[X] Close

சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் தெரியுமா?


jodhidam-arivom2-53

  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 10:27 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 53 : இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. 
தொடர்ந்து, யோகங்களையும் தோஷங்களையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி திருமண பத்திரிகைகளிலும், நாட்காட்டிகளிலும் பார்க்கும் சித்தயோகம், அமிர்தயோகம் பற்றியும் இதோடு சேர்ந்த இன்னும் இரண்டு யோகங்களான மரணயோகம், பிரபாலாரிஷ்டயோகம் பற்றியும் பார்க்கலாம். 
இந்த யோகங்கள், அன்றைய கிழமை, அன்றைய நட்சத்திரம் இரண்டும் இணையும் போது உண்டாகின்றன. 
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமையும்  உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம்,மூலம் என இந்த நட்சத்திரங்களில் ஒன்று சேர்ந்தாலும் கூட அன்றைய தினம் அமிர்தயோகம் கூடிய நாள். 
அடுத்து... சித்தயோகம். சித்தம் என்றால் விருப்பம். சித்தி என்றால் வெற்றி. எனவே இது நன்மைகள் நடக்கும் யோகம். ஒரு காரியம் தொடங்கும்போது, சித்தயோக நாட்களில் தொடங்கினால், அந்த காரியம் எந்தத் தடையும் இல்லாமல் இனிதே முடியும். புதிய வேலைக்கு முயற்சி தொடங்க, ஒப்பந்தங்கள் கையெழுத்திட, வீடு கட்ட ஆரம்பிக்க, விவசாயப் பணி தொடங்க ,பாதியில் நின்று போன பணிகள் இனிதே முடிய, திருமணம் செய்ய, திருமணப் பேச்சுவார்த்தையை  ஆரம்பிக்க... என அனைத்து சுப காரியங்களையும் இந்த சித்தயோகத்தில் செய்யலாம்.
சித்தயோகமும், அமிர்தயோகமும் திருமண முகூர்த்தத்திற்காக மட்டுமின்றி, எந்தவொரு நல்ல காரியங்கள் துவங்குவதற்கும், செயல்படுத்தவும் என்பதை மறந்துவிடாதீர்கள். 
அமிர்தயோகம்- அமிர்தம் என்றால் உங்களுக்கே தெரியும். அழிவு இல்லாதது அல்லது அழிக்கவே முடியாதது. எனவே, இந்த அமிர்தயோக நாட்களில் செய்யப்படும் எந்தவொரு நல்ல விஷயமும்  நீண்ட காலத்திற்கு தலைமுறைகளை தாண்டி நிலைத்து நிற்கும். 
இந்த அமிர்த யோக நாட்களில் செய்யப்படும் சுப காரியங்களான திருமணம், வளைகாப்பு,சீமந்தம் முதலானவை நல்ல வாரிசுகளைத் தரும். சந்ததியினர், எந்தக் குறையுமின்றி வளருவார்கள். சந்ததியும் வாழையடிவாழையென செழிக்கும். 
நாள்பட்ட நோய்கள் நீங்குவதற்கு, இந்த அமிர்த யோக நாட்களில் மருந்தெடுக்க ஆரம்பித்தால் நோய் விரைவில் நீங்கும். 
புதிய வீடு கட்டினாலும், வாங்கினாலும் தலைமுறைகளாக நீடித்து நிலைத்து இருக்கும், அதேபோல புதிய தொழில் தொடங்கவும் குறிப்பாக உணவு சார்ந்த தொழில், தேநீர் கடை, காய்கறிக் கடை முதலான  எந்தத் தொழிலும் செய்ய ஏற்ற யோகம்... அமிர்தயோகம். 
அனைத்து சுப காரியங்களும் இந்த சித்த-அமிர்த யோகம் வரும் நாட்களில் செய்யலாம்.  
மரண யோகம்  என்று உண்டு தெரியும்தானே. அப்போது எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது.  தவிர்க்க வேண்டிய யோகம்... மரண யோகம்!  
மேற்கண்ட சித்த அமிர்த மரண யோகங்கள் தினசரி காலண்டரிலேயே தரப்பட்டிருக்கும். தினமும் தேதி கிழிக்கும் போதே, அன்றைய யோகம் என்ன என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம், அதனால்தான், இந்த யோகங்கள் பற்றிய அட்டவணையைத் தரவில்லை. 
ஆனால் காலண்டரிலும், தின பத்திரிகைகளிலும் குறிப்பிடாத யோகம்  ஒன்று உண்டு. அது... “பிரபாலாரிஷ்ட யோகம்.” சுருக்கமாக “பாலாரிஷ்டம்.” 
பாலா- குழந்தை, அரிஷ்டம்- அரித்தல்( தேய்தல்) 
இந்த பாலாரிஷ்ட நாட்களில் பிறக்கும் குழந்தை ஆரோக்கியக் குறைபாட்டுடன், தினம்தினம் ஏதாவதொரு ஆரோக்கிய குறையுடன் பெற்றோருக்கு நிம்மதி இல்லாமல் இருக்கச்செய்யும். 
இது ஆயுள் முழுக்க இப்படித்தானா? இல்லவே இல்லை. நிச்சயமாக இல்லை. அந்தக் குழந்தையின் 12 வயது வரை மட்டுமே இந்த பிரச்சினைகள் இருக்கும். அதன் பிறகு தானாகவே இந்த தோஷம் நீங்கிவிடும். ஆனால் 12 வயதிற்குள் “நித்ய கண்டம் பூரண ஆயுசு” என்கிற மாதிரி நிம்மதி என்பதே இல்லாமல் செய்துவிடும். வாட்டி வதக்கியெடுத்துவிடும்.  
சரி... எந்தக் கிழமையும் எந்த நட்சத்திரமும் இணைந்தால் இந்த பாலாரிஷ்ட யோகம் (தோஷம்) உண்டாகிறது என பார்க்கலாம். 
ஞாயிறு - பரணி
திங்கள் - சித்திரை
செவ்வாய் -உத்திராடம்
புதன் - அவிட்டம்
வியாழன் - கேட்டை
வெள்ளி - பூராடம்
சனி - ரேவதி

இப்படி இந்தக் கிழமைகளும் இந்த நட்சத்திரங்களும் சேரும்போது, இந்த பாலாரிஷ்டம் எனும் தோஷம்  கொண்ட நாளாக அமைகிறது. அப்போது, கடுமையான பாதிப்புகளை குழந்தைகளுக்கு உண்டாக்குகிறது.  
இதற்கு என்ன பரிகாரம் என பார்ப்போம். 
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இது ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் மட்டுமல்ல... நோய் நீக்கும் ஸ்தலமும் கூட! 
அடுத்து... அமிர்த கலசம் இருக்கும் இடம் என சொல்லப்படும் கும்பகோணம் கும்பமேஸ்வர சிவ ஸ்தலம்.  
உயிரை எடுக்கும் எமதர்மனே உயிர் மீண்ட ஶ்ரீவாஞ்சியம் ஸ்தலம், தலையெழுத்தை மாற்றி நல்வாழ்வைத் தரும் திருப்பட்டூர் பிரம்மா கோயில், பாவபுண்ணிய அடிப்படையில் நம் விதியை மாற்றும் காஞ்சி சித்ரகுப்தன் ஆலயம், திருச்சி திருவாசி மாற்றுரைத்த வரதீஸ்வரர்...  என இந்த ஆலயங்களுக்குத் தொடர்ந்து சென்று வருவதும், அந்த ஆலயங்களில் ஏதாவதொரு கைங்கர்யம் செய்வதும்  ஆயுள் அரிஷ்டம் என்னும் பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து மீளச் செய்யும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும். நோயின்றி வாழச் செய்யும்!   
திருஷ்டி சுற்றிப்போடுதல், அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருஷ்டி கழித்தல், தினமும் மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி  தூபதீபம் காட்டுதல், சாம்பிராணி போடுதல் என செய்து வந்தால், இந்த தோஷம் மட்டுமல்ல எந்த துஷ்ட சக்திகளும் நம்மை அண்டாமல் காக்கும் என்பது உறுதி!  
அடுத்த பதிவில் சந்திப்போம். 
- தெளிவோம் .
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close