[X] Close

தெய்வத்தின் குரல்: கணிகண்ணன் திரும்பி வந்துவிட்டான்!


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 11:16 am
  • அ+ அ-

ராஜாவுக்குக் கணி கண்ணனிடம் தான் தப்பாக நடந்துகொண்டு நகர ப்ரஷ்டம் பண்ணியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. நேரே பெருமாளிடம், – அவர் அர்ச்சையாக இருந்தாரோ, சல (நடமாடும்) மூர்த்தியாக இருந்தாரோ, ஏதோ ஒன்று; அவரிடமே போய் – நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் பண்ணினான்.

“பெருமாள் இல்லாமல் ஆலயம் சூன்யமானது போலவே ஊர் முழுக்கவும் சூனியமான மாதிரி ஆகிவிட்டது. எல்லா ஜனங்கள் மனசும் சூன்யமாகிவிட்டது. என்ன அபசாரம் நடந்திருந்தாலும் க்ஷமித்து பகவான் மறுபடியும் காஞ்சிக்கு எழுந்தருளணும்” என்று வேண்டிக்கொண்டான்.

ஸ்வாமியோ, “நானாக சங்கல்பித்துக்கொண்டு அங்கே விட்டுப் புறப்படவில்லை. ஆழ்வார் சொன்னார். அவர் சொன்னபடி செய்யணுமென்றே கூட வந்துவிட்டேன். அவரே மறுபடி சொன்னாரன்னியில் நான் இங்கேயிருந்து திரும்புவதற்கில்லை!” என்று சொல்லிவிட்டார்.

அர்ச்சா மூர்த்தியாகவே அவர் இருந்திருந்தால் இப்படி அசரீரியாகத் தெரிவித்தாரென்று வைத்துக் கொள்ளலாம். வேறே வழியில்லாமல் ராஜா ஆழ்வார் காலில் விழுந்து வேண்டிக்கொண்டான்.

அவரானால், “பெருமாளை விட்டு என்னாலே இருக்க முடியாது. அதனாலே அவரை மாத்திரம் உன்னோடு போகச் சொல்லிவிட்டு நான் இங்கேயே இருப்பது என்பது நடக்காத காரியம்” என்று மறுத்துச் சொல்லிவிட்டார்.

“தாங்களும்தான் திரும்ப வாருங்கள். நான் அதற்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ராஜா வேண்டிக்கொண்டான்.

அதற்கு அவரும் பெருமாள் சொன்ன மாதிரியே பதில் சொன்னார். “நானாக உத்தேசம் பண்ணி இங்கே வந்திருந்தால் நானாகவே மறுபடி திரும்பலாம். ஆனால், நானும் தானாகப் புறப்பட்டுவிடவில்லை. கணிகண்ணனுக்கு நீ ஆக்ஞை பண்ணினதாலும், நீ நடந்துகொண்ட விதத்தில் அவனுக்கே உன் ஊரில் இருக்கப் பிடிக்காததாலும் அவன் புறப்பட்டான்.

அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாமலே நானும் பின்னோடே கிளம்பினேன். ஆனாதினாலே என் காலில் விழுகிறதற்குப் பதில் அவன் காலில் போய் விழு. பண்ணியது தப்பு என்று க்ஷமாபனம் பண்ணிக்கொண்டு திரும்பி வரணுமென்று அவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளு. அவன் சம்மதித்தால் நானும் திரும்புகிறேன், பெருமாளையும் திரும்பச் சொல்கிறேன்” என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன பண்ணிக் கொள்கிறது?

ராஜா போய் கணிகண்ணன் காலில் விழுந்தான். சிஷ்யனுக்காக குரு முதலில் திரிபுவன சக்கரவர்த்தியான பகவானையே வாரிச் சுருட்டிக் கொண்டு கோவிலை விட்டு விட்டு வரப் பண்ணினார். இப்போது அந்தப் பையன் காலில் பல்லவ சக்ரவர்த்தி விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி செய்கிறார்!

ராஜா வேண்டிக்கொண்டவுடனே, ஸ்வபாவத்தில் இளகிய மனசு படைத்த கணிகண்ணன் காஞ்சி புரத்துக்குத் திரும்பவும் புறப்பட்டான்.

அவன் பின்னோடே ஆழ்வார், ஆழ்வார் பின்னோடே அவர் சொன்னபடியெல்லாம் செய்கிற பெருமாள் – என்று எல்லோருமாக ராஜதானிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெருமாள், திருமழிசையாழ்வார், கணிகண்ணன் ஆகிய மூன்று பேரும் ராத்திரி முழுவதும் பாலாற்றங் கரையில் தங்கிய அந்த இடத்திற்கு ஓரிரவிருக்கை (ஓர் இரவு இருக்கை) என்றே பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயர் சிதைந்து சிதைந்துதான் இப்போது ஓரிக்கை என்று வழங்குகிறது.

மூன்று பேரும் காஞ்சிபுரத்திற்குத் திரும்பியதும் அலக்ஷ்மியெல்லாம் நீங்கி நகரம் பழையபடி சோபை பெற்றது. ஜனங்களின் மனசிலிருந்த பீதி, துக்கம் எல்லாமும் போய் ஸந்துஷ்டி நிறைந்தது.

பகவான் கோயிலுக்குத் திரும்பிய அப்புறமும் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வந்த சேஷ பர்யங்கத்தை விரித்துப் படுத்துக்கொள்ளாமலே நின்றுகொண்டிருந்தான். “பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்படு” என்று உத்தரவு போட்டவர் “படு” என்று மாற்றி உத்தரவு போடும்வரையில் தானாக எப்படிப் படுப்பது என்றுதான் நின்றுகொண்டேயிருந்தான்! பக்தர்கள் வார்த்தைக்கு பகவான் அப்படிக் கட்டுப்படுகிறான்! “பக்த பராதீனன்” என்று அவனைச் சொல்வது அதனால்தான்.

இப்படி, பரமபத நாதனாக இருக்கப்பட்டவன் தன் வார்த்தைக்குக் காத்துக் கொண்டிருக் கிறானென்று பார்த்தவுடன் ஆழ்வாருக்கு நெஞ்சு உருகிவிட்டது. முன்னே பாடிய பாட்டின் வார்த்தை களையே துளித்துளி மாற்றி, ஆனால் அர்த்தம் அடியோடு மாறும்படியாக, பாடினார்.

இப்போதும், “உன்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியாத நான்தான் திரும்பி வந்துவிட்டேனே! இன்னமும் ஏன் யோசிக்கிறாய்? உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு படுத்துக்கொள்” என்று சொல்லாமல், “கணிகண்ணன்தான் திரும்பி வந்துவிட்டானே!” என்று சிஷ்யனைப் பெருமைப்படுத்தி, அவனிருக்கிற இடம் எதுவானாலும் அங்கே அவனை ரக்ஷிப்பதற்காக பகவானும் கூட இருக்கணும் என்று த்வனிக்கும்படியாக ஆரம்பித்தார்.

“கணிகண்ணன் போக்கொழிந்தான்”

“போக்கு ஒழிந்தான்”: இந்த ஊரைவிட்டு பிரயாணம் பண்ணு வதில்லை என்று இங்கேயே தங்கிவிட்டான்.

முன்னே “கணிகண்ணன் போகின்றான்” என்று ஆரம்பித்துப் பாடியவர் இப்போது அதையே கொஞ்சம் மாற்றி – அர்த்தத்திலே ரொம்ப மாறுபட்டாலும், வார்த்தையிலே ஸ்வல்பமாகவே மாற்றிப் பாடிக்கொண்டு போய், “நீயுமுன்றன் பைந்நாகப் பாய் விரித்துக்கொள்” என்று முடித்தார்.

முன்னே, ‘சுருட்டிக் கொள்’ என்று சொன்னதை மாற்றி ‘விரித்துக்கொள்’ என்று முடித்துவிட்டார். அதே வெண்பா மீட்டர். பெரும்பாலான வார்த்தைகள் ஒன்றேதான். ஆனாலும் அப்போது “பாயைச் சுருட்டிண்டு கிளம்பு” என்றவர் இப்போது அதற்கு நேர் எதிராக “பாயை விரிச்சுண்டு படுத்துக்கோ” என்று பகவானிடம் சொன்னார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான், காமரு பூங்கச்சி மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டும்! - துணிவொன்றிச்

செந்நாப் புலவோன் யான் செலவொழிந்தேன், நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் விரித்துக்கொள்.

முன்னே, “நீ கிடக்க வேண்டா” – ” இப்படிப் படுத்துண்டு கிடக்காதே” என்றவர், இப்போது “நீ கிடக்க வேண்டும்” என்கிறார். “நன்னா உன் கிடந்த திருக்கோலத்திலேயே சயனம் பண்ணிக்கோப்பா!”

முன்னே, “யான் செல்கின்றேன்” என்றவர் இப்போது “யான் செலவொழிந்தேன்” என்கிறார். கணிகண்ணன் போக்கொழிந்ததால் இவரும் செலவொழிந்துவிட்டார். ‘செலவு’ என்றால் செல்வது. ‘வரவு செலவு’ என்று ரூபாயைச் சொல்லும்போது மட்டும் இந்த வார்த்தையைச் சொல்கிறோம். “ரொம்பச் செலவாகிறது” என்றால் கையைவிட்டு ரொம்ப ரூபாய் சென்று விடுகிறது, போய்விடுகிறது என்று அர்த்தம்.

“கணிகண்ணனும் போக்கொழிந்தாச்சு, நானும் செலவொழிந்தாச்சு. இனிமேலே இங்கேதான் இருக்கப் போகிறோம். இப்போது ஊருக்கு நேர்ந்த உத்பாதத்தைப் பார்த்துவிட்டதால் இனிமேலே ராஜாவோ ஜனங்களோ யாரும் நாங்கள் இந்த ஊரை விட்டுப் போகிற மாதிரிச் செய்ய மாட்டார்கள்.

அதனால் இங்கேயே இருந்துகொண்டிருப்போம். ஆகையினால் நீயும் இனிமேல் உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளலாம். ஐயோ பாவம்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பெருமாளாகப் பட்ட நீ இந்தச் சின்ன ஆள் என்ன சொல்லுவேனோ, பண்ணுவேனோ என்றா சயனத்தைச் சுருட்டி வைத்துக்கொண்ட கையோடேயே இன்னமும் நின்று கொண்டிருக்கிறாய்? அதை விரித்துக் கொள்ளப்பா!

“பைந்நாகப் பாய் விரித்துக் கொள்!”

இப்படி அவர் வாய்ப்படச் சொன்ன அப்புறந்தான் ஸ்வாமி மறுபடி ஆதிசேஷனை மெத்தையாகப் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார்.

அவர்தான் காஞ்சிபுரத்தின் அநேக தேவாலயங்களில் ஒன்றில் இருக்கிற யதோக்தகாரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.

காஞ்சிபுரத்தில் பச்சை வண்ணப் பெருமாள், பவள வண்ணப் பெருமாள் என்றெல்லாமும் பகவான் இருக்கிறார். இவரோ, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்!

எதற்குக் கதை சொன்னேனென்றால்: சிஷ்யன் அவனே பகவானிடம் போக வேண்டுமென்றில்லை; அவன் குருவினிடத்தில் பூர்ண பக்தி விஸ்வாசம் வைத்துவிட்டால் அவர் பகவானையே அவன் கிட்டே போகப் பண்ணி விடுவார்; அவன் போகிற இடமெல்லாம் பின்னோடேயே பகவானும் போய் ரக்ஷிக்கும்படியாகப் பண்ணிவிடுவார். சிஷ்யனுக்காக குரு ஆர்டர் போட்டுவிட்டால் பகவானே “நில்” என்றால் நிற்பான், “ஓடு” என்றால் ஓடுவான், “படு” என்று அவராகச் சொன்னால்தான் படுப்பான்.

இதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் சில பேர் குருவே போதும், தனியாக ஒரு ஈச்வரன் வேண்டாம் என்றிருந்தது.

தெய்வத்தின் குரல்

ஐந்தாம் பாகம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close