[X] Close

நாளை… பரணி தர்ப்பணம்; தானம் பண்ணுங்க! குடை, உடை, போர்வை, உணவு கொடுங்களேன்!


barani-tharppanam

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Sep, 2018 16:32 pm
  • அ+ அ-

மகாளய பட்ச புண்ணிய காலத்தில், பரணி தர்ப்பண நாள் நாளைய தினம் (28.9.18 வெள்ளிக்கிழமை). எனவே நாளைய தினம் ரொம்பவே மகத்துவமானது. இந்தநாளில், முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வதுடன், யாருக்கேனும் ஏதேனும் தானம் வழங்குங்கள்.

புரட்டாசி பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான நாட்கள் மகாளயபட்ச காலம் எனப்படும். இந்த 15 நாட்களும் முன்னோருக்கான நாட்கள். பித்ருக்கள் எனப்படும் முன்னோரை வணங்கவேண்டிய தினங்கள்.

இந்த 15 நாட்களும் தினமும் மகாளய தர்ப்பணம் செய்வதும் ஆச்சார்யப் பெருமக்களுக்கு தட்சணை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்கிறது சாஸ்திரம்.

தை அமாவாசை போல, ஆடி அமாவாசை போல புரட்டாசி அமாவாசையும் விசேஷமானது. குறிப்பாக புரட்டாசி அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களும் முன்னோர்கள், நாம் அவர்களை நினைக்கிறோமா, அவர்களை வணங்குகிறோமா என்றெல்லாம் நம் வீட்டுக்கே சூட்சுமமாக வந்து பார்ப்பார்களாம்.

இந்த நாளில், அவர்களும் எள்ளும்தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்து, அவர்களுக்கு உணவும், தாகத்துக்குத் தண்ணீரும் வழங்கவேண்டும். அது அவர்களைச் சென்றடையும் என்கிறது தர்மசாஸ்திரம்.

அமாவாசையே நன்மை மிக்கது. அதிலும் மகாளயபட்ச காலம் இன்னும் மகோன்னதமானது. அதைவிட… மகாளயபட்ச காலத்தில் பரணி நட்சத்திரம் வருகிற நாளில் தர்ப்பணம் செய்வது, நம் ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியங்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பரணி நட்சத்திரம் என்பது, யமதரும ராஜாவின் நட்சத்திரம். எனவே இந்தநாளில் செய்யும் தர்ப்பணத்தை முன்னோர் மனமுவந்து பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவார்கள். அதேபோல யாருக்கேனும் குடை, செருப்பு, உணவுப் பொட்டலம், போர்வை, உடை என ஏதேனும் வழங்கினால், பித்ருக்களின் சாபம் நீங்கப் பெறலாம். அவர்கள் மோட்சகதியை அடைவார்கள்.

எனவே நாளை வெள்ளிக்கிழமை 28.9.18 அன்று பரணி தர்ப்பணம் செய்யுங்கள். யாருக்காவது உணவு வழங்குங்கள். வயதானவர்களுக்கு குடை வழங்குங்கள். தாய்மார்களுக்கு புடவை வழங்குங்கள். சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை வழங்குங்கள். உங்கள் குடும்பத்தின் வறுமை விலகும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும். நிம்மதி தவழும். அமைதி குடிகொண்டிருக்கும். ஆனந்தம் எப்போதும் நிரந்தரமாக இல்லத்தில் வீற்றிருக்கும். உங்கள் குழந்தைகள், செழிப்புடனும் சிறப்புடனும் வளர்வார்கள்; வாழ்வார்கள்.  

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close