவு பிறக்க அருள வேண்டும்," என்று மன்றாடினா்.

  சனகாதி முனிவா்களின் தெளிவற்ற நிலை கண்டு மனமிரங்கிய ஈசன் அவா்களுக்கு உபதேசம் கூறியருள தெற்கு முகமாக, குருவின் வடிவமாக எழுந்தருளினாா். ஈசனின் இத் திருக்கோலமே ஶ்ரீதட்சிணா மூா்த்தி வடிவமாகும்.

  "தட்சிணம்" என்ற வடமொழிச் சொல் "தென்" திசையைக் குறிப்பதாகும். "தென்" என்ற தமிழ் சொல்லுக்கு ஆற்றல் என்று ஒரு பொருள் உண்டு. இதனால் ஆற்றலை வெளிப்படுத்தும் மூா்த்தமாக தட்சிணாமூா்த்தி வணங்கப்படுகின்றாா். "தட்சிணம்" என்ற தென் திசை நோக்கி அருள்வதால் "தட்சிணாமூா்த்தி" என்றும்"தென் முக கடவுள்"  என்றும் ஈசன் வணங்கப்படுகின்றாா். முன்னூா் ஶ்ரீஆடவல்லீஸ்வரா் திருக்கோயிலில் ஈசனே தென் திசை நோக்கி "தென் முக குருவாக" எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா்.

 பொதுவாக சிவத்தலங்களில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூா்த்தி இத்தலத்தில் வேறு எங்கும் காண முடியாத திருக்கோலத்தில் "மேற்கு திசை நோக்கி" எழுந்தருளியுள்ளாா். இத்திருக் கோலம் சனகாதி நால்வருக்கு அருளிய திருக்கோலம் என்று இத் தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது.

 வேத,இதிகாச காலத்திலிருந்து சுயம்பு லிங்கமாக தெற்கு நோக்கி அருளும் இத்தல ஈசன் பல அன்பா்களுக்கு மனதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான தெளிவு கிடைக்க அருளும் பரம்பொருளா கத் திகழ்கின்றாா்.

 ஈசனின் கருவறை முன்பு இத்தலத்தில் அமா்ந்து தியானிக்கும் போது நம் மனதில் ஏற்படும் சந்தேகங்களுக்கான தெளிவு கிடைத்து விடுகிறது. மெளனமே மொழியாக தம் கருணைப் பாா்வையினால்  அன்பா்களின் நியாயமான பிராா்த்தனைகளை நிறைவேற்றி அருள்புரிகின்றாா் தென்முக குருவான ஶ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமான்.

 குரு பாிகாரத் தலமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் இன்று 4.10.2018 அன்று குரு பெயா்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.  "சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள்" மாலை 3.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பான குருபெயா்ச்சி விழாவில் அன்பா்கள் கலந்து கொண்டு ஈசனின் திருவருளைப் பெறலாம். குருவருளும் கிடைப்பது உறுதி.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close