[X] Close

கரிகாற் சோழன் கட்டிய ஆலயம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 10:40 am
  • அ+ அ-

-ஜே.வி.நாதன்

பண்டைக் காலத்தில் பேரூர் அடர்ந்த காடாக இருந்தது. சிவலிங்கம் ஒன்று எறும்புப் புற்றால் சூழப்பட்டிருந்தது. தெய்வப் பசுவான காமதேனு இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டது.

ஒருநாள் அதன் கன்றின் கால், புற்றில் புதைந்து மாட்டிக்கொள்ள, அதை விடுவிக்கக் கன்றானது தன் கொம்புகளால் புற்றைக் குத்திக் களைந்தது. அப்போது உள்ளே இருந்த சுயம்பு மூர்த்தியின் மீது கன்றின் கால் சுவடும், கொம்பின் சுவடும் பட்டு ரத்தம் வரவே, காமதேனு அதைக் கண்டு மிகவும் மனம் வருந்தியது.

இறைவன் அச்சுவடுகளை விரும்பி ஏற்றுக்கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தைத் தஞ்சைக்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். காமதேனுவுக்கு வேண்டிய வரம் அருளிய சிவபெருமான் இங்கே வழிபடும் பக்தர்களுக்கும், வேண்டிய வரங்கள் அருள்வதாக நம்பிக்கை நிலவுகிறது. சிவலிங்கத்தின் மீது இன்றும் காமதேனுக் கன்றின் கொம்பு, காலடி பட்ட சுவடுகள் காணப் பெறுகின்றன.

கோவைக்கு அருகே பேரூரில் அமைந்துள்ள அருள்மிகு பச்சைநாயகி அம்மன் உடனுறை பட்டீஸ்வரசுவாமி திருக்கோயிலை கரிகாற் சோழன் கட்டினார். கோயிலின் தூண்கள், விதானம், சிற்பங்கள் யாவும் கலையம்சத்துடன் காண்போரைப் பிரமிக்க வைக்கின்றன.

ராஜ ராஜ சோழன் காலத்தில் அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன. ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர நாயக்க மன்னர்கள் இந்த ஆலயத்தைப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.

18-ம் நூற்றாண்டில் 63 நாயன்மார்கள் சிலைகளை உருவாக்கி ஒரு மண்டபம் எழுப்பப்பட்டது. சோழ மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்கள், கோயில் சுவரில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

எட்டு சிலைகள்

இக்கோயிலில் உள்ள கனகசபையில் ஸ்ரீநடராஜரும் சிவகாமி அம்மையும் மூலவராகவும் உற்சவராகவும் காட்சி அருளுகின்றனர். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் எட்டுச் சிலைகள் அபூர்வமானவை.

நர்த்தன கணபதி (பட்டி விநாயகர்), ஆறுமுக சுப்பிரமணியர், பிட்சாடன மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, ஆலங்காட்டுக் காளி, அக்னி வீரபத்திர சுவாமி, அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோரின் உருவங்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.

36 தூண்கள், கல் சங்கிலி, சுழல்வது போன்று தோற்றமளிக்கும் தாமரை என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இங்கே உண்டு. இந்த மண்டபத்திலும் முருகன் சந்நிதியிலும் பொது மக்கள் திருமண வைபவங்கள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கனகசபையைக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கிய மன்னர், 17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அழகாத்திரி நாயக்கர் ஆவார்.

பிறவாப் புளி

இங்கு பிரம்மா, மகா விஷ்ணு, அதிமூர்க்கம்மாள் (காளி), காலவ முனிவர் ஆகியோரின் தவத்துக்கு பங்குனி உத்திர தினம் அன்று இறைவன் ஆனந்தத் திருநடனமாடிக் காட்சி கொடுத்தான். இத்தலத்தில் வழிபாடு நிகழ்த்துபவர்கள் மீண்டும் பிறவார் என்பதற்குச் சாட்சியாக, ஆலயத்தின் முன் உள்ள பிறவாப்

3.jpg 

புளி (இந்த மரத்தின் விதைகள் மீண்டும் முளைக்காது. எனவே ‘பிறவாப் புளி’ என்று பெயர்), தோன்றிய காலமே அறிய முடியாத ‘இறவாப் பனை’ இத்தலத்தின் இன்னொரு அதிசயம்!

காமதேனுபுரி, பிறவாநெறித் தலம், ஆதிபுரி என்று பல பெயர்கள் இந்தப் பட்டீஸ்வரர் ஆலயத்துக்கு வழங்கப் பட்டாலும்,  சிதம்பரத்தைப் போன்றே, மார்கழி மாதம் திருவாதிரையில் இங்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதால் அப்பெயர் நிலைத்திருக்கிறது. பங்குனி பிரம்மோற்சவம், தெப்பத் திருவிழா, நாற்று நடவுத் திருவிழா ஆகியவை கோலாகலமாக நடத்தப்படுகின்றன.

பரத விருந்து

ஒவ்வொரு ஆண்டும் பரத நாட்டியக் கலைக்கு ஒரு வாரகாலம் ஒதுக்கப்பட்டு, வெளியூர்கள், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறந்த பரத நாட்டியக் கலைஞர்கள் இங்கு வந்து நடன விருந்து அளிக்கிறார்கள். ஸ்ரீநடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற தலங்களுள் ஒன்றாக இது கருதப்பட்டுப் போற்றப் படுகிறது.

கோயம்புத்தூர் செல்பவர்கள் பேரூர் சென்று அருள்மிகு பட்டீஸ்வரர்-பச்சைநாயகியைத் தரிசனம் செய்து அறம் பொருள் இன்பம் வீடு என எல்லா நற்பேறுகளையும் பெறலாம்.எப்படிச் செல்வது?

கோயம்புத்தூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் பேரூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஏராளமாக உள்ளன.

எப்படிச் செல்வது?

கோயம்புத்தூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் பேரூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. நகரப் பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஏராளமாக உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close