[X] Close

விவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்!


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 11:20 am
  • அ+ அ-

-ஜோ. ஆரோக்யா

கிறிஸ்து பிறப்பதற்கு பத்து நூற்றாண்டு களுக்கு முன்னர் இஸ்ரவேல் தேசத்திலிருந்து யூதா தனி ராஜ்ஜியமாக பிரிக்கப்பட்டது. அந்த ராஜ்ஜியத்தின் மூன்றாவது அரசனாக ஆசா முடிசூட்டப்பட்டார்.

தாவீது அரசரின் பரம்பரையில் வந்த இவர், நாடாளும் அரசன் என்கிற அகந்தை இல்லாதவர். படைபலத்தை நிறைய சேர்க்காமல் கஜானாவில் தங்கத்தையும் வெள்ளியையும் குவிக்காமல், பரலோகத் தந்தைக்குப் பிடித்தக் காரியங்களையே செய்தார்.

ஆசா கி.மு. 977-ல் அரியணையில் அமர்ந்தபோது, அவரது அரசவையிலிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், அறிஞர்களும் கூட கானானியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களை வணங்கப் பழகிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஆசா, இவர்களிடமிருந்து விலகி, ‘ஆசா தன் தேவனாகிய பரலோகத் தந்தையின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தார்’ என்று விவிலியத்தின் நாளாகமப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.

பாட்டியின் பதவியைப் பிடுங்கினார்

தனது சொந்த வீட்டிலேயே பொய் வழிபாட்டில் ஈடுபட்டுவரும் தனது பாட்டியின் முட்டாள்தனங்களைக் கண்டு ஆசா வெட்கித் தலைகுனிந்தார். ஆசாவின் பாட்டியின் பெயர் மாக்காள். பூஜைக் கம்பத்தின் வழிபாட்டுக்காக சிலையைச் செய்து வைத்திருந்த பாட்டியிடமிருந்து ராஜமாதா அந்தஸ்தைப் பிடுங்கிக்கொண்டார்.

இத்தனை தூய்மைப் பணிகளையும் முழுவீச்சில் ராஜ்ஜியம் முழுவதும் செய்துமுடித்த ஆசா, அத்துடன் நிறுத்திக்கொண்டு ஓய்வெடுக்கவில்லை. ‘தங்கள் பிதாக்களின் தேவனாகிய பரலோகத் தந்தையைத் தேடவும், அவர் மக்களுக்கு அளித்த நியாயப் பிரமாணம், திருச்சட்டங்கள், கட்டளை களின்படி எப்படி வாழ வேண்டும் என்பதை ஓய்வின்றி ராஜ்ஜியம் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் எடுத்துக் கூறி  உற்சாகப்படுத்தினார். மக்களும் உண்மை வழிபாட்டின் பக்கம் மனம் திரும்பி வரத் தொடங்கினார்கள்.

பெரும் போரில் வெற்றி

ஆசா அரியணை ஏறியது முதல் பத்தாண்டு களுக்கு அமைதியான ஆட்சி நடைபெற்றது. ஆனால் பதினோராவது ஆண்டில் பத்து லட்சம் காலாட்படை வீரர்களோடும் முந்நூறு ரதங்களோடும் எத்தியோப்பியர்கள் யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள்.

ஆனால் ஆசா அந்தப் பெரும்படையின் முகாமைக் கண்டு பயப்படவில்லை. பரலோகத் தந்தை தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார் என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதனால், போரில் வெற்றியடைய உதவும்படி கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்.

“வானுலகத் தந்தையே, உம் பிள்ளைகளாகிய நாங்கள் உமது பெயரால் போருக்குக் கிளம்பிவிட்டோம். நாங்கள் நிறைய பேரோ கொஞ்சம் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும். அதனால் தந்தையே..

எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம், இத்தனை பெரிய கொலைவெறிக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம். தந்தையே நீரே எங்களுடைய கடவுள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை மீட்டு வந்தீர்.

செங்கடலைப் பிளந்து எங்களை பாரவோன் மன்னனின் படைகளிடமிருந்து காப்பாற்றினீர்கள். அப்படிப்பட்ட உங்களை இந்த அற்ப மனிதர்கள் ஜெயிக்கும்படி அனுமதிக்கக் கூடாது. நாங்கள் அமைதியை விரும்பும் உம்முடைய பிள்ளைகள்; போரை விரும்புகிறவர்கள் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” என்பதாக அவருடைய பிரார்த்தனை இருந்தது.

ஆசாவின் பணிவான பிரார்த்தனைக்குக் கடவுள் செவி கொடுத்தார். எத்தியோப்பியப் படையை அடியோடு அழித்து ஆசாவுக்கு முழு வெற்றியைக் கொடுத்தார்.

ஆசாவைபோல் அல்லாமல் பல அரசர்கள் தனக்கு உண்மையாக நடந்துகொள்ளாத போதும், தான் உண்மைக் கடவுள் என்பதைக் காட்டுவதற்காக, பரலோகத் தந்தை தன்னுடைய மக்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறார்.

சகோதரச் சண்டை

ஆசாவுக்கும் இஸ்ரவேலின் அரசனான பாஷாவுக்கும் அடுத்துப் போர் மூண்டது. இஸ்ரவேலில் இருந்து யூதாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா என்ற நகரத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார் பாஷா.

உடனே ஆசா, கடவுளின் தேவாலயத்தில் உள்ள  பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்து தங்கம், வெள்ளி அனைத்தையும் எடுத்துவரச் செய்து அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா அரசனும் எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம் கொடுத்தனுப்பி ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.

“என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல், நானும் நீங்களும் உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் அரசனாகிய பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்பதுதான் ஆசாவின் வேண்டுகோள்.

அதை ஏற்றுக்கொண்ட பெனாதாத், இஸ்ரவேலின் நகரங்களைத் தாக்கி அழிவை உண்டாக்கினான். தனது நாட்டின் நகரங்கள் தாக்கப்பட்டதை அறிந்த பாஷா ராமா நகரத்தைக் கட்டுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, தனது தலைநகரான திர்சாவுக்குத் திரும்பிச் சென்றார்.

பின் ஆசா, ராமா நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் கொண்டுவரச் செய்து கடவுளின் பெயரால் பென்யமீன் பகுதியில் கெபாவையும் மிஸ்பாவையும் கட்டினார். இப்படியாகத் தன் வாழ்நாள் முழுவதும் முழு இதயத்தோடு கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு உண்மையாக நடந்துகொண்ட அரசனாக வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டுவிட்டார், ஆசைகள் ஏதுமற்ற ஆசா.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close