[X] Close

திதி சூன்ய யோகம் உங்கள் ஜாதகத்தில் எப்படி?


jodhidam-arivom2-54

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 11:34 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 54: இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. இந்தப் பதிவில் திதி சூன்யம் எனும் தோஷத்தை பற்றி பார்க்க இருக்கிறோம். 
அது என்ன திதி சூன்யம்? நம்மில் பலருக்கும் நாம் பிறந்த நட்சத்திரம் எது என்று தெரியும். ஆனால், நாம் பிறந்த திதி எது என்று தெரியுமா?
இது என்ன புது தகவலாக இருக்கிறதே... என்கிறீர்கள்தானே. 
பஞ்சாங்கம் என்பது வாரம் (கிழமைகள்), திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என ஐந்து அங்கங்களை உடையது, இதில் நாம் நட்சத்திரம் மட்டுமே பயன்படுத்துகிறோம். வாரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் இவை அனைத்தும் நம்மோடு இரண்டறக் கலந்தது. 
அதாவது, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்,பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்தில்!” 
அதாவது இந்த உலகம் பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் என ஐந்து பூதங்களால் ஆனது. நம்முடைய இந்த உடலும் ஐந்து பூதங்களால் ஆனதுதான்.

வாரம் (கிழமைகள்)- நெருப்பு
திதி - நீர் 
நட்சத்திரம் - காற்று
யோகம் - ஆகாயம்
கரணம் - நிலம்

இந்த ஐந்து அங்கங்களும் குறிப்பிடப்பட்ட நாளில்தான் நாமும் பிறக்கிறோம்.
ஆக மொத்தம் பஞ்சபூதங்களால் நாமும் இந்த அகிலமும் இயக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.
இதில் நாம் இப்போது, குறிப்பிட்ட திதிகளில் பிறப்பதால் உண்டாகும் நன்மைகளும், சில பிரச்சினைகளையும் பார்க்க இருக்கிறோம்.
முதலில் பிரச்சினைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.  
திதி சூன்யம்..... இது மிகமிக கவனிக்கப்படவேண்டிய முக்கிய அம்சம். 
பெரும்பாலான ஜோதிடர்கள்கூட இதை கவனிக்கவோ, முக்கியத்துவம் தருவதோ இல்லை. 
இங்கு நான் தரும் தகவல்களை உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். 
ஒரு குறிப்பிட்ட திதியில் பிறப்பவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் இரண்டு பாவகம்... புரியும்படியாக சொல்வதானால் இரண்டு ராசி கட்டங்கள் செயல் இழந்து போகும். அந்த பாவகம் எத்தனையாவது பாவகம் என பார்த்து அதன் பலன்களை அறிய வேண்டும்.  
உதாரணமாக, 12 லக்னங்களில் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் பிரதமை திதியில் ஒருவர் பிறந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு துலாம் மற்றும் மகரம் வீடுகள் சூன்யமாகிப்போகும்.  அதாவது அந்த வீடுகள் லக்னத்திலிருந்த எத்தனையாவது பாவகமாக வருகிறதோ அந்த பாவகம் தருகின்ற பலன்கள் அந்த ஜாதகருக்கு கிடைக்காது. அல்லது கிடைப்பதில் பெரும் தடை உண்டாகும் அல்லது கிடைத்தாலும் அனுபவிக்க முடியாமல் போகும். 
துலாம், மகரம் என இரண்டு சூன்ய வீடுகளில், துலாம் மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமா?  
 ஜாதகதாரருக்கு, துலாம் வீடு லக்னமாக இருப்பின், ஜாதகர் எல்லா வித்தையும் தெரிந்தவராக இருந்தாலும் எவராலும் கவனிக்கப்படாதவராக, எதற்கும் பயன்படாதவராக இருப்பார். 
லக்னத்தில் இருந்து இரண்டாம் வீடாக துலாம் இருந்தால் பணம் வருவதில் சிக்கல், குடும்பத்தில் அமைதியில்லாத நிலை உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உண்டாகும் (ஹாஸ்டல்வாழ்க்கை). 


லக்னத்தில் இருந்து மூன்றாம் இடமாக துலாம் இருந்தால், சகோதரர்களிடையே ஒற்றுமை இருக்காது.  அவ்வளவு ஏன்... சகோதரர் எனும் உறவு கூட இருக்காது. எந்த முயற்சி எடுத்தாலும் தோல்வியில் முடியும். மிகுந்த பிரயத்தனப்பட்டே காரியங்களை நிறைவேற்றும் நிலை இருக்கும். 


லக்னத்தில் இருந்து நான்காம் இடமாக துலாம் இருந்தால்,  சொந்த வீடு அமையாது. சொந்த வீடு இருந்தாலும் அதில் வசிக்க முடியாது. தாயார் நோய்வாய்பட்டவராக இருப்பார்.

 
லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடமாக துலாம் இருந்தால், புத்திர பாக்கியத்தில் தாமதம், புத்திர சோகம் என்றிருக்கும். குலதெய்வம் தெரியாத நிலை உண்டாகும். 

 
லக்னத்தில் ஏழாம் இடமாக துலாம் இருந்தால், திருமண தாமதம், திருமண வாழ்வில் நிம்மதி இல்லாத நிலை உண்டாகும். நண்பர்களால் ஏமாற்றம் அடைவது, கூட்டுத்தொழிலில் ஏமாறுவது என்ற பிரச்சினை உண்டாகும். 


லக்னத்தில் ஒன்பதாம் இடமாக துலாம் இருந்தால், தந்தையால் எந்த நன்மையும் ஏற்படாது. பூர்வீகச் சொத்தால் எந்த நன்மையும் கிடைக்காது அல்லது அனுபவிக்க முடியாது. 


லக்னத்தால் பத்தாம் இடமாக துலாம் இருப்பின் சொந்தத் தொழில் செய்யக்கூடாது, செய்தாலும் வளர்ச்சி இருக்காது.


லக்னத்தில் 11 ம் இடமாக துலாம் இருந்தால் பெரிய லாபங்கள் ஏதும் கிடைக்காது.  மூத்த சகோதரர் எதிரியாக மாறுவார். 


இந்தப் பட்டியலில் 6, 8, 12 ஆகிய இடங்கள் இல்லையே என்று கேட்கலாம். ஜாதகத்தில் 6,8,12 ஆகிய இடங்களில் திதி சூன்யம் இருந்தால், மிகப்பெரிய நன்மைகள் நடந்தேறும். முக்கியமாக, கடன் இருக்காது. எதிரிகள் இருக்கமாட்டார்கள். வீண் வம்பு வழக்குகள் நிகழாது. தீராத நோய், நாள் பட்ட நோய் என்று வராது. உலகத்தைச் சுற்றும் வாய்ப்புகள் உண்டாகும். 


துலாம் என்கிற ஒரு சூன்ய வீட்டை மட்டுமே பார்த்தோம். இன்னொரு சூன்ய வீடான மகரத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பார்க்கவேண்டும். அதுமட்டுமல்ல திதி சூன்ய வீட்டின் அதிபதிகள் யார்? அவர்களின் நிலை என்ன? அவர்கள் அமர்ந்த வீட்டின் நிலை? என்றெல்லாம் பார்க்கவேண்டும்.  


இப்போது அட்டவணை- 
பிரதமை திதி      - துலாம், மகரம்
த்விதியை             - தனுசு, மீனம்
திருதியை            - மகரம் சிம்மம்
சதுர்த்தி         - கும்பம், ரிஷபம்
பஞ்சமி             - மிதுனம் கன்னி
சஷ்டி           - மேஷம் சிம்மம்
சப்தமி            - தனுசு, கடகம்
அஷ்டமி         - மிதுனம், கன்னி
நவமி              - சிம்மம், விருச்சிகம்
தசமி               - சிம்மம், விருச்சிகம்
ஏகாதசி          - தனுசு மீனம்
துவாதசி         - துலாம் மகரம்
திரயோதசி    - ரிஷபம், சிம்மம்
சதுர்த்தசி       - மிதுனம்,கன்னி, தனுசு, மீனம்
என இந்த திதிக்கு மட்டும் நான்கு வீடுகள் திதி சூன்யமாகும்.
சரி... அமாவாசை, பௌர்ணமி என்னாச்சு? நான் இதுலதான் பிறந்தேன் என்பவர்களுக்கு...
கை கொடுங்கள். உங்களுக்கு திதி சூன்யம் என்பதே இல்லை. 
அதாவது, 12 லக்னங்களில் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும், பிரதமை திதியில் பிறந்தால்தான் இப்படி. மற்ற திதிகளில் பிறந்தால் இந்த விஷயங்கள். அமாவாசை திதியிலும் பெளர்ணமி திதியிலும் பிறந்திருந்தால், திதி சூன்யம் என்பதே இல்லை.  
அமாவாசையில் பிறந்தால் திருடனாக இருப்பார்கள் என்கிறார்களே? இது உண்மையா? என்றுதானே கேட்கிறீர்கள். 
அது அடுத்த பதிவில்...
-  தெளிவோம்

  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close