[X] Close

சஷ்டியில் முருக தரிசனம்; செல்வ கடாக்ஷம் தரும் கோடீஸ்வரர்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 10:04 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

முருகப்பெருமான், நாயகனாகக் குடிகொண்டிருக்கும் திருத்தலத்தில், சகல செல்வங்களையும் வாரி வழங்குகிறார் சிவனார். கோடீஸ்வரர் எனும் திருநாமத்துடன், தரிசனம் தருவது விசேஷம் எனப் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

அந்தத் தலம் திண்ணியம். திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே, கொள்ளை அழகுடன் காட்சி தரும் முருகப்பெருமான், நாம் எண்ணியதையெல்லாம் ஈடேற்றித் தருவார் என்கின்றனர் பக்தர்கள்.

 

சோழர்களால் தழைத்திருந்த காலம் அது. அகண்டு விரிந்த நதியாக, கிளை ஆறுகளாக, சிறு ஓடைகளாக தேசமெங்கும் ஊடறுத்து காவிரிநதியானது விவசாயத்தைப் பெருக்க... ஊருக்கு ஊர் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. சோழப் பேரரசர்களால் பக்தியும் சேர்ந்து பெருகிய உன்னதமான தருணம் அது.

 

தேவர்களின் காலை சந்தியாகாலமாகிய மார்கழி; மாலை ஆடி; இந்த இரண்டு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் கும்பாபிஷேகம், பிரம்மோத்ஸவம் என சோழவள நாட்டில் கோலாகலம் மிகுந்திருக்கும் என்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.

 

அப்படி ஓர் ஊரில் புதிதாக ஒரு சிவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. நல்லதொரு நாளில் திருப்பணிகளும் ஆரம்பமாயின. வெகு தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழச் சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின. கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூரில் செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

 

அதன்படி, அழகிய சிவலிங்கமும் வள்ளி- தெய்வானை தேவியருடனான முருகப் பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டன. வழியில் ஓரிடத்தில் அச்சாணி முறிந்து, வண்டி குடைசாய்ந்தது. தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. வண்டியுடன் வந்த தொழிலாளர்களும் அடியவர்களும் பதறிப்போய் அந்த விக்கிரகங்களைத் தூக்க முயற்சிக்க, அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதை அசைக்க முடியவில்லை. நகர்த்தக் கூடமுடியவில்லை.

 

தங்கள் ஊர் கோயிலில் குடியிருத்தி, நித்தமும் ஆடை- ஆபரணங்கள் பூட்டி, அனுதினமும் நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும். வருடம்தோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும் வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும். தங்கள் தேசமும் வளம் பெறும்... என்கிற கனவுகளோடு ஆசை ஆசையாக அல்லவா அந்த தெய்வ விக்கிரகங்களை அவர்கள் எடுத்துவந்தார்கள்?

 

அதுமட்டுமா? ஓர் ஊரில் கோயில் கட்டுகிறார்கள் என்றால், அங்கே அதன் காரணம் விளக்கப்படும்.

 

‘இதுவொரு புண்ணிய பூமி. தெய்வ சங்கல்பத்தால் இப்படியானதொரு அனுக்கிரகம் இங்கே விளைந்தது என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியோர்களும் கதை கதையாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாக, ஆதியில் இங்கே சின்னதாக ஒரு கோயிலும் இருந்தது; இப்போது இல்லை. நாங்கள் கட்டுகிறோம்.

 

அதன் மூலம், காலம்காலமாக எங்கள் முன்னோரும் நாங்களும் வசித்து வரும் எங்கள் ஊரின் பெருமையை, வெளியே எடுத்துச் சொல்ல முடியும். அதையறிந்து வெளியூர்வாசிகளும் தேசாந்திரிகளும் அதிகம் வருவார்கள். கூட்டம் கூடும். உள்ளூர்க் காரர்களுக்கு வணிகம் பெருகும்...’ இப்படி, வழிபாட்டின் அடிப்படையாக மட்டுமின்றி, வாழ்க்கையின் ஆதாரமாகவும் அமைத்தார்கள், ஆலயங்களை!

 

அந்த அன்பர்களும் தங்கள் ஊரின் பெருமையை வெளிக்காட்ட, தங்களின் வாழ்க்கை வளமாக,  ஓர் ஆலயம் வேண்டும் என விரும்பினார்கள். அதற்காகவே அழகழகாய் தெய்வத் திருமேனிகளைச் சமைத்து வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். ஆனால், இறை சித்தம் வேறுவிதமாக அமைந்தது.

 

கீழே விழுந்த விக்கிரகங்களை அசைக்க முடியாமல் போகவே, அந்த அன்பர்கள் அங்கேயே அழகாக ஓர் ஆலயம் எழுப்பினர். இது இன்னும் சிறப்பானது. தெய்வமே விரும்பி ஓரிடத்தில் குடியேறுகிறது என்றால் சும்மாவா? மிக விசேஷம் பெற்றுவிட்டது அந்த இடம். இன்றைக்கும் அன்பர்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது! அந்தத் தலமே... திண்ணியம்.

திருச்சி- லால்குடிக்கு அருகில், திருச்சியில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஊரின் நடுவே கம்பீரமாக அமைந்துள்ளது ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில். உள்ளே நுழைந்தால், கொடிமரம், மயில்வாகனம், இடும்பன் சந்நிதி, பிராகாரத்தில் தென்மேற்கில் ஸ்ரீஸித்தி கணபதி ஆகியோரைத் தரிசிக்கலாம்.

 

கோயிலில் சிவானாரின் திருநாமம் கோடீஸ்வரர். பெயருக்கேற்ப ஒருமுறை தரிசிக்க கோடி மடங்கு புண்ணியம் வழங்கும் பேரருளாளன். அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீபிருஹன் நாயகி. வரம் வாரி வழங்கும் நாயகி.

அம்மையும் அப்பனும் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்தின் நாயகன், முருகப்பெருமான். மூவரையும் வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமுமாக வாழ்வீர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close