[X] Close

உங்கள் கணவருக்காக... உங்கள் தாலிக்காக... வரலட்சுமி பூஜை விரதம்! 


varalakshmi-pooja

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Aug, 2018 18:11 pm
  • அ+ அ-

நாளை, 24ம் தேதி வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம். வருடாவருடம் வரலக்ஷ்மி பூஜை வந்தாலும், எப்போதும் எல்லோருக்கும் இதில் சில குழப்பங்களும் தயக்கங்களும் இருக்கின்றன.   வரங்கள் தந்தருளும் வரலட்சுமி விரதத்தை யாரெல்லாம் மேற்கொள்ளவேண்டும் என்கிற குழப்பமும் நிறைய பேருக்கு இருக்கிறது. இதுகுறித்து சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார் விளக்குகிறார். 


 கல்யாணமாகி, தன் கணவர் வீட்டுக்கு வருகிறார் ஒரு பெண். அங்கே, கணவர் வீட்டில், வரலட்சுமி பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இதுவரை பிறந்தவீட்டில் செய்யாத பெண், புகுந்த வீட்டில் பூஜையைச் செய்வதற்கு என்ன மேற்கொள்ளவேண்டும்?
  முதல்கட்டமாக, அதாவது கல்யாணமான வருடத்திலேயே, அம்மன் திருமுகம் கொண்ட கலசத்தை சீராகப் பெற வேண்டும். அந்த அம்மன் கலசத்தைக் கொண்டு, மாமியார் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சேர்ப்பித்து, நமஸ்கரித்து ஸ்ரீவரலட்சுமி பூஜையை, நோன்பை, விரதத்தைத் துவக்கவேண்டும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் பாலாஜி வாத்தியார். .


  ‘அடடா... வீட்டில் பிறப்போ அல்லது இறப்போ என தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்வது?’ என்று சிலர் கேட்கலாம். பூஜை நாளில் தீட்டு முதலானவை வந்தால் என்ன செய்வது? அந்த வருடம் பூஜை செய்யக் கூடாது. அதையடுத்து ஆடி மாதத்தில் வரலட்சுமி பூஜையானது அடுத்த வருடம்  வந்தால் அப்போதும் பூஜை செய்யக் கூடாது. மாறாக, சிலசமயங்களில் ஆவணி மாதத்தில் வந்தால்,  அப்போது தாராளமாக பூஜை மேற்கொள்ளலாம்.


  நிறையபேருக்கு மற்றுமொரு குழப்பமும் இருக்கிறது. கலசம் ஒரேயொரு கலசம்தான். அந்தக் கலசத்தைக் கொண்டு, பலரும் சேர்ந்து வரலட்சுமி விரத பூஜையைச் செய்யலாமா என்று கேட்கிறார்கள்.
 இது எல்லோருக்கும் வருகிற குழப்பம்தான். சுமங்கலிகள் ஒரே இடத்தில் கூடுவதே மிகப்பெரிய நல்லதொரு அதிர்வை அங்கே உண்டு பண்ணும் என்கிறார்கள் ஆன்றோர்கள். ஆகவே சுமங்கலிப் பெண்கள் சிலர், ஒன்றாகச் சேர்ந்து, ஒரேவீட்டில், ஒரே இடத்தில் பூஜை செய்வது சிறந்ததுதான். உன்னதமானதுதான்.


ஆனால் அந்த பூஜையில், ஒரு குழுவாக எல்லோரும் உட்கார்ந்திருந்தாலும் அனைவருமே தனித்தனியே சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதேபோல், அர்ச்சனையாகட்டும், நைவேத்தியமாகட்டும் எல்லாமே தனித்தனியே வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்கிறது ஐதீகம். 


 முக்கியமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு கலசம். அதாவது தனித்தனியே கவசம் வைத்து, அம்பாள் வரைந்து பூஜிக்கவேண்டும். ஒரே கலசத்தில் ஒரேயொரு பூஜை என்றும் ஒரேயொருவர் மட்டுமே பூஜை செய்தார் என்பதாக மட்டுமே பார்க்கப்படும்.
அடுத்து, கையில் கயிறு கட்டிக் கொள்வதிலும் குழப்பம் இருக்கிறது நிறையபேருக்கு. வலது கையில்  கட்டிக் கொள்ளவேண்டுமா அல்லது இடது கையில் கட்டிக் கொள்ளவேண்டுமா என்று கைபிசைந்து தவிப்பார்கள் பெண்கள்.  பொதுவாக, ஆண்கள் வலது கையில் ரக்ஷை கட்டிக்கொள்ளவேண்டும். பெண்கள் இடது கையில் கட்டிக் கொள்ளவேண்டும் என்பதே வழக்கம். ஆனாலும் வரலட்சுமி பூஜை மற்றும் விரதத்தில் இருக்கிற பெண்கள், மட்டும் தங்களின் வலது கையில் ரக்ஷையை கட்டிக் கொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
முன்னதாக, வரலட்சுமி பூஜை செய்யும்போது, ஒரு மஞ்சள் கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு, நடுநடுவே உதிரிப் பூக்களை வைத்துக் கட்டி, அந்த சரடை, அம்பிகையின் அருகில் பூஜையில் வைத்துவிடுங்கள். பூஜை நிறைவடைந்ததும் அந்த ரக்ஷையானது, மகாலட்சுமியின் பிரசாதமாக மாறிவிடுகிறது. இதுதான், உங்கள் கணவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் மந்திரக்கயிறு. உங்களுக்கு தாலி பாக்கியம் வழங்கும் மகோன்னதக் கயிறு. 


 அந்த ரக்ஷையை, கணவரிடம் கொடுத்து, கையில் கட்டிக் கொள்ளவேண்டும். கணவர் அருகில் இல்லை. வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறார் என்றால், தன்னைவிட வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களிடம் கொடுத்து, கட்டிக் கொள்வதே உத்தமம். கன்னிப்பெண்களுக்கு, அம்மாவோ பாட்டியோ ரக்ஷை கட்டிவிடலாம்.


 முக்கியமான விஷயம்... கர்ப்பிணியாக இருக்கும் போது, இந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாமா என்று சந்தேகம் வருகிறதுதானே. சுமங்கலிகளும் கர்ப்பிணிகளும் தாராளமாக வரலட்சுமி பூஜையில் விரதம் அனுஷ்டிக்கலாம். பூஜை செய்யலாம். ஒருவேளை பிரசவத்துக்காக பிறந்தவீட்டுக்கு வந்திருக்கும் வேளையில், வரலட்சுமி பூஜை வந்தால், பிறந்த வீட்டில் தரப்பட்ட அம்மன் திருமுகத்தையும் கலசத்தையும் புகுந்த வீட்டில் இருந்து எடுத்து வந்து, பூஜை செய்து வழிபடலாம். சுகப்பிரசவம் நிகழும். தெய்வகடாட்சம் பொருந்திய குழந்தை பிறக்கும். 
இவ்வாறு பாலாஜி வாத்தியார் தெரிவித்தார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close