[X] Close

ராகு-கேது: நல்லவர்களா, கெட்டவர்களா?


jodhidam-arivom-2-45

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 09:30 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 45 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம். காலசர்ப்ப தோஷம் என்பது தோஷம்தானா... அல்லது யோகத்தைத் தருமா? இது பலருக்குமான குழப்பம்.

அது எப்படி தோஷம் யோகமாக மாறும்? 

முதலில் கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்குள்ளாக இருந்தால் அது காலசர்ப்ப தோஷம்.

இதில் ராகுவில் தொடங்கி கேதுவில் முடிந்தால் அது காலசர்ப்ப தோஷம். மாறாக கேதுவில் தொடங்கி ராகுவில் முடிந்தால் அது காலசர்ப்ப யோகம். மீண்டும் இதை ஒருமுறை நின்று, நிதானித்துப் படித்துப் பதித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இரண்டுமே தோஷக் கணக்கில் வந்தாலும் யோகத்தையே தரும்.  

ராகுவினால் உண்டாகும் தோஷம்:-

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான கல்வி, வேலை,சொந்த வீடு, திருமணம், குழந்தைச் செல்வம் என அனைத்தும் 32 வயதிற்குள்ளாகவே தந்துவிடும். 32 வயதிற்குப் பின் இந்த அசுர வளர்ச்சி நின்று, நிதானமாக வளர்ச்சியை உண்டாக்கும். சரியாக சொல்வதென்றால், 32 வயதிற்கு முன் நீங்கள் விரும்பிய எதுவும் தானாகவே கிடைத்திருக்கும்.

 அதாவது உங்களை இவை அனைத்துமே தேடி வந்திருக்கும். அது 32 வயதிற்குப் பின் நீங்கள் அவற்றையெல்லாம் தேடி அடைவதாக மாறும். வித்தியாசம் இவ்வளவுதான். 

இவர்கள் 32 வயதிற்குப் பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

இருக்கின்ற வீட்டை விற்று இன்னும் ஆடம்பர வீடு வாங்கலாம் என நினைத்தால் வீட்டை விற்று வருகிற பணம் வேறு வீடு வாங்க முடியாமல் போகும். வேறு செலவுகளை இழுத்துவிட்டு அந்த பணத்தை காணாமல் செய்துவிடும். 

அதேபோல, இருக்கின்ற வேலையை விட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என நினைப்பதும், அல்லது சொந்தத் தொழில் செய்யலாம் என நினைத்து செயலில் இறங்குவதும் தவறான முடிவாகிப் போகும்.  வேலை மாற வேண்டும் என நினைத்தால் மாற்று வேலை உறுதி படுத்திய பிறகுதான் இருக்கிற வேலையை விடவேண்டும். சொந்தத் தொழில் செய்ய ஆசைப்பட்டால் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி திசாபுத்தி நன்றாக இருந்தால் மட்டுமே அதில் இறங்க வேண்டும்.

கேதுவினால் உண்டாகும் யோகம்:-

32 வயதுவரை அனைத்துக் கஷ்டங்களையும் தந்து வாழ்வின் அனைத்து படிப்பினைகளையும் கற்க வைத்து, எது வேண்டும் எது வேண்டாம், எது சரி எது தவறு என்பதையெல்லாம் உணரவைக்கும்.

32 வயதிற்குப் பின் எல்லா யோகங்களையும் தருவார். அதாவது நல்ல உத்தியோகம், நல்ல வாழ்க்கைத்துணை, அருமையான குழந்தைகள், சொந்த வீடு, பல வழிகளில் வருமானம் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் என உண்டாகும். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போய்க்கொண்டிருக்கும்.

பொதுவாக இந்த இரண்டு அமைப்புமே நல்ல பலன்களைத்தான் தரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே திருமண நேரத்தில் காலசர்ப்ப தோஷமாக இருக்கிறதே என்று பயப்படாதீர்கள். குழப்பிக்கொள்ளாதீர்கள். எவர் குழப்பினாலும் சிக்கிக்கொள்ளாதீர்கள். இவற்றால் நல்ல வரன்களை இழக்காதீர்கள்.

மிகப்பெரிய தொழிலதிபர்கள், முக்கியமாக பிரபலமான மருத்துவர்கள், சாதனை மனிதர்கள் பலரும் காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்களே! நீங்களும் சாதிப்பீர்கள் என மனதளவில் நம்பிக்கை வையுங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.

மேலும் வளர்ச்சியைப் பெறவும்,இந்த யோகத்தில் இருக்கும் குறைகளைக் களையவும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

ராகு கேது ஸ்தலமான காளஹஸ்தி ஆலயத்துக்கு முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வாருங்கள். அங்கே அந்த பரிகாரம், இந்த நேர்த்திக்கடன் என்பதெல்லாம் செய்யவேண்டும் என்றில்லை. தலத்தில் நாம் காலடி பட்டாலே போதும். நம் மீது சுவாமியின் கண் பட்டாலே போதும்.

 அடுத்து, ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. மிகப்பிரமாண்டமான திருத்தலம். ஓர் ராகுகால வேளையில், நாகநாத சுவாமியைத் தரிசித்து வாருங்கள்.

இதேபோல் சீர்காழி அருகில் உள்ள  கேதுவின் ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள்.

அதுமட்டுமல்ல...  புற்று உள்ள ஆலயங்கள், மாரியம்மன், நாகாத்தம்மன், காளியம்மன், துர்கையம்மன் முதலான தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.  நன்மைகள் பல மடங்காகக் கிடைக்கப் பெறுவீர்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதற்கு மிகப்பெரிய நற்பலன்கள் கிடைப்பதை வெகுசீக்கிரமே உணருவீர்கள்.

என்ன காரணம்... எதனால் இவ்விதப் பலன் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

நமது மூச்சுக் காற்றானது ராகு கேதுவை குறிக்கிறது. அதாவது மூச்சை உள்ளே இழுக்கும்போது அது ராகு; மூச்சை வெளியே விடும்போது அந்த மூச்சானது கேது.

அதாவது, வாழவேண்டும் என்கிற ஆசையை உண்டாக்குவது ராகு. இந்த வாழ்வே போதும் என்று நினைக்கச் செய்வது கேது.

அதனால்தான் சித்தர்கள் மூச்சை அடக்கும் வித்தையை அறிந்து வைத்திருந்தனர். இடைவிடாது மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதன் மூலம்தான் சித்து வேலைகள் பலவற்றை அவர்களால் செய்யமுடிந்தது. 

மருத்துவக் குறியீடாக இருக்கும் படத்திலும் இரண்டு பாம்புகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதைச் சூட்சுமமாக இந்தப் படமும் விளக்குகிறது நமக்கு!

எனவே, ராகு கேது நன்மை செய்யும் கிரகங்களே தவிர, தீமைகளை மட்டுமே தரும் கிரகங்கள் என்ற கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அப்புறம்... இன்னொரு விஷயம்...

குலதெய்வம் எது என்று ஜாதகத்திலேயே இருக்கிறது என்று எழுதியதற்கு நிறைய வாசகர்கள் வியந்து பாராட்டுகளைத் தெரிவித்திருந்த அதே நேரத்தில், வாசகர் ஒருவர், கடுமையான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

’தந்தைக்கும் மகனுக்கும் வேறுவேறு லக்னம் இருக்கும் போது, 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும் என்பது எப்படி சரியாக வரும்? இந்தத் தொடரை எழுதுபவர் உண்மையில் ஜோதிடர்தானா என்ற கேள்வி எழுகிறது என்று தெரிவித்திருந்தார்.

அந்த அன்பருக்கு மட்டுமல்ல... அனைவருக்கும் பயன்படும்படியாகவும் புரியும்படியாகவும் அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

- தெளிவோம்

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close