[X] Close

‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பதெல்லாம் பொய்!


jodhidam-arivom-2-51

  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 14:39 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 – 51 : இதுதான்... இப்படித்தான்! 
ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
 இந்தத் தொடரின் நோக்கமே ஜோதிடத்தில் இருக்கும் அறியாமையைப் போக்குவதுதான். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், என்ன ஏது என்று எதுவும் தெரியாமலேயே ஆளாளுக்கு ஜோதிடராக கருத்து சொல்பவர்களுக்கு பதில் தரும் கடமையும் இருக்கிறது. 

நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? 

ஆமாம். இந்த நட்சத்திரம் ஆகாது , இந்த நட்சத்திரம் மோசம், இந்த நட்சத்திரம் குடும்பத்துக்கே ஆகாது... என ஜோதிடமே தெரியாமல் செவி வழிச் செய்திகளுக்கு கண் காது மூக்கு வைத்து இன்னும் மோசமாக சித்தரித்தல் என்பது இப்போது தீவிரமாகி வருகிறது. 

ஜோதிடம் என்பது சமுத்திரம் அளவுக்கு பரந்து விரிந்தது. அதில் நான் உட்பட எவரையும்  முழுமை அடைந்தவர் எனச் சொல்லமுடியாது. கரைகண்டவர் என்று எவருமே இல்லை, இன்னமும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்.

அப்படி இருக்க ஏதோ ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துவிட்டு அரைகுறையான விளக்கம் தருபவர்களை அந்த நவகோள்களே கூட மன்னிக்காது.

ஜோதிடத்திலேயே மிகப்புலமை வாய்ந்தவன் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன்.
அவனே, தன் ஜோதிடத் திறமையை ஒன்றுமே இல்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தன்னையே மாய்த்துக்கொள்ளப் போனான், பீமனால் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். 

ஏன் தற்கொலை? எதற்காக இந்த முடிவு? 
கர்ணன்தான் தங்களுக்கெல்லாம் மூத்தவன் என்பதை போர் முடிந்துதான் அறிந்து கொண்டான். உலகம் போற்றும் ஜோதிடனாய் இருந்தும் தன் சகோதரன் கர்ணனே என அறிய முடியாத ஜோதிடம் எதற்கு? அதை அறிய முடியாத ஜோதிடனான நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் ? என தீயில் ஜோதிட நூல்களைப்போட்டுவிட்டு தானும் தீயில் இறங்கப்போனான். அப்போது அருகில் இருந்த பீமன் தீயில் பாய்ந்து முடிந்த வரை ஜோதிட நூல்களைக் காப்பாற்றி எடுத்துவந்தான். நெருப்பில் விழப்போன சகாதேவனை தடுத்து, “அனைத்தையும் நீ அறிந்துவிட்டால் தெய்வம் எதற்கு? இன்னும் சொல்லப்போனால் நீயே இறைவனாகிவிடுவாயே.! தலைக்கனம் வந்து விடுமே!’’ என அறிவுரை கூறி அவனை ஆசுவாசப்படுத்தினான். 

எனவே “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” மாதிரி ஜோதிடம் சொல்லுபவர்களின் கருத்துகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  

ஏன் இவ்வளவு ஆதங்கம்? என்று கேட்கிறீர்கள்தானே. 

“மூலம் நட்சத்திரம்” பற்றிய தவறான புரிதல் இன்று பலரின் மண வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கச் செய்திருக்கிறது. 
இது மட்டுமல்ல... 

மூலம் - மாமனாருக்கு ஆகாது,
ஆயில்யம்- மாமியாருக்கு ஆகாது
கேட்டை- மூத்த மைத்துனருக்கு ஆகாது
விசாகம்- இளைய மைத்துனருக்கு ஆகாது
பூராடம் - குடும்பத்துக்கு ஆகாது

இப்படி பல ’ஆகாது’களைச் சொல்லி  பிரேக்கிங் நியூஸ் போலாக்கிவிட்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே தவறு. 
இதில் கொடுமை என்ன தெரியுமா? மேற்கண்ட தோஷங்கள் பெண்ணுக்கு மட்டுமே சொல்லப்பட்டதெல்லாம் போய், இப்போது ஆண்களுக்கும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 

முதலில் திருமணப் பொருத்தத்தில்   “பெண்ணின் ஜாதகத்திற்குத்தான்,ஆணின் ஜாதகம் பொருத்தம் பார்க்கப்படவேண்டும்” என்பதை புரிந்துகொள்ளுங்கள். பலமுறை இதை பதிந்துகொண்டே வருகிறேன். மாறாக “ ஆணின் ஜாதகத்திற்கு , பெண்ணின் ஜாதகம்பொருத்தம் பார்க்கப்படக் கூடாது”  என்பதையும் தெளிந்துகொள்ளுங்கள். 
 
“போத்திகிட்டு படுத்தா என்ன? படுத்திகிட்டு போத்தினா என்ன? “ இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் “ படுத்த பின் போர்த்திக்கொள்வதுதான்” சரியானது, அது மாதிரி “பெண்ணின் ஜாதகத்திற்குதான் பொருத்தம் பார்க்கப்பட வேண்டும்” என்பதே சரி.

மூலம்:- ஆண் மூலம் ஜெகம் ஆளும், பெண் மூலம் நிர்மூலம்”,  “மூலம் மாமனாருக்கு ஆகாது” 

என்பது குறித்து விளக்கமாகப் பார்ப்போம். 
ஆண்கள்- உங்களில் மூல நட்சத்திரக்காரர்கள் எத்தனை பேர் இந்த உலகை ஆள்கிறீர்கள்? உலகை ஆள வேண்டாம், எவ்வளவு பேர் பிரமாண்டமான தொழில் அதிபர்களாக உள்ளீர்கள்? உத்தியோகஸ்தராக இருந்தால் தலைமை பொறுப்பில் எத்தனை பேர் பணியாற்றுகிறீர்கள்? உண்மையில் விரல்விட்டு எண்ணிவிடலாம், (சக்ரவர்த்தியாகவும், ராஜாக்களாகவும் இருந்தவர்களில் யாருமே மூலம் நட்சத்திரம் கிடையாது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.). 

பெண்கள்:- உங்களில் மூல நட்சத்திரமாக இருப்பவர்களில் எத்தனை பேரின் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளது? அல்லது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ? நிச்சயமாக ஒரு குடும்பம் கூட பாதிப்படைந்திருக்காது என்பதை கொஞ்சம் யோசித்து, ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். 

மூல நட்சத்திரம் அனைத்து நட்சத்திரங்களுக்கும் “மூலம்” ஆகும். நதி மூலம், ரிஷிமூலம் போல அனைத்திற்கும் ஒரு மூலம் என்னும் தொடக்கம் உண்டு.  மூலம் இல்லாமல் எதுவும் தொடங்க முடியாது; உருவாகவும் முடியாது. அப்படி இருக்க  மூல நட்சத்திரத்தை தவிர்ப்பதும், மூல நட்சத்திரத்தையே குற்றமாகச் சொல்வதும் எப்படி நியாயமாகும்? 

ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்...
 “மூல நட்சத்திரம் கொண்ட பெண்ணுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட வேண்டியதே இல்லை” என்பதே சத்தியம். இதையே ஜோதிட சாஸ்திரமும் நூல்களும் விளக்கியிருக்கின்றன.  எந்தப் பொருத்தமும் பார்க்காமல் அப்படியே திருமணம் செய்யலாம் என்பது மூல நட்சத்திரத்துக்கு இருக்கிற மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். ஜோதிட விதி! 

இதை ஏன் யாரும் சொல்லுவதும் இல்லை, விளக்குவதும் இல்லை.  எதிர்மறை கருத்துக்கு இருக்கும் ஆதரவு, நேர்மறை கருத்துக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்கு உரியது,

ஆண் மூலம் ஜெகம் ஆளும்?...! அது ஆனி மூலம் ஜெகம் ஆளும்! இதுவே சரி. ஆணோ பெண்ணோ , ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் செல்வவளம் குன்றாமல் வளர்ச்சிமேல் வளர்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்.  

பெண் மூலம் நிர்மூலம்? ..... அது பின் மூலம் நிர்மூலம் ஆகும். அதாவது ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் அதன் பின் பாதம் என்பது நான்காவது பாதத்தைக் குறிக்கும். அப்படியாக மூலம் நட்சத்திரம் இருந்தால், எதிரிகள் இல்லாத, எதிர்ப்புகள் இல்லாத நிலையை உண்டாக்கும். 

அது எப்படி?
மூலம் நான்காம் பாதம் என்பது நவாம்சம் கட்டத்தில் கடக ராசியில் வரும். கடக ராசி என்பது, செவ்வாய் நீசம் என்னும் பலமிழக்கும் ராசி. கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும், ரத்தமயமான போராட்டத்திற்கும் காரணமான செவ்வாய், தன் பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் ராசி கடகம். எனவே மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகள், எதிர்ப்புகள் என்ற நிலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்காது. 

சரி... மாமனாருக்கு ஆகாது இது உண்மையா? 

இல்லை. தவறு. மாமனாருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

பெண்ணுக்கு திருமணத்திற்கு முன் சூரியன் என்பவர் தந்தை. திருமணத்திற்குப்பின் அதே சூரியன் மாமனார் ஆவார். 

மூல நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.  காரணம் முதல் பாதத்தில் பிறந்தால் நவாம்சகட்டத்தில் மேஷ ராசியில் வரும்,

மேஷ ராசி என்பது சூரியன் உச்சமடையும் ராசி. மூல நட்சத்திரம் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷம் என்பதால் சந்திரன் மேஷத்தில் இருப்பார். எனவே குடும்ப நிர்வாகம் என்பது மாமனாரிடமிருந்து வீட்டிற்கு வந்த மருமகளிடம் வந்து சேரும். 

யோசித்துப் பாருங்கள்... நிர்வாகம் என்னும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க யாராவது முன் வருவார்களா? அதனால்தான் மூலம் நட்சத்திரம் என்றால் தோஷம், மாமனாரின் உயிருக்கு ஆபத்து என்று புரளி கிளப்பி வைத்திருக்கிறார்கள். 

மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தவர்களைப் பாருங்கள். வாழ்வில் எதற்கும் பயன்படாதவர்கள் கூட திருமணத்திற்குப் பின் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

காரணம், மூல நட்சத்திரம் தனுசு ராசியில் இருக்கும் நட்சத்திரம். இந்த தனுசு ராசி என்பது மேஷம் முதலான ராசிகளை எண்ணி வர ஒன்பதாவது ராசி. இது பாக்கிய ஸ்தானம்.  

திரிகோணத்தில் (திரிகோணம் என்பது 1,5,9) ஒன்றை விட ஐந்து உயர்ந்தது, இந்த ஐந்தைவிட ஒன்பது உயர்ந்தது, அப்படிப்பட்ட ஒன்பதாவது ராசியில் ஜனித்தவர்கள் தோற்றதாக வரலாறே இல்லை என்கிறது ஜோதிடக் கணிதம். 

எனவே இனியாவது மூல நட்சத்திரத்தை ஒதுக்காதீர்கள். மூலம் குறித்த தகிடுதத்த வார்த்தைகளை மிக தைரியமாக, குழப்பமே இல்லாமல் புறக்கணியுங்கள். 

வாழ்வில் சகல சம்பத்துகளோடு வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் “மூல நட்சத்திர” பெண்ணை தைரியமாகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் திருமணம் செய்யுங்கள்.  வளமோடும் நலமோடும் பலமோடும் வாழ்வீர்கள் என்பது உறுதி! 

ஆயில்யம், கேட்டை, விசாகம், பூராடம் பற்றிய தோஷங்கள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம். 
- தெளிவோம்
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close