[X] Close

'ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா?’


jodhidam-arivom-2-52

  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 10:48 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 52 : இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. 
நட்சத்திர தோஷங்கள் பற்றி பார்த்து வருகிறோம். அதில் மூலம் நட்சத்திரம்  பற்றிய தவறான கண்ணோட்டத்தை விளக்கியிருந்தைப் படித்துப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.  
இப்போது ஆயில்யம் நட்சத்திரம் பற்றிய தவறான கண்ணோட்டத்தைப் பார்க்கலாம். 
“ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது “ என்பது பொதுவாக எல்லோராலும் சொல்லப்படுகிறது. உண்மையில் அப்படித்தானா?
இல்லை இல்லை இல்லவே இல்லை! 
ஆயில்யம் நட்சத்திரம் பற்றிய விளக்கத்தைப் பார்த்துவிட்டு தோஷம் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். 
மகாவிஷ்ணு, ராம அவதாரம்  எடுக்கும்போது ஆதிசேஷன் மற்றும் சங்கு சக்கரம் இவர்களையும் தன் சகோதரர்களாக இருக்கச் செய்தார். முறையே ஆதிசேஷன் லட்சுமணனாகவும், பாஞ்சஜான்யம் என்னும் சங்கு, பரதனாகவும், ஶ்ரீசக்கரம் சத்ருகனாகவும் பிறந்தனர், 
ஆயில்யம் நட்சத்திரம் ஶ்ரீராமரின் நிழல் போன்று விளங்கிய தம்பி லட்சுமணன் பிறந்த நட்சத்திரம். மகாவிஷ்ணு சயனம் செய்யும் ஆதிசேஷன் நட்சத்திரம்.  
இப்படியொரு  புனிதமான நட்சத்திரத்தை தோஷ நட்சத்திரமாக எப்படி மாற்றினார்கள்? 
எளிமையான விளக்கம் சொல்கிறேன். 
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை நாகம். அதாவது பாம்பு. பாம்பின் குணம் சீறுதல் மற்றும் கொத்துதல், பெண் என்பவள் அடக்கம், ஒடுக்கம் , பணிதல் மற்றும் அடங்கிப்போதல் என வார்க்கப்பட்ட சமூகத்தில், நியாயத்திற்காக சீறுதல், சிறுமை கண்டு பொங்குதல், என மாறினால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்? ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னை யாரும் சீண்டாதவரை அமைதியாக இருப்பார்கள். சீண்டினால் சீறுவது மட்டுமல்ல கொத்தியும் விடுவார்கள்.
பொதுவாக ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தலைக்கனம் உடையவர்கள். சுய பெருமை பேசுபவர்கள். அதிலும் ஆயில்யம் 3ம் பாதத்தில்  பிறந்தவர்களைச் சொல்லவே வேண்டாம்.  எவரையும் மதிக்காத குணம், அலட்சியத் தன்மை முதலான குணாதியசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
இந்த குணாதிசயங்கள் ஆணாக இருந்தால் “கௌரவமானவர்” என்ற தோற்றத்தையும், பெண்ணாக இருந்தால் “திமிர்பிடித்தவள்” என்ற எண்ணத்தையும் தருகிறது. இப்படித்தான் காலகாலமாக, நம் சமூகம் நம் புத்திக்குள் திணித்து வைத்திருக்கிறது. 
இதனாலேயே ஆயில்ய நட்சத்திரப் பெண்ணை ஏற்க மறுக்கிறார்கள்.  
ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசியில் இருக்கும் நட்சத்திரம். கடக ராசி என்பது தாயாரைக் குறிக்கும் ராசி. சந்திரனின் சொந்த வீடு. சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம். எனவே கடக ராசிக்காரர்கள் பொதுவாகவே தாய்ப்பாசம் அதிகம் கொண்டவர்கள். 
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்பது ஏன்? ஆயில்யம் 4ம் பாதம் மட்டுமே கவனத்திற்கு உரியது. ஆயில்யம் 4ம் பாதம் நவாம்சக் கட்டத்தில் மீன ராசியில் வரும். இந்த மீனராசி சுக்கிரன் உச்சம் அடையும் ராசி. எனவே ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மனைவிக்கு கட்டுப்பட்ட நபராக மாறிவிடுவார். மனைவி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார்.
தன் மகனை இப்படி பொண்டாட்டிதாசனாகப் பார்க்க எந்த தாயாரால்தான் முடியும்? எனவே தான் ஆயில்ய நட்சத்திரப் பெண்ணை, தோஷத்தை காரணமாக்கி விலக்கிவைத்தார்கள்.  
பொதுவாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகூர் நாகநாதர் ஆலயத்திற்கும் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் இருக்கும் ஶ்ரீரங்கம் போன்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வந்தால், திருமணத்தடை அகலும். சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும்! 
அதேபோல, அடிக்கடி வேலையில் இடமாற்றம், வீடு மாற்றம் நடந்தாலும் இந்த ஆலயங்களுக்குச் தொடர்ந்து சென்று தரிசித்து வந்தால், நிரந்தர வேலை, சொந்த வீடு அமையும் என்பது உறுதி. ,
அடுத்து, கேட்டை நட்சத்திரம் கோட்டை கட்டி ஆளும் என்று சொல்லுவார்கள், கேட்டை நட்சத்திரம் கோட்டை விடும் என்றும் சொல்வார்கள். இதற்கு, பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் வரும். விருச்சிகம் சந்திரன் தன் பலத்தை இழக்கும் நீச வீடு, மற்றும் கேட்டை புதனின் நட்சத்திரம், புதன் சந்திரனுக்கு எதிரி, எனவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால் சந்திரன் பெரிய அளவில் எந்த நன்மையும் செய்யமாட்டார் என்பது பொது விதி. ஆனால் அப்படியல்ல. மற்ற கிரகங்கள் என்ன நிலை என்பதை ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும்.வெறுமனே கேட்டை நட்சத்திரத்திற்கு பலன் பார்த்தால் தவறாகத்தான் இருக்கும்.  
பொதுவாகவே ஜாதகம் பார்த்துதான் பலன் அறிய வேண்டும். வெறுமனே ராசிபலன், நட்சத்திரப் பலன் பார்ப்பது தவறு. இதுபற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். 
- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close