[X] Close

தலையெழுத்தை திருத்தி அருளும் பிரம்மா!  குருவுக்கு அதிபதி இவர்தான்!


guru-bramma

திருப்பட்டூர் பிரம்மா

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Oct, 2018 07:46 am
  • அ+ அ-


வி.ராம்ஜி

குருப்பெயர்ச்சி. குரு பிரம்மாவை வணங்குவோம். குருவுக்கு அதிபதியே குரு பிரம்மாதான்.   

கர்வமும் ஆணவமும்தான் முதல் எதிரி. கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. ஆணவம் இருந்துவிட்டால், அங்கே மதிப்புமரியாதைக்கு வேலையே இல்லை. தவிர, கர்வத்துடன் எவர் இருந்தாலும், அவருக்கு துயரமும் அழிவும் நிச்சயம். நம்மைப் படைத்த பிரம்மாவுக்கு, அப்படியொரு கர்வம் தலைக்கேறியது. ‘உனக்கு நிகரானவன் நான். உனக்கும் ஐந்து தலை. எனக்கும் ஐந்து தலை’ என்று சிவபெருமானிடம் கொக்கரித்தார் பிரம்மா. அவருக்கும் அகிலத்து மக்களுக்கும் பாடம் நடத்த, தன் விளையாட்டைத் துவக்கினார் சிவபெருமான்.

  பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். கொடுத்த படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். துடித்துப் போனார் பிரம்மா. அகங்காரம் தந்த அழிவும் அதனால் பொங்கிய அவமானமும் கலங்கடித்தது பிரம்மாவை! சிவனாரிடம் சரணடைந்தார். ‘அப்பா சிவனே. என்னை மன்னித்துவிடுங்கள். தவறை உணர்ந்தேன். பிராயச்சித்தம் தாருங்கள்’ என மன்றாடினார்.

  அதையடுத்து சிவனாரின் அறிவுரைப்படி கடும்தவம் புரிந்தார். அனுதினமும் சிவலிங்க பூஜைகள் செய்து வந்தார். அதன் பலனாக, இழந்ததைப் பெற்றார். ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக்கிணறு, பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், 12 சந்நிதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைத்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்!

  திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் திருத்தலம். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. சிறுகனூரில் இருந்தும் சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு. திருச்சியில் இருந்து காரில் ஆலயத்துக்கு வருவதே உத்தமம்.

  பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.

  அதனால்தான் திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.

  பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிராகாரத்துக்குள் அடியெடுத்து வைத்ததுமே, விமானத்துடன் கூடிய  தனிச்சந்நிதியில் உள்ள பிரமாண்டமான பிரம்மாவை கண்ணாரத் தரிசிக்கலாம்.நான்கு முகங்கள். நான்கு தலைகளிலும் அழகிய கிரீடம். நான்கு திருக்கரங்கள். அதில் இரண்டு திருக்கரங்களை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! மற்றபடி வலது கரத்தில் ஜப மாலை, இடது கரத்தில் கமண்டலம். பத்ம பீடம் என்று சொல்லப்படுகிற, தாமரை மலரில் அமர்ந்து, தவ நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

 பொதுவாக பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. பிரம்மா குரு அல்லவா. எனவே வியாழக்கிழமையிலும் சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமையிலும்  ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து வணங்கிச் செல்வது, மிகுந்த பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

       இங்கே, குரு பிரம்மாவையும் குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரம்மாவின் சந்நிதியில் நின்று கொண்டே தரிசிக்கிற பாக்கியமும், இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று.

  அதுமட்டுமா? ஸ்ரீபிரம்மாவுக்கு எதிரில் உள்ள தூண்களில் ஒன்றில், ஸ்ரீசனீஸ்வர பகவானின் திருவுருவம், சிற்ப வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு வந்து தரிசித்தால், சனி தோஷமும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    வேல் கொண்டு நம் வினைகளைத் தீர்க்கும் வேலவன், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக, சுப்ரமண்யராக அழகு ததும்பக் காட்சி தருகிறார். அழகன் முருகனின் அழகைச் சொல்ல வேண்டுமா என்ன? அவரின் சந்நிதியில் வள்ளிதெய்வானையுடன் நிற்கிற அழகையும் அந்தக் கல்சிற்பத்தில் தெரிகிற திரும்பிப் பார்க்கிற மயிலின் ஒயிலையும் கண்டு பரவசமாகிப் போவீர்கள்.

 அந்தக் காலத்தில், திருப்படையூர், திருப்பிடவூர் என்று பெயர் இருந்ததற்குக் காரணமே முருகப்பெருமான்தான் என்கிறது ஸ்தல புராணம். அசுரக்கூட்டத்தை அழிக்க, தன் படைகளுடன் தங்கிய ஊர்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

   குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு மகேஸ்வரன் என்கிறோம். அப்படிப் பார்த்தால், முருகப்பெருமானும் குருவே! ஆமாம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் அல்லவா, குமரன். பிரணவ மந்திரத்தின் பொருளை எடுத்துரைத்த மந்திரமூர்த்தி அல்லவா, மயில்வாகனன். எனவே இங்கே குரு ஸ்தானத்தில், குரு அந்தஸ்தில், முருகப்பெருமான் கோலோச்சுகிறார் இங்கே!

  முருகப்பெருமானின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருக்கிற சிலையைத்தான் பல கோயில்களிலும் தரிசிக்கலாம். இந்த மயிலை, தேவ மயில் என்பார்கள். இங்கு, கந்தபிரானின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் அமைந்திருப்பது காண்பதற்கு அரிதான ஒன்று. இந்த மயிலை, அசுர மயில் என்கின்றன ஞானநூல்கள்.

  ஸ்ரீசுப்ரமண்யர், ஞானகுரு. பூமிகாரகன். செவ்வாய்க்கு அதிதேவதையும் இவர்தான். எனவே, இந்தத் தலத்து முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கந்தபிரானுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் அல்லது சஷ்டி  நாளில் அல்லது முடிந்த நாளில் வந்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். எடுத்த காரியம் யாவும் இனிதே ஈடேறும்.

 வாரிசு இல்லை எனும் ஏக்கம் நீங்கி, பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறலாம். கோர்ட், கேஸ் என வழக்கில் சிக்கி வாழ்க்கையில் தவிப்பவர்களுக்கு வழக்கில் வெற்றி கிடைத்து, நிம்மதியுடன் வாழ்வார்கள் என்பது உறுதி.

   செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் வருகிற சஷ்டி அல்லது கிருத்திகை நட்சத்திர நாளில், முருகக்கடவுளை வணங்குங்கள்.  முடிந்தால் வஸ்திரம் சார்த்தி, அரளிப்பூமாலை அணிவித்து வேண்டுங்கள். செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும்.

  புதிதாக தொழில் துவங்குபவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் என்று கலங்கித்தவிப்பவர்கள், வளர்பிறையில் வரும் சஷ்டி அல்லது கிருத்திகை நாளில் வந்து, வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வியாபாரம் செழித்து வளரும்.

   அதேபோல், சொந்த வீடு எனும் கனவும் லட்சியமும் ஆசையும் விருப்பமும் இல்லாதவர்கள் எவரேனும் உண்டா என்ன? செவ்வாய், சஷ்டி, கிருத்திகை அல்லது அவர்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வேஷ்டி & புடவை சார்த்தி, வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வழிபடுங்கள். நீங்கள் வாங்கிய இடத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அவை விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்குகள் இருந்தால், அந்த வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ‘இடமும் இல்லை, மனையும் கிடையாது’ என்பவர்கள், இடமோ வீடோ வாங்குகிற யோகம் விரைவிலேயே வாய்க்கும்.

 வெற்றிவேல் முருகனை வணங்குங்கள். வாழ்வில் சகல காரியங்களிலும் துணையிருப்பான். வெற்றியைத் தேடித் தருவான்.

     இன்றைக்கு இருக்கிற அத்தனை யோக, தியானங்களுக்கெல்லாம் அடிப்படையே பதஞ்சலி முனிவர் அருளியவைதான் என்று போற்றுகின்றனர் ஞானிகள். அப்பேர்ப்பட்ட ஞானமுனி பதஞ்சலிக்கு இந்தக் கோயிலில், திருச்சமாதி உள்ளது. அதாவது, பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசித்துவிட்டு, அதன் பிறகு நாம் பதஞ்சலி முனிவர் அதிஷ்டானத்தைத் தரிசிக்கவேண்டும். அந்தத் திருச்சுற்றுப் பகுதியில், எதிரிகள் தொல்லை ஒழியவும் கண்ணேறு களையவும் எடுக்கிற செயல்கள் அனைத்திலும் உடன் இருக்கவும் வீட்டில் தீய சக்தி அண்டாமல் பாதுகாக்கவும், இல்லத்திலும் உள்ளத்திலும் எப்போதும் ஒளி கொடுக்கவும் சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் காரணமாகத் திகழும் சப்தமாதர்களும் காட்சி தருகிறார்கள்.

  பதஞ்சலி முனிவருக்கு, அவர் சிந்தனைக்கு ஈடான ஒரு முனிவர் நண்பராகக் கிடைத்தார். அவர்... வியாக்ரபாதர். இருவரும் இணையற்ற நண்பரானார்கள். காட்டிலும் மலையிலுமாக கடும் தவம் மேற்கொண்டார்கள். தில்லையம்பதி என்று போற்றப்படுகிற சிதம்பரம் திருத்தலத்தில், இவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்து, தன் திருநடனத்தையும் ஆடிக்காட்டியதைப் புராணம் அழகுறச் சொல்லியிருக்கிறது. ஒருகாலத்தில், மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த இந்த வனப்பகுதியில், பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அனுதினமும் சிவபூஜை செய்தார்கள். கண் மூடி தவமிருந்தார்கள். பர்ணசாலை அமைத்து, மௌனம் அனுஷ்டித்தார்கள். யோகிகள் தவமிருந்த பூமி எனும் சிறப்பும் கொண்ட இந்தத் தலத்தில், அமானுஷ்யங்களும் அதிசயங்களும் பக்தர்களுக்கு சத்விஷயங்களாக இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றன.

 பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் அருகில், ஒரு பத்துநிமிடம் அமைதியாகக் கண்மூடி உட்காருங்கள். தெளியாத மனமும் தெளியும். தீராத பிரச்னையும் தீரும். உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.

  பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. பயணித்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையலாம். சிறிய அதேசமயம் அழகான கோயில். உள்ளே நுழைந்ததும், வியாக்ரபாதர் திருச்சமாதியைத் தரிசிக்கலாம். அங்கே பிரம்மா கோயிலில் பதஞ்சலி முனிவர் சமாதி. இங்கே, வியாக்ரபாதரின் திருச்சமாதி. மனித உடலும் புலியும் கால்களும் கொண்ட வியாக்ரபாதர், தன் காலால் உண்டு பண்ணிய திருக்குளம் அருகில் உள்ளது. காசிக்கு நிகரான ஆலயம். கங்கைக்கு நிகரான திருக்குளம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

   திருப்பட்டூர் வருபவர்கள், முதலில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, வியாக்ரபாதர் தீர்த்தக்குளத்தில் கால் அலம்பிவிட்டு, சிவனாரைத் தரிசிக்கவேண்டும். முடிந்தால், காசிவிஸ்வநாதருக்கு வஸ்திரமும் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்குப் புடவையும் சார்த்தி மனதார வேண்டிக் கொண்டால், அதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள், நம் பரம்பரையில் உள்ள பித்ருக்கள் சாபம் முதலானவை நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

 அடுத்து, வியாக்ரபாதரின் அதிஷ்டானத்துக்கு வந்து, ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து, கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். பிறகென்ன... உங்கள் மூதாதையர்கள் அனைவரின் ஆசீர்வாதம் முழுவதும் கிடைக்கப்பெறுவீர்கள்.

  காசி விஸ்வநாதர் ஆலயம், காசியம்பதிக்கு நிகரான திருத்தலம் என்று போற்றப்படுகிறது. அதேபோல் கோயிலின் தீர்த்தம் கங்கைக்கு இணையான தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

  காசிக்கு நிகரான ஆலயம், கங்கைக்கு நிகரான தீர்த்தம் என்றானது எப்படி?

  காசியில் உள்ள லிங்கத் திருமேனியைப் போலவே, இங்கே பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பூஜித்து வந்தார் வியாக்ரபாதர். கோயிலுக்கு வடக்கே இருந்த குளத்தில் ஒருநாள்... தண்ணீர் வற்றிப் போகவே, அபிஷேகத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

  அப்போது... திருஆனைக்கா என்று இப்போது நாம் சொல்கிற தலத்து இறைவனை அனுதினமும் கங்கை நீர் கொண்டு அபிஷேகித்து வந்தது ஐராவதம் யானை. அந்த யானை காசியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு பறந்தபடி திருஆனைக்காவுக்கு வருவதை, தினமும் பார்த்த வியாக்ரபாதர், அன்றைக்கு அபிஷேகத்துக்கு நீர் இல்லாத நிலையில், அந்த யானையிடம், ‘கொஞ்சம் தண்ணீர் கொடேன். நித்தியப்படி அனுஷ்டானத்தை இன்றைக்கு செய்வதற்கு தண்ணீர் இல்லை குளத்தில். கொஞ்சம் தண்ணீர் தந்து உதவினால், என் பூஜையும் சிறப்புற நடந்துவிடும்’ என்றார். ஆனால் யானையோ, ‘எனக்கே நிற்கக் கூட நேரமில்லை. நீங்கள் வேறு இடையே பேச்சு கொடுக்கிறீர்களே...’ என்று சொல்லிவிட்டு, இன்னும் வேகமெடுத்துப் பறந்தது. முனிவருக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட தரவில்லை.

  அதுவரை தவித்து சோகமாய் நின்ற வியாக்ரபாதர், ஆவேசமானார். பொங்கி எழுந்தார். வானம் பார்த்தார். பூமியை நோக்கினார். ‘என் தலைக்கு மேலே கங்கையின் தண்ணீரை யானை எடுத்துச் செல்கிறது. ஆனால் காசிவிஸ்வநாதருக்கு கங்காதீர்த்தம் மட்டுமின்றி அபிஷேகத்துக்குக் கூட தண்ணீர் இல்லை. இதோ... சிவனாரை நான் பூஜித்து வணங்குவது உண்மையெனில், இங்கே ஒரு குளம் உருவாகட்டும். அதில் கங்கா தீர்த்தம் நிரம்பட்டும்’ என்று சொல்லிக்கொண்டே, தன் புலிக்காலால் பூமியை ஓங்கி உதைத்தார். அந்த நிமிடமே, பூமியில் இருந்து ஊற்றெனக் கிளம்பிப் பீரிட்டது கங்கை நீர். மகிழ்ந்த வியாக்ரபாதர், ஆனந்தக் கூத்தாடினார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சொல்லி, தண்ணீரை எடுத்து தண்ணீரிலேயே மூன்று முறைவிட்டார். ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளாலும் எடுத்து, அப்படியே தண்ணீரில் விட்டார். பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, அன்றைய பூஜையைத் துவக்கினார்.

  இதோ... அவர் உருவாக்கிய திருக்குளம் இன்றைக்கும் இருக்கிறது. அந்த குளத்து நீரில் கால் அலம்பிவிட்டு, தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டால், நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்! 

  காசி விஸ்வநாதரையும் பிரம்மபுரீஸ்வரரையும் வணங்கிவிட்டு, அப்படியே பிரம்மா சந்நிதியில் வந்து நின்று, மனதார வேண்டுங்கள். நம்முடைய விதியை செவ்வனே திருத்தி எழுதியருள்வார் ஸ்ரீபிரம்மா.

இந்தக் குருப்பெயர்ச்சி, குரு பிரம்மாவின் அருளும் குரு பகவானின் அருளும் குரு தட்சிணாமூர்த்தியின் அருளும் கிடைத்து, திருப்பம் தரும் குருப்பெயர்ச்சியாக அமையட்டும். அமையும்! 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close