[X] Close

குலதெய்வக் குழப்பமா? எளிய விளக்கம் இதோ! - ஜோதிடம் அறிவோம்


jodhidam-airvom2-46

  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 11:37 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 46: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

குலதெய்வம் பற்றிய பதிவில் சில சந்தேகங்களைக் கேட்டிருந்தார் வாசகர் ஒருவர். எனவே மீண்டும் குலதெய்வம் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடுவோம்.

குலதெய்வம் குறித்த பதிவில், லக்னத்திற்கு 5 ம் இடம் குலதெய்வத்தைக் குறிக்கும் எனத் தெரிவித்திருந்தேன். அது எந்த ராசியோ அது தொடர்பான தெய்வங்கள் பற்றியும் விளக்கியிருந்தேன்.

அதைப் படித்துவிட்டு வாசகர்கள் பலரும், ‘ஆமாம். என்னுடைய ஜாதகத்தின் 5ம் இடத்தைப் பார்த்தேன். என்னுடைய குலதெய்வம் பெண் தெய்வம் என்று தாங்கள் குறிப்பிட்டது சரிதான்’ என்றும் ‘ஜோதிட சாஸ்திரக் கணக்கு பிரமிக்க வைக்கிறது. எங்கள் குலதெய்வம், முருகக்கடவுள் என்று தெரியும். என் ஜாதகப்படியும் அதுவே சொல்கிறது. எங்கள் குடும்பமே ஆச்சரியப்பட்டுப் போனது’ என்றுமாகப் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதேசமயம் வாசகர் ஒருவர், "எனக்கும் என் மகனுக்கும் வேறு வேறு லக்னம். உங்கள் கூற்றுப்படி குலதெய்வத்தை மாற்றிக் காட்டுமே... இது சரியா,? இதை எழுதுவது ஜோதிடர்தானா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார்.

அவரைப் போலவே இப்படியான சந்தேகம் பலருக்கும் கூட இருக்கலாம். இதில் தப்பேதுமில்லை.

அந்தப் பதிவில் நான் தந்த தகவல் பொதுவானது. அதாவது குலதெய்வம் குறித்து ஜோதிட சாஸ்திரம் இப்படித்தான் விவரிக்கிறது. குலதெய்வமே தெரியாத பலரும் இதுவொரு துருப்புச் சீட்டு போல, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மிகத் துல்லியமாக குலதெய்வம் எது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.

குலதெய்வம் அறியும் முறையை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

இந்தக் குறிப்புகள் மிக மிக முக்கியமானவை. எனவே கவனமாக குறித்துக் கொள்ளுங்கள்.

மேஷம், சிம்மம், தனுசு:- நெருப்பு ராசி

ரிஷபம், கன்னி, மகரம்:- நில ராசி

மிதுனம், துலாம், கும்பம்:- காற்று ராசி

கடகம் ,விருச்சிகம், மீனம்:- நீர் ராசி

இந்த பஞ்ச பூத தத்துவம் குலதெய்வத்தின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆண் ராசிகள்:- மேஷம், மிதுனம் சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

பெண் ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்

இது... நம்முடைய குலதெய்வம் ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்வதற்காக ஜோதிடக் கணிதம் வகுத்துத் தந்திருப்பது!

ஆண் கிரகங்கள்:- சூரியன், செவ்வாய், குரு

பெண் கிரகங்கள்:- சந்திரன், சுக்கிரன்

இரட்டைத் தன்மை:- புதன், சனி, ராகு, கேது

சூரியன், செவ்வாய், கேது :- ‍ நெருப்பு

சந்திரன், சுக்கிரன் :-  நீர்

குரு, புதன் :- நிலம்

சனி, ராகு:- காற்று

சனி:-  கூடுதலாக நிலத் தத்துவத்தையும் பெறுவார்.

இப்போது மேஷ லக்னம் என்று எடுத்துக் கொண்டு பார்ப்போம்.  இதுவும் 75 சதவீதம் வரை மட்டுமே பொருந்தும்.

அப்படியானால் 100 சதவீதம் அறிவதற்கு என்ன வழி?

கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதம் தெரிய வேண்டும். 

மேஷம் :- 5ம் இடம் சிம்மம்--: - 

சூரியன் இருக்க = சிவன், லிங்கம்,

சந்திரன் இருக்க= சக்தி வடிவான அம்பாள்

செவ்வாய் = அக்னி , முருகன், தீ மிதித்தல் முக்கியம் எனக் கொண்ட  தெய்வங்கள்.

புதன்= சூரிய நாராயணர் , மீனாட்சி, வீரராகவர்

குரு= தட்சிணாமூர்த்தி, விஸ்வகர்மா, முனிவர்கள்

சுக்கிரன்= ஆண்டாள், பார்வதி, சக்தி, விஷ்ணு துர்கை

சனி= முனீஸ்வரன், ஐயப்பன், சுடலைமாடன்

ராகு= முனி, காட்டேரி, அங்காளம்மன்

கேது= முனிவர்கள், ஜீவ சமாதி அடைந்தவர்கள். மேலும்  சவுக்கு,புடவை, ஆயுதங்கள் இவற்றை வைத்து வணங்குதல்.

இப்படி 12 லக்கினங்களுக்கும் பார்க்கப்பட வேண்டும்.

இன்னும் புரிந்து கொள்ள எளிய உதாரணம்... இது தந்தை ஒருவரின்  ஜாதகம்-

இதில் லக்னம் கடகம் , 5ம் இடம் விருச்சிகம், அங்கே செவ்வாய் ஆட்சிபலத்தோடு இருக்கிறார். விருச்சிகம் என்பது பெண் ராசி. செவ்வாய் கோப கிரகம். அது நீர் ராசியில் இருப்பதால் கோபம் தணிந்த செவ்வாயாக இருக்கிறார்.

இப்போது பலன்:- கோபம் தணிந்திருக்கும் பெண் தெய்வம். அதாவது உக்கிரத்துடன் இல்லாத தெய்வம். எனவே மாரியம்மன் எனத் தெளிவாகக்காட்டுகிறது.

சரி... ஏன் காளியாக இருக்கக் கூடாது? அல்லது அங்காளம்மன் போன்ற தெய்வமாக ஏன் இருக்கக் கூடாது? என்கிற கேள்வி எழலாம்.

ஆனால் ராகுவின் தொடர்பு இருந்தால் கோபம் தணியாத தெய்வம் என்று சுட்டிக்காட்டும். ஆனால் இங்கு செவ்வாய் தனித்து இருக்கிறார்.

ஆனால் மகன் ஜாதகத்தில் ராகு தொடர்பு உண்டு, ஆனாலும்..... நீங்களே பாருங்கள்....

அப்பாவின் ஜாதகத்தைப் பார்த்தோம். இது அவருடைய மகனின் ஜாதகம் -

மகன் ஜாதகத்தில் கும்ப லக்னம், 5ம் இடம் மிதுனம். அங்கே கிரகம் எதுவும் இல்லை. ஆனால் 5 ம் அதிபதி பாக்ய ஸ்தானமான துலா ராசியில் இருக்கிறார்.

புதனோடு குரு, ராகு, சுக்கிரன் இணைந்திருக்க

இப்போது பலன்... 5ம் அதிபதியாக புதன் வருவதால் திருமால் அவதாரங்களில் ஏதாவது ஒன்று வர வேண்டும். ஆனால் புதன் துலாம் என்னும் பெண் ராசியில் நட்பு வீட்டில் இருக்கிறார்.

அங்கு ராகு இருப்பதால் மற்ற கிரகங்களான குரு, சுக்ரன்,புதன் இவர்கள் என்ன பலன் தர வேண்டுமோ அதை ராகுவே தீர்மானிப்பார். மற்ற பலன்கள் பார்க்க வேண்டாம். குலதெய்வம் பற்றி மட்டும் பார்ப்போம்.

ஆக, ராகு வருவதால் உக்கிரமான தெய்வம். ஆனால் அது பெண் வீடு என்பதால் - பெண் தெய்வம்.

ராகுவுக்கு துலா வீடு நட்பு வீடு. சுக்ரன் ஆட்சியாக இருந்தாலும், புதனுக்கு நட்பு வீடாக இருந்தாலும், குருவுக்கு அது பகைவீடு. எனவே தன் பலத்தை முற்றிலுமாக ராகுவிடம் இழந்து விட்டார்.

ஆக பலம் அடைவது ராகு, சுக்ரன், புதன்.

துலாம் பெண் வீடு, சுக்ரன் பெண், புதன், ராகு(அலி கிரகம்) இரட்டைத் தன்மை.

ஆக தெய்வம் பெண் என்பது உறுதியாகிறது

ராகு உக்கிரமான கிரகம். ஆனால் நட்பு வீட்டில், நண்பர்களோடு இருப்பதால் தன் உக்கிரத்தைக் காட்ட மாட்டார். (உதாரணமாக என்கவுண்ட்டர் போலீஸாக இருந்தாலும் வீட்டிலும் நண்பர்களிடத்திலும்  தன் போலீஸ் கறார்த்தனங்களையெல்லாம் காட்டமாட்டார். அப்படித்தான் இதுவும்... இங்கேயும்!) 

ஆக உக்கிரம் தணிந்த பெண் தெய்வம்  குலதெய்வம் அது "மாரியம்மன்" என்பது உறுதி ஆகிறது (காளியம்மன் என்றுதானே இருக்கவேண்டும் என்பவர்களுக்கு... சென்னையில் பாரிமுனையில் உள்ள சத்ரபதி சிவாஜியும் மகாகவி பாரதியாரும் வழிபட்ட காளிகாம்பாள் கோயில் உள்ளது. இவள், உக்கிரதெய்வமில்லை. சாந்த சொரூபினி. கனிவும் கருணையுமாக சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள் இங்கே!)  

இதை எழுதவும் படிக்கவும் சில நிமிடங்களாகியிருக்கலாம். ஆனால் ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்த சில நொடிகளில் அவரின் குலதெய்வம் எப்படியான தெய்வம் என்றும் எந்தப் பகுதியை இருப்பிடமாகக் கொண்டது என்றும் உறுதியாகச் சொல்லமுடியும்.

கேள்வி எழுப்பிய அந்த வாசகருக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும். இப்போது அவருக்கு மட்டுமின்றி ஏனைய வாசகர்கள் எல்லோருக்குமே ஜாதகம், 5ம் இடம், குலதெய்வம் குறித்தெல்லாம் ஓர் தெளிவு பிறந்திருக்கும் என நம்புகிறேன். எனவே மீண்டும்... அந்த வாசக அன்பருக்கு நன்றி!

- தெளிவோம்

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close