[X] Close

வாஸ்து நாள் இன்று! ஐஸ்வர்யங்கள் குடியேறட்டும்!


vaasthu-day

வாஸ்து பகவான்

  • வி.ராம்ஜி
  • Posted: 22 Aug, 2018 09:12 am
  • அ+ அ-

வாஸ்து பூஜை செய்ய  இன்று உகந்த நாள். வீட்டின் மாடிப்படி அமைக்கவும் நிலைவாசல் வைக்கவும் வீட்டின் கிரகப்பிரவேச வைபவம் நிகழ்த்தவும் அற்புதமான நாள் இன்று!

‘வீடெல்லாம் கட்டி பல வருஷமாச்சு’ என்பவர்கள், ‘அட... வாடகை வீட்லதான் இருக்கோம்’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள். இன்று மாலையில், வீட்டைச் சுத்தம் செய்து, தண்ணீரால் கழுவுங்கள் அல்லது துடைத்துவிடுங்கள். பிறகு சுவாமிபடங்களுக்கு பூ அல்லது மாலை அணிவித்து, விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலிலும் விளக்கேற்றி வழிபடுங்கள். எல்லா ஐஸ்வர்யங்களும் உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்து, உங்கள் வீட்டு உறுப்பினர்களாகவே மாறி, உங்களுடனேயே தங்கிவிடும் என்பது உறுதி.

புதுமனைப் புகுவிழா நடத்தவும் கிரகத்தில் உண்டான அதாவது வீட்டில் உண்டான தோஷங்கள் விலகவும் வாஸ்து பகவானை நினைத்து பூஜைகள் செய்யவும் உரிய நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்பார்கள். கல்யாணம் எனும் வைபவம் நடப்பதற்கு குருவருள் தேவை. அதேபோல் வீடு அமைவதற்கு வாஸ்து பகவானின் பேரருள் மிக மிக அவசியம்.

இறையருளும் குருவருளும் இருந்தால்தான், வாஸ்து பகவானின் அருளும் கிட்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சொந்த வீடா, வாடகை வீடா என்பது முக்கியமில்லை.நாம் இருக்கும் வீட்டில், வாஸ்து பகவானின் ஆட்சியும் நம் எண்ணங்களுமே குடியிருக்கின்றன. ஆகவே நம் எண்ணங்களை நாம் சரிவர வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், வாஸ்து பகவானை ஆராதிக்கவேண்டும்.

மிகப்பெரிய பங்களா கட்டி குடியிருப்பார்கள் சிலர். ஆனால் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு, எப்போது பார்த்தாலும் நோய், சிகிச்சை என்று வாழ்க்கை சிக்கலாகவும் குழப்பமாகவும், நிம்மதி இல்லாமலும் ஆரோக்கியம் இல்லாமலும் இருக்கும். இப்படி இம்சித்துக் கொண்டே இருந்தால், வாஸ்து பகவானை அங்கே குளிரப்படுத்தவில்லை. சாந்தப்படுத்தவில்லை என்று அர்த்தம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

இன்று 22.8.18 வாஸ்து பகவானுக்கு உரிய நாள். வாஸ்து தோஷம் கழிப்பதற்கு சிறப்பான நாள். எனவே, வீட்டை சுத்தப்படுத்துங்கள். ஒட்டடை அடித்து, வீடு கழுவிவிட்டு, சாம்பிராணி புகையிட்டு தூப தீபம் காட்டுங்கள். மாலையில் விளக்கேற்றுங்கள். பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றிவையுங்கள். 

வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் முதலான தெரிந்த ஸ்லோகங்களைப் பாடிப் பாராயணம் செய்யுங்கள். வீட்டில் உள்ள எட்டுத் திசைகளிலும் தூபதீபம் காட்டி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, காகத்துக்கு வழங்குங்கள்.

வாடகை வீடோ... சொந்த வீடோ... உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழச் செய்வார் வாஸ்துபகவான்!

முடிந்தால், உச்சி வெயில் வேளையில், மதிய உணவுக்கு முன்னதாக, எலுமிச்சையால் வீட்டை திருஷ்டி சுற்றி, நாலாதிசையிலும் எலுமிச்சையைப் போடுங்கள். வீட்டில் இருந்த கண் திருஷ்டி விலகிவிடும். அடிக்கடி வந்து இம்சை செய்த நோய்த் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத இந்த வாஸ்து நாளில், மாலை 3.18 முதல் 3.54 மணி வரையிலான வாஸ்து நேரத்தில், வீட்டில் தூபதீப நறுமணம் கமழ, வாஸ்து பகவானை வேண்டுவோம். வளமுடன் வாழ்வோம். திருஷ்டியெல்லாம் கழிந்து, கெட்டசக்திகளெல்லாம் களைந்து நல்லனவெல்லாம் நடந்தே தீரும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close