[X] Close

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 81: இறைவன் பழகினாற்போல ஓகம் பழகுக


81

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 10:28 am
  • அ+ அ-

-கரு.ஆறுமுகத்தமிழன்

‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ ‘மீன்கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான்’ போன்றவற்றால் மட்டுமல்லாது சங்க காலத்திலிருந்தே பாடல் பெற்றவன் மன்மதன்:

கனவினால் காணிய கண்படா ஆயின்,

நனவினால் ஞாயிறே! காட்டாய் நீஆயின்,

பனை ஈன்ற மாஊர்ந்து அவன்வரக் காமன்

கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு.

(கலித்தொகை, நெய்தற்கலி, 147:57-60)

காதலித்தவனைக் காணவில்லை; கனவிலாவது பார்க்கலாம் என்றால் காமன் ஏவிய காதல்நோய்க் கொடுமையால் கண்கள் தூங்க மறுக்கின்றன; தூங்காத கண்ணுடையவர்க்கு ஏது கனவு? அவனை நனவிலேனும் காண்பதற்கு வானத்து ஞாயிறே, உதவ மாட்டாயா? மேலிருந்து பார்க்கிற உனக்கு அவன் இருக்குமிடம் தெரியாதா? எல்லாப் பொருட்களையும் ஒளியால் காட்டுகிற உனக்கு அவனைக் காட்டுவது கடினமா? காட்டவில்லை என்றால் என்ன செய்வேன் தெரியுமா? ‘உன்னுடைய மலர் அம்புகளைத் தா, அவற்றை என் காதலன்மீது வீசி அவனை என்னிடம் வரச் செய்கிறேன் என்று காமனின் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவேன்’ என்று ஒருத்தி புலம்புகிறாள்.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றுஒழுகு வான் (குறள் 1197)

-என்று காமனைக் காட்டும் திருக்குறள் காமத்துப் பால். காமம் என்னைத் தடுமாறவும் துன்பப்படவும் வைக்கிறது. தணிவிக்க வேண்டிய தலைவனோ தொழில் நிமித்தமாகத் தொலைவுக்குப் போய்விட்டான். காமத்தில் ஈடுபட வேண்டியது இருவராய் இருக்க, இந்தக் காமப் பயல் எந்த நியாயமும் இல்லாமல் என்மீது மட்டும் அம்புவிட்டுத் தாக்குகிறானே? என் துன்பம் இவனுக்குத் தெரியவில்லையா?

காமத்தைத் தூண்டவும், தூண்டப்பட்ட காமத்தை நிலைபெறவும், களிகூட்டவும் கண்டுரைக்கப்பட்ட காமக்கலை நுட்பங்கள் ஏராளம். அவற்றைக் கற்பிக்க வடமொழியில் வாத்ஸ்யாயனர் காம சூத்திரம் எழுத, கொக்கோகர் ரதி ரகசியம் எழுதினார். தமிழில் இத்தகையதொரு நுட்ப நூல் இல்லாமல் போனால் தமிழர்கள் காமத்தால் பின்தங்கி விடுவார்கள் என்று கருதியோ என்னவோ அதிவீரராம பாண்டியன் என்ற மன்னர் ‘கொக்கோகம்’ என்ற பெயரில் அதை மொழிபெயர்த்தார்.

காமத்தில் முனைப்புத் தரும் மருந்துகளும் மந்திரங்களும் கண்டறியப்பட்டன. மருந்து சரி; அதென்ன மந்திரம்? அதுதான் காமதேவன் காயத்திரி மந்திரம்:

கிலிம் காமதேவாய வித்மகே

புஷ்ப பாணாய தீமகி

தன்னோ அனங்கப் பிரச்சோதயாத்.

காமனை அறிகிறேன்; மலர்க்கணைகள் தொடுப்பானைத் தேனிக்கிறேன்; உருவிலியாகிய மன்மதனை நான் வேண்டுவன தருமாறு இறைஞ்சுகிறேன்.

இந்த மந்திரத்தை நாற்பத்தெட்டு நாட்கள், நாள் ஒன்றுக்கு நூற்றெட்டு முறை சொல்லிவந்தால், கவர்ச்சிகரமாவீர்கள்; தோற்றப் பொலிவு உண்டாகும்; காம இச்சை கூடும் என்று மந்திரப் பலன் சொல்கிறார்கள் சிலர். வேறு சிலரோ காமதேவன் காயத்திரி மந்திரம் என்பது கன்னியைத் தழுவுதற்கு அன்று; கடவுளைத் தழுவுவதற்கு என்று சொல்கிறார்கள்.

கடவுளைத் தழுவுதற்குக் கடவுளையே வேண்டாமல் காமனை ஏன் வேண்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. (கன்னியைத் தழுவுவதிலும் இந்தக் கேள்வி பொருந்தும்). முன்வாசல் திறந்திருக்கப் பின்வாசல் ஏன்?

இந்த விவகாரத்தில் சிலப்பதிகாரம் சொல்வதைப் பார்ப்போம்: கணவனைப் பிரிந்திருக்கும் கண்ணகிக்குத் துணையாய் வந்தவள் தேவந்தி. கணவனைப் பிரிந்த இருவரும் பேசிக்கொள்கிறார்கள்:

கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்

மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள

சோமகுண்டம், சூரிய குண்டம் துறைமூழ்கிக்

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு

தாம்இன்பு உறுவர்; உலகத்துத் தையலார்

போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர்; யாம்ஒருநாள்

ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆயிழையாள்

பீடுஅன்று எனஇருந்த பின்னரே...

(சிலப்பதிகாரம், கனாத் திறம் உரைத்த காதை, 57-64)

காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துக்கு அருகில், தாழம்பூக்கள் மடல்விரிந்து மணம்வீசும் நெய்தற்காட்டில் சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய குளங்களில் குளித்தெழுந்து காமவேள் கோவிலில் கும்பிட்டால் கணவனோடு கூடி இன்புறலாம்; அது மட்டுமல்லாது மறுபிறப்பில் இன்பம் தரும் பூமியில் பிறக்கலாம்; நாமும் போய்க் குளித்துக் கும்பிட்டு வருவோம் என்கிறாள் தேவந்தி. அது பெருமைக்குரிய செயல் இல்லை என்று மறுக்கிறாள் கண்ணகி. ஏன்?

மனைவியைத் தேடித் தானாக வராத கணவனைக் கடவுளைக் கொண்டும் மந்திரத்தைக் கொண்டும் கட்டியிழுத்து வருவது பெண்ணுக்குப் பெருமையா? அது சுயமரியாதையுள்ள செயலா? அப்படியே கட்டி இழுத்து வந்தாலும் அவன் தங்குவானா? இன்ப வாழ்வு நிலைக்குமா? உறுதி உண்டா?

காமத்தில் நுட்பங்களை, மருந்தை, மந்திரத்தை, தெய்வதத்தை முதன்மைப்படுத்தாமல் அன்பை முதன்மைப்படுத்துவதே ஐந்திணை மரபு.

‘காதல் இருவர் கருத்து ஒருமித்து

ஆதரவு பட்டதே இன்பம்’ (தனிப்பாடல் திரட்டு,

ஔவையார் பாடல்கள், 63).

சிவனாரின் எட்டு வீரச்செயல்களில் காமனை எரித்தது ஒன்று. இன்றும் காமன் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது அது. அதன் பின்னுள்ள பழங்கதை இது:

தெய்வத்தை முதன்மைப்படுத்தாமல் சடங்கை முதன்மைப்படுத்தினான் தக்கன். தக்கன் மகள் தாட்சாயணி நியாயம் கேட்கப்போய்ச் செத்தாள். தக்கனைச் சிவன் அழித்தான். தாட்சாயணி மலையரசன் மகள் உமையாளாகப் பிறந்தாள். சிவனைத் திருமணம் செய்துகொள்ளத் தவம் செய்தாள். சிவனோ தென்முக நம்பி (தட்சிணாமூர்த்தி) ஆகி, ஓகத்தில் அமர்ந்து முனிவர்கள் சிலருக்கு வாய்பேசாமல் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தான்.

இந்த நிலையில் தேவர்களுக்குச் சூரபதுமன் என்னும் அரக்கனால் நெருக்கடி. அவனை ஒழிக்கச் சிவனின் மகன்தான் வரவேண்டும். சிவனுக்கோ மகனும் இல்லை; மனைவியும் இல்லை. மணந்துகொள்ள உமையாள் தயாராக இருக்கிறாள். சிவனோ ஓகத்தில் இருக்கிறான். ஓகத்தில் இருக்கும் சிவனைப் போகத்தில் ஆழ்த்தக் காமனைவிட்டு அம்புபோடச் சொன்னார்கள். போட்டான். கோபம் கொண்ட சிவன் காமனை எரித்தான். எரிந்துபோன கணவனை எழுப்பித் தரச் சொல்லி ரதி அழுதாள். உருவமில்லாதவனாகக் காமனை எழுப்பித் தந்தான் சிவன்.

காமன் எரிந்ததையும் எழுந்ததையும் கூத்தாக ஆடியும் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று இலாவணி பாடியும் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. என்ன இருந்தாலும் காமன் எரிந்துதானே போனான் என்பது எரிந்த கட்சி; எரிந்தே போனாலும் திரும்பிவந்து மும்முரமாய்க் காதல் தொழில் செய்துகொண்டுதானே இருக்கிறான் என்பது எரியாத கட்சி. திருமூலர் எந்தக் கட்சி?

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழிஅது போக்கித்

திருந்திய காமன் செயல்அழித்து அங்கண்

அருந்தவ ஓகம் கொறுக்கை அமர்ந்ததே.

(திருமந்திரம் 346)

பலவற்றைப் பற்றித் திரிகிறது மனம்; அதைப் பிறவற்றில் செலுத்தாமல், இலிங்கமாகிய இனப்பெருக்கக் குறியின் வழியில் செலுத்துகிறது காமம். காம வசப்படாமல் தன்வசப்படவே விரும்புவார் நுட்பம், மருந்து, மந்திரம் போன்றவை பழகாது, இறைவன் பழகினாற்போல ஓகம் பழகுக.

ராபின் வில்லியம்ஸ் என்ற அமெரிக்க நடிகர், அவ்வை சண்முகியின் மூலப்படமான Mrs. Doubtfire-ல் நடித்தவர். அவர் வேடிக்கையாகச் சொன்னது இது: கடவுள் மனிதர்க்கு ஒரு மூளை, ஒரு குறி ஆகியவற்றோடு, ஒரு நேரத்தில் ஓர் உறுப்பை இயக்கப் போதுமான அளவு ரத்தத்தை மட்டுமே கொடுத்திருக்கிறார். (God gave man a brain and a penis and only enough blood to run one at a time). திருமூலர் கருத்தும் இஃதே. இயங்க வேண்டியது எது என்று தீர்மானிப்பது இயக்குவார் பொறுப்பு.

(இயக்கம் தொடரும்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close