[X] Close

சனீஸ்வரரின் மகன் யோககாரகன்; தரிசியுங்கள்!


jodhidam-arivom-2-48

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 10:46 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 48: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே,சனியின் மைந்தன் மாந்தி பற்றிய ஜோதிட தகவல்களைப் பார்த்து வருகிறோம்.

இன்னும் தொடருவோம்.

மாந்தி 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் உண்டாகும் நன்மைகளை சென்ற பதிவில் பார்த்தோம்.  

இப்போது அவர் மற்ற இடங்களில் இருந்தால் என்ன பலன் தருவார் என பார்க்கலாம்.  

லக்னம் என்னும் ஒன்றாம் இடத்தில் இருந்தால் அவர் தரும் பலன்:- இதுதான் பிரம்மஹத்தி தோஷம் . மேலும் சனியும் குருவும் சேர்ந்திருக்க அதற்கு 5 அல்லது 9 ம் இடத்தில் ராகு இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் என்கிறது ஜோதிட நூல்.  

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

முன் ஜென்மத்தில் செய்த பாவ வினையே தோஷமாக மாறுகிறது. குறிப்பாக உயிரைக் கொல்லுதல், பெற்றோரை கவனிக்காமல் உணவு கொடுக்காமல் வீட்டைவிட்டு விரட்டுதல், நண்பருக்கு துரோகம் செய்தல், குருவை அவமதித்தல், பசுவைக் கொல்லுதல் இவை எல்லாம் பிரம்மஹத்திதோஷம் என் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள்.

ஆனானப்பட்ட சிவபெருமானே பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் எப்படி அவதியுற்றார் என்பது நீங்கள் அறிந்ததுதானே! அப்படி இருக்க நாமெல்லாம் எம்மாத்திரம்? 

சரி என்ன செய்யும்?

நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பிரச்சினை தீரும்போதே அடுத்த பிரச்சினை வரிசை கட்டி வந்து நிற்கும். ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்லும். தூக்கம் என்பதே இருக்காது. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்ய முடியாமல் பல நெருக்கடிகளை உண்டாக்கும். வெற்றிக்கு மிக அருகில் வந்திருப்போம். ஒரேயொரு படியைக் கடக்கவேண்டியதுதான். ஆனால் அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கை நழுவிப் போகும். மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடுவோம்.

இரண்டாமிடத்தில் மாந்தி இருந்தால், குடும்பத்தில் அமைதி என்பதே இருக்காது. பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். பணத்தை தேடி ஊர்ஊராக ஓட வைக்கும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவர் மாற்றி ஒருவருக்கு என விஸ்வரூபமெடுத்து திக்குமுக்காடச் செய்துகொண்டே இருக்கும். திருமணம் தடைப்படும்.  

4ம் இடத்தில் மாந்தி இருந்தால், மாத்ரு சாபம் இருக்கும். சொந்த வீடு இருந்தாலும் அந்த வீட்டில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள், அடிக்கடி வீடு மாறிக்கொண்டே இருப்பார்கள். வாகனப்பழுது அடிக்கடி வரும். புதிய வாகனம் வாங்கினாலும் அது கார், பைக் என எதுவாக இருந்தாலும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் அல்லது ஒன்றிரண்டு நாட்களிலேயே எதிலாது மோதி டேமேஜ் உண்டாக்கும்.

5ம் இடத்தில் மாந்தி இருந்தால். குலதெய்வம் எது என்றே தெரியாமல் போகும். அல்லது தவறான தெய்வத்தை குலதெய்வமாக மாற்றி வழிபட வைக்கும்.  புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்தும். புத்திரம் இருந்தாலும் பயனற்றுப்போகும். இன்னும் ஒருபடி மேலாக இறை நம்பிக்கை இல்லாமல் செய்ய வைக்கும். உழைக்காமல் சம்பாதிக்க குறுக்கு வழி தேடச் செய்யும். சிக்கிக்கொள்ள வைக்கும்.

7ம் இடத்தில் மாந்தி இருக்க., திருமணத் தாமதம் ஏற்படும். திருமணம் ஆனபின் மண வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது, ஒரு சிலருக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று தடை உண்டாக்கும், திருமண பந்தம் முடிவுற்று இரண்டாவது திருமணத்திற்கு இட்டுச்செல்லும்,

எட்டாம் இடத்தில் மாந்தி இருக்க...  ஆயுள் கூறித்த பயம் இருந்து கொண்டே இருக்கும். வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் நீங்களே தேவையே இல்லாத பிரச்சினைக்கு ஆளாவீர்கள். வம்பும் வழக்கும் தேடி வரும். மாந்திரீகம் சூனியம் போன்றவைகளில் தேவையற்ற நம்பிக்கை உண்டாக்கும்.  தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக கற்பனை செய்துகொள்வீர்கள். அடிக்கடி ஏதாவது சிறுசிறு விபத்துக்களை ஏற்படுத்தும். பிரேத சாபம் இருக்கும்.  

9ம் இடத்தில் மாந்தி இருந்தால், பித்ருக்கள் சாபம் இருக்கும். முன்னோர்களுக்கு சரியாக பித்ரு கர்மாக்கள் செய்யாமல் போனாலும், தந்தையை சரியாக கவனிக்காமல் தவிக்க விட்டாலும், அடுத்தவர் சொத்து அபகரித்தாலும் இந்த சாபம் நீடிக்கும். பூர்வீகச் சொத்துகள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் செய்யும்.

12 ம் இடத்தில் மாந்தி இருக்க., மருத்துவச் செலவு இருந்து கொண்டே இருக்கும். நீண்டகால நோய்த் தாக்கம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் செய்யும். கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டே இருக்கும் அவல நிலை உண்டாகும். வாழ்வின் இன்பங்கள் என எதெல்லாம் உண்டோ அவை எதையும்  அனுபவிக்க முடியாத நிலையை உண்டாக்கும்.

என்ன பரிகாரம் செய்தால் இந்த சாபமெல்லாம் நீங்கும்? 

ஈசனின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபையான திருவாலங்காட்டில் மாந்தியானவர் தன் சாபம் நீங்குவதற்காக, ஒரு லிங்கத்தை வைத்து வழிபட்டார். அது இப்போது மாந்தி லிங்கம் என அழைக்கப்படுகிறது. அந்த லிங்கத்தை உங்கள் நட்சத்திர நாளன்று வழிபடுங்கள். மாந்தி தோஷம் நீங்கும்.

கும்பகோணம் நாச்சியார்கோவிலை அடுத்த திருநரையூரில் சனிபகவான் தன் மனைவி நீலாதேவி,தன் மகன்கள் மாந்தி மற்றும் குளிகனோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று வழிபட்டாலும் தோஷம் நீங்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கைவிடப்பட்டு அனாதையாக இறப்பவர்களின் சவ அடக்கத்திற்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் தலைமுறைக்கே நன்மை உண்டாக்கும்.

இறந்தவர் வீட்டில் ஏதாவது ஒரு உதவி உங்களுடையதாக  இருக்கட்டும். குறைந்த பட்சம் உணவு, காபி டீ முதலான தானங்கள் மாந்தி சாபத்தை நீங்கச்செய்யும். 

விதவைப் பெண்ணின் மறுமணத்திற்கு உதவுங்கள். அதுவும் பெரும் நன்மைகளை அள்ளித்தரும். ஆதரவற்ற பிள்ளைகளுக்கு முடிந்தவரை உதவுங்கள்.

மாந்தி பாவகாரகன் மட்டுமல்ல யோககாரகனும் கூடத்தான்! மறந்துவிடாதீர்கள்.  

அடுத்த பதிவில் மற்றுமொரு யோகத்துடன் சந்திப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close