[X] Close

கொழுக்கட்டை செய்வது எப்படி?


kozhukkattai

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Sep, 2018 07:38 am
  • அ+ அ-

பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக்கட்டை. பிள்ளையாருக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான் பிடிக்கும் கொழுக்கட்டை.

விநாயகருக்கு உகந்த நாள் இன்று. விநாயக சதுர்த்தி. இந்த நன்னாளில், எல்லார் வீடுகளிலும் மண் பிள்ளையார் வைத்து வழிபடுவது நடக்கும். அதேபோல், சுடச்சுட, சுவைக்கச் சுவைக்க கொழுக்கட்டை நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

சரி… கொழுக்கட்டை செய்வது எப்படி? விளக்குகிறார் சென்னை நங்கநல்லூர் ருக்மணியம்மாள்.

முதலில் அரை கிலோ பச்சரிசியை கழுவி நன்றாக நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உலர்ந்ததை மெஷினில் கொடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை உலர்த்தி ஒரு டப்பாவில் அடைத்து பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். வேறு ஒன்றுமில்லை. எப்போது தேவையோ அப்போது உடனே சில நிமிடங்களில் கொழுக்கட்டை ரெடி பண்ணிவிடலாம்.

இதெல்லம் மேல்பகுதிக்குத் தயார் செய்யப்படுபவை. உள்ளே பூரணம்தான் கொழுக்கட்டையை, அந்தச் சுவையைத் தூக்கித் தரவல்லவை. அந்தச் சூரணம் எப்படிச் செய்ய வேண்டும்?

ஒரு முழு தேங்காயைத் துருவி கொள்ளவும்.  ஒரு கப் எள்ளை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து வைக்கவும். கால் கிலோ வெல்லத்தை நன்றாகப் பொடிக்கவும். முதலில் எள் மற்றும் தேங்காய்த் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றவும். இரண்டும் ஒன்றிரண்டாக பொடிந்த பின், வெல்லத்தைச் சேருங்கள். நீர் எதுவும் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றவும். இப்போது இனிப்புக் கலவை தயார். அதாவது சூரணம் ரெடி. இதில் ஏலக்காய் சேர்த்துக்கொண்டால், இன்னும் மணக்கும். சுவைக்கும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேவையான அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கிளறுங்கள். மாவு மூழ்கும் அளவுக்கு நீரை நன்றாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மூழ்கும் அளவுக்கு சேர்த்தால் போதும் அதிகப்படியான நீர் வேண்டாம். கிளறிய மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக உருட்டி, நடுவில் குழிபோல செய்து அதனுள் இனிப்புக் கலவையை, சூரணைத்தை நிரப்புங்கள். இப்படி தேவையான உருண்டைகளை செய்து வைக்கவும்.

பின்னர், செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வேக வைக்கவும்.

ஐந்தாவது நிமிடம்… ஐந்துகரத்தானுக்குப் பிடித்த கொழுக்கட்டை ரெடி.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close