[X] Close

அமாவாசையில் பிறந்தால் திருடனா?


jodhidam-arivom2-55

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 14:58 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 55: 

இதுதான் இப்படித்தான்! 

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. 
திதி சூன்யம்-  இதைப்பற்றித்தான் பார்த்து வருகிறோம். சென்ற பதிவில் யார்யார் எந்த திதியில் பிறக்கிறார்களோ, அவர்களுக்கு எந்தெந்த ராசிகள் சூன்யமாகும் என்பதைப்  பார்த்தோம். 

இப்போது திதி சூன்ய விலக்கு, அதாவது திதி சூன்யம் விலகுவது எப்படி என பார்ப்போம். 

திதி சூன்ய ராசிகள் லக்னத்திற்கு 6,8,12 ஆக வந்தால், அதாவது 6ம் வீட்டில், 8ம் வீட்டில், 12ம் வீட்டில் வந்தால், பாதிப்பில்லை என்று பார்த்தோம்.  இன்னும் சொல்லப்போனால் நன்மைகளே நடக்கும் என்பதையும் விளக்கியிருந்தேன். 

வேறு என்னென்ன வகையில் திதி சூன்யம் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். 

திதி சூன்ய ராசியின் அதிபதி 6,8,12 என மறைவு ஸ்தானங்களில் அமர்ந்தாலும், குரு பார்வை பெற்றாலும், நீசம் அடைந்தாலும், உச்ச வக்ரம் அடைந்தாலும், அஸ்தங்கம் எனும் அஸ்தமனம் அடைந்தாலும் இந்த திதி சூன்யம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

உங்களுக்கு புரியும்படியாக இன்னும் எளிமையாகவே சொல்கிறேன். 

உங்கள் லக்னம் மேஷம் என வைத்துக்கொள்வோம். நீங்கள் பிரதமை திதியில் பிறந்ததாக வைத்துக்கொள்வோம். பிரதமையின் திதி சூன்யம் துலாம் மற்றும் மகரம் ஆகும்.  

மேஷ லக்னத்திற்கு துலாம் 7ம் இடமாகவும், மகரம் 10 ம் இடமாகவும் வரும். 

இதில் 7ம் அதிபதி சுக்ரன். எனவே திருமணத்தில் தாமதம், திருமணம் ஆனாலும் மண வாழ்வில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். 
ஆனால் இந்த சுக்ரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தாலும், குரு பார்வை பெற்றாலும், உச்சவக்ரம் (சுக்ரன் மீன ராசியில் உச்சம் அடைவார்) அடைந்தாலும், சூரியனோடு மிக நெருங்கி வந்து அஸ்தமனம் அடைந்தாலும்,( ராகு கேது நீங்கலாக, எல்லா கிரகங்களும் குறிப்பிட்ட டிகிரியில் சூரியனை நெருங்கும்போது அஸ்தமனம் என்னும் நிலை அடைந்து தன் பலத்தை முற்றிலும் இழக்கும்) சுக்ரன் தன் திதி சூன்யத்திலிருந்த விடுபட்டு நன்மைகளைத் தருவார், நல்ல வாழ்க்கைத்துணை அமையும். 

அடுத்து 10ம் இடமான மகரத்தை பார்க்கலாம்.  10 ம் இடம் என்பது தொழில் ஸ்தானம். இந்த பத்தாமிடத்து அதிபதி சனி,  பத்தாமிடம் திதி சூன்யமாக தொழில் வளர்ச்சி தராது. தொழில் நசிந்து போகும். ஆனால் இந்த சனி பகவான் நீசமடைந்தாலும், உச்சவக்ரம் அடைந்தாலும், 6,8,12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும்,குரு பார்வை பெற்றாலும், சூரியனோடு இணைந்து அஸ்தமனம் அடைந்தாலும் பிரச்சினை ஏதும் இல்லாமல் தொழில் நன்றாக இருக்கும்.

இது போல் மற்ற திதிகளுக்கும் பாரக்கப்படவேண்டும். 

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் திதி சூன்யம் கிடையாது. 
அமாவாசையில் பிறந்தால் திருட்டு புத்தி இருக்கும் என்கிறார்களே  இது உண்மையா?  நிச்சயமாக இல்லை! அமாவாசையில் பிறந்த பல பேர் ஆராய்ச்சி நிபுணர்களாகவும், மருத்துவர்களாகவும், பெரும் தொழில் அதிபர்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.  

அமாவாசையில் பிறந்தவர்கள் செய்யும் சின்னச்சின்ன பிழைகள் மற்றவர் கண்களுக்கு தெரியாது, உதாரணமாக தேர்வுகள் ஏதும் எழுதும் போது தவறான விடை எழுதியிருப்பார்கள். விடைத்தாள் திருத்துபவருக்கு அந்தத் தவறு தெரியாது. அந்த தவறான விடைக்கும் மார்க் போட்டுவிடுவார். இதுதான் நடக்குமே தவிர, திருடர் ஆவார் என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படிப் பார்த்தால் சிறையில் இருப்பவர்கள், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோரும் அமாவாசையில் பிறந்தவர்களா என்ன!? 

இதே போல் பௌர்ணமியில் பிறந்தவர்கள், ஆபத்தில்லாத, பாதிப்பில்லாத சிறிசிறு பொய்களை பேசுபவர்களாக இருப்பார்கள். அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது, அதே போல் வதந்தி பரப்புபவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அறிவும் முகப்பொலிவும் உடையவர்கள், 

சரி இப்போது திதி சூன்யம் விலக ஏதாவது பரிகாரங்கள் இருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். 
இருக்கிறது ... ! கீழ்கண்ட பரிகார தெய்வங்களை வணங்கிவந்தால், தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். 

திதி தேவதைகள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)

1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2. துவிதியை - பிரம்மா
3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
6. சஷ்டி - செவ்வாய்
7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி - காலபைரவர்
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - மகா விஷ்ணு
13. திரயோதசி - மன்மதன்
14. சதுர்த்தசி - காளி
15. பெளர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

1. பிரதமை - துர்கை
2. துவிதியை - வாயு
3. திரிதியை - அக்னி
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - நாகதேவதை
6. சஷ்டி - முருகன்
7. சப்தமி - சூரியன்
8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - சுக்ரன்
13. திரயோதசி - நந்தி
14. சதுர்த்தசி - ருத்ரர்
15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் திதி சூன்யம் இல்லை என சொல்லிவிட்டு அதற்கும் தெய்வங்களை குறிப்பிட்டு இருக்கிறீர்களே என கேட்கலாம். இவை அனைத்தும் திதிகளில் பிறந்தவர்களுக்கான தெய்வங்கள். இவர்களை வணங்கிவந்தால் பெரும் நன்மைகள் உண்டாகும். 

அடுத்த பதிவில் திதி நித்யா தெய்வங்களை பார்ப்போம். 
அது என்ன திதி நித்யா? என கேட்பது புரிகிறது.
 இந்த திதி நித்யாக்கள் தான் திதி சூன்யங்களை முற்றிலுமாக நீக்கக்கூடிய தெய்வங்கள்.
- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close