[X] Close

திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிகோடியாய் பணம்!


jodhidam-arivom-2-49

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Jun, 2019 10:30 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 49 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நாம் இதுவரை நற்பலன் தரும் யோகங்களையும், பாதிப்பைத்தரும் யோகங்களையும், தோஷங்கள் தரும் சாதக பாதகங்களையும் பார்த்தோம்.

யோகங்கள் என்ற வரிசையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட யோகங்கள் இருந்தாலும் நடைமுறையில் நூற்றுக்கும் குறைவான யோகங்களையே பார்த்து வருகிறோம். கூர்ந்து கவனித்தால் 10 யோகங்கள் மட்டுமே ஜோதிடர்களால் கவனிக்கப்படுகிறது அல்லது சொல்லப்படுகிறது.  

ஒரு ஜாதகத்தில் எந்த யோகங்களும் இல்லை என்றால் அந்த ஜாதகர் வாழ்வில் முன்னேறவே முடியாதா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழலாம். இது இயல்புதான்.

தாராளமாக, முன்னேற முடியும். வாழ்வில் மிக உச்சத்தைக்கூட தொட முடியும், அது எப்படி என்றால் “விதி செய்ய முடியாததை, மதி செய்து தரும்.” அதாவது ஒருவர் ஜாதகத்தில் சொந்தத் தொழில் செய்யும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால், அது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி வருவது நியாயமே! 

இதில்தான் உள்ளது சூட்சும ரகசியம். அவர் ஓரிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது என்றாவது ஒருநாள் “என் திறமையையும் உழைப்பையும் நான் ஏன் யாரோ ஒருவருக்காக செலவிட வேண்டும்!? இதையே நானே செய்தால் என் வளர்ச்சி இன்னும் நன்றாகத்தானே இருக்கும்” என்ற எண்ணம் வரும் நேரம் சொந்தத் தொழில் செய்ய முற்படுவார். அதில் வெற்றியும் காண்பார்.

ஆனால் அந்த நேரம் எது? ஜாதகத்தில் நல்ல திசா புத்தி, அதாவது தொழில் ஸ்தானமான 10 ம் இடத்து திசை அல்லது பத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை வரும்போது இந்த எண்ணம் உதிக்கும்.

இதில் ஏழாமிடம் சிறப்பாக இருந்தால்... நண்பர்களே வலிய வந்து உதவுவார்கள். அல்லது மனைவியின் உற்சாகமான ஊக்கம் தைரியமாக முடிவுகளை எடுக்கவைக்கும்.

இதன் பிறகு நடப்பதெல்லாம் நம்பமுடியாத அளவுக்கு...  பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் வேகம் வேகம் என தொழிலில் வளர்ச்சியை உண்டாக்கும். 

இதற்கு என் நண்பர் ஒருவரை உதாரணமாக்ச் சொல்லலாம்.

இந்தியாவின் மிகப் பிரபலமான பாரம்பரிய ஆங்கில நாளேட்டில் பணி புரிந்து வந்த என் நண்பர், லட்சங்களில் ஊதியம் வாங்கியவர். திடீரென வேலையை உதறிவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கினார். முழு முயற்சி வெற்றியைத் தந்தது. இன்று விலை உயர்ந்த பென்ஸ்கார், ஆடம்பர பங்களா என அவர் வாழ்க்கை,நம்பமுடியாத அளவுக்கு முன்னேறி உள்ளது. இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன் அல்ல, கடந்த இரண்டு வருடங்களில் நடந்த அதிசயம் இது.  

இதைத்தான் “விதியை மதியால் வெல்வதா” என்றால் அப்படியல்ல “விதியை மதியின் துணை கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவை” எடுப்பதாகும்.

உதாரணமாக குரு பார்வை என்பது ஒவ்வொரு ராசிக்காரருக்கும் 5,7,9 என்ற பார்வை 12 ஆண்டுகளில் மூன்றுமுறை கிடைக்கும், ஆனால் அப்போதெல்லாம் எல்லா நன்மைகளும் கிடைத்துவிடுமா என்ன? திசா புத்தி நன்றாக இருக்க வேண்டும். சனிபகவான் சாதகமான இடத்தில் இருக்க வேண்டும். மிக முக்கியமாக ராகு கேதுக்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இப்படி மற்ற கிரகங்களும் நல்ல இடத்தில் இருந்து திசாபுத்தியும் உதவும்போதுதான் சிறந்த தொழில் அதிபராக ஜொலிக்கமுடியும்.

இது எப்படி நடைமுறையில் சாத்தியமாகும்? எப்போது நடக்கும்? 

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் போது முதலில் கவனிக்கப்பட வேண்டியது... கிரகங்கள் அமர்ந்துள்ள நட்சத்திர பாதங்கள். அப்படி அமர்ந்த நட்சத்திரங்கள் லக்னத்திற்கு சாதகமா? பாதகமா? என்பதை ஆராய வேண்டும்.

மிக முக்கியமானது... பரிவர்த்தனை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது கிரகங்கள் தங்களுக்குள் வீடு மாறி அமர்ந்துள்ளதா? அல்லது நட்சத்திர சார பரிவர்த்தனை நடந்துள்ளதா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

அது என்ன சார பரிவர்த்தனை?

உதாரணமாக.... குருவையும் சனியையும் எடுத்துக்கொள்வோம்.

குரு கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். பூசம் சனியின் நட்சத்திரம்.  

சனி துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் இருப்பதாகக் கொள்வோம். விசாகம் குருவின் நட்சத்திரம்.

இப்போது கிரகங்கள் பரிவர்த்தனை அடையவில்லை. ஆனால் அந்த இரு கிரகங்களும் நட்சத்திர பரிவர்த்தனை அடைந்துள்ளது.

அதாவது சனியும் குருவும் சார பரிவர்த்தனை அடைந்துள்ளனர்.

சரி... இது என்ன செய்யும்?  

குரு சனியின் கட்டுப்பாட்டுக்குள்ளும், சனி குருவின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வருவார்கள். இவர்கள் இருவரும் அந்த ஜாதகரின் வாழ்வை மாற்றி அமைத்து விடுவார்கள். 

இது எப்போது நடக்கும் என்றால் குரு திசையோ அல்லது சனி திசையோ நடக்கும் போது அற்புதமான மாற்றங்களை உண்டு பண்ணும். அதுமட்டுமல்ல ஒவ்வொரு தசாவில் வரும் புத்தி காலங்களிலும் இந்த மாற்றம் நடக்கும். 

ஆக, ஒரு ஜாதகத்தை மேலெழுந்தவாரியாக ஆராய்ந்தால் எந்தப் பலனையும் சரியாக கணிக்க முடியாது. ஆழமான ஆய்வும் நல்ல ஜோதிட ஞானமும் இருந்தால்தான் கணிக்க முடியும். உங்களுக்கும் சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் வந்தால் நல்ல ஜோதிடரிடம் சரியான பலன்களைக் கண்டறிந்து, அதன் பிறகு சொந்தத் தொழில் முயற்சியில் இறங்குங்கள், வெற்றிகரமான தொழிலதிபராக வளம் வருவீர்கள் என்பது உறுதி!

உங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இல்லாவிட்டாலும், உங்கள் மனைவி, மகன் அல்லது மகள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பெயரில் தொழில் தொடங்குங்கள். 

சரி , எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் சொந்தத் தொழில் செய்யும் யோகம் இல்லை. ஆனாலும் நான் சொந்தத் தொழில்தான் செய்வேன் என பிடிவாதமாக இருக்கிறீர்களா?  

ஒரு ரகசியம் சொல்கிறேன், அதன்படி செய்யுங்கள்... வெற்றி நிச்சயம்!

திருமலை திருப்பதி ஸ்ரீவெங்கடசேபெருமாளை உங்கள் தொழில் கூட்டாளியாக, பங்குதாரராகச்  சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது பெருமாளுக்கு பார்ட்னராக அவருடன் சேருங்கள். வரும் லாபத்தில் இத்தனை சதவீதம் அவருக்கு என ஒதுக்குங்கள். வருடாவருடம் அவர் பங்கை அவரின் உண்டியலில் செலுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

ஆனால் ஒன்று ... பெருமாளிடம் கவனமாக கணக்கை வைத்துக்கொள்ளுங்கள், நம்பியவர்களை எப்போதுமே கைவிட மாட்டான் வேங்கடவன். அப்பேர்ப்பட்டவனை  ஏமாற்றினால் அத்தனையையும் அவனே கைப்பற்றிவிடுவான். எனவே கவனமாக இருங்கள். உண்மையாக இருங்கள்.  

அவரின் உண்டியலில் எப்படி கோடியாக கோடியாக பணம் வருகிறது என இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்,

சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திப்போம்.

- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close