[X] Close

கடவுளின் தேசத்துக்காக பிரார்த்திப்போம்!


kerala-floods

கேரள வெள்ளம் - மீட்புப்பணி

  • வி.ராம்ஜி
  • Posted: 18 Aug, 2018 12:20 pm
  • அ+ அ-

கேரளாவின் அழகில் சொக்கிப்போகாதவர்களே இல்லை. பசுமையைக் காப்பதில் கேரள மக்களே முன்னுதாரணம். கல்வியில், உழைப்பில், சுறுசுறுப்பில், ஒற்றுமையில் என சகலத்திலும் உதாரணத்துடன் திகழும் கேரள மக்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து தவிக்கின்றனர். எவரேனும் கைதூக்கிவிடமாட்டர்களா, உதவிக்கரம் எங்கிருந்தாவது நீளாதா என்று பரிதவித்துக் காத்திருக்கிறது கேரளம்.

மலையாள தேசம் மழையாளும் தேசமாகி, மொத்தமாக சிதைந்துவிட்டது. மலையும் மலைசார்ந்த பகுதிகளுமாகத் திகழும் கேரளத்தில் மலைச்சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லமுடியாத துயரம் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு தீவு போல் மலையழகுடன் திகழும் கேரளம், இன்றைக்கு ஒவ்வொரு ஊரும் தனித்தனித் தீவுகளாக தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது. மண்ணையே நம்பி வாழ்பவர்கள் அவர்கள். மரத்தையும் காய்களையும் கனிகளையுமே உழைப்பும்பிழைப்புமாகக் கொண்டிருப்பவர்கள். வீட்டைச் சிறிதாக்கி, சுற்றிலும் தோட்டம் போட்டு வைப்பதில் நாட்டம் கொண்டிருப்பவர்கள். இன்றைக்கு, வீடும் போய், தோட்டமும் போய், நிலமும் போய், நிர்க்கதியாக முகாம்களில் துக்கித்துக் கிடக்கிறார்கள்.

அரசு இயந்திரம், எந்திரத்தனமாக அல்லாமல், முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு, நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கிறது. உலகின் எங்கிருந்தெல்லாமோ உதவிக்கரங்கள், கண்ணீரைத் துடைக்கவும் தண்ணீரில் இருந்து காக்கவுமாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், சமூகவலைதளங்களில்!

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பார்கள். கடவுளின் தேசம் என்று கேரளத்தைச் சொல்லுவார்கள். பிரார்த்தனைக்கு மிஞ்சிய சக்தி ஏதுமில்லை என்பதுதான் எல்லா மாநில மக்களின் ஒருமித்த சிந்தனை. மருந்து, மாத்திரை, சிகிச்சை, ஆபரேஷன் என எல்லா செயல்களிலும் ஈடுபடும் மருத்துவர்களே கூட, ‘எங்க கையில ஒண்ணுமில்ல. கடவுளைப் பிரார்த்தனை பண்ணிக்கோங்க’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். சொல்லக் கேட்டிருப்போம்.

திக்கற்றுக் கிடக்கும் கேரள மக்களுக்காக, கடவுளின் தேசமான கேரளத்துக்காக, கேரள மாநிலத்துக்காக, அந்த அன்பு நிறைந்த மக்களுக்காக, மனதாரப் பிரார்த்தனை செய்வோம்! நம் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக்கொள்வோம். குலசாமியிடம் படையலிட்டு பிரார்த்தனை செய்வோம்.

கேரளம் பழையபடி சகஜ நிலைக்கு வர, இயற்கை அன்னையையும் இறைவனையும் மனதாரப் பிரார்த்திப்போம்! மாலையில் கேரள மாநிலத்துக்காகவும் கேரளத்து சகோதர சகோதரிகளுக்காகவும் விளக்கேற்றி, வேண்டுவோம்.

இந்த நிலையிலிருந்து சீக்கிரமே மீண்டு வரும் சக்தி, அவர்களுக்கு உண்டு. அத்தனை அசுர உழைப்பு அவர்களிடம் இருக்கிறது. இப்போதைய தேவையான மன உறுதியை அவர்களுக்கு வழங்க, ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வோம்.

இப்போது புரட்டிப்போட்ட நிலையில் இருக்கிற கேரளம், புதுப்பொலிவுடன் அழகு கூட்டி மீண்டும் இயற்கையை ஆராதித்து, இயற்கை வளங்களை அரவணைத்து, இன்னும் இன்னுமாக முன்னுக்கு வரும்!

அப்படி முன்னுக்கு வருவதற்காக, இப்போது நம் பிரார்த்தனையை, நம் சிந்தனை மொத்தத்தையும் கேரள நலனுக்காக பிரார்த்தனையில் ஒன்றுகுவிப்போம்!  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close