[X] Close

நேசம் என்பது எது?


  • kamadenu
  • Posted: 30 May, 2019 11:08 am
  • அ+ அ-

-ஜே. கிருஷ்ணமூர்த்தி

மனம் மற்றும் புலன் ரீதியான உணர்வின் உள்ளடக்கத்தோடு கூடிய எண்ணம் நேசம் அல்ல. எண்ணம் எப்போதும் நேசத்தை மறுக்கவே செய்யும். எண்ணம் என்பது நினைவின் மேல் தோற்றுவிக்கப்பட்டது, நேசமோ நினைவு அல்ல. நீங்கள் நேசிப்பவரைப் பற்றி எண்ணும்போதான அந்த எண்ணம் நேசம் அல்ல.

உங்கள் நண்பரின் பழக்கங்கள், நடத்தை, நீங்கள் உறவு கொண்டிருப்பவருடன் தொடர்புடைய சந்தோஷ, சங்கட சம்பவங்கள், உங்கள் எண்ணம் உருவாக்கும் சித்திரங்கள் அனைத்தும் நேசம் அல்ல. அதன் அடிப்படை இயல்பில், எண்ணம் பிரிக்கும் தன்மையுடையது. காலம் மற்றும் இடம் பற்றிய உணர்வு, பிரிவு மற்றும் துயரம் குறித்த உணர்வு போன்றவை சிந்தனையெனும் செயல்பாட்டில் பிறக்கிறது.

அந்தச் செயல்முறை இல்லாமல் போகும்போதுதான் அங்கே நேசம் இருக்க முடியும். எண்ணம் உடைமையுணர்வை உருவாக்குவது தவிர்க்க முடியாதது. அந்த உடைமையுணர்வு பிரக்ஞைப்பூர்வமாகவோ தன்னிச்சையாகவோ பொறாமையை உருவாக்குகிறது.

பொறாமை இருக்குமிடத்தில் நேசம் இருக்கவே முடியாது. பெரும்பாலான மனிதர்களிடம் இன்னமும் பொறாமையை நேசத்தின் அடையாளமாகக் காண்பது இருக்கிறது. பொறாமை சிந்தனையின் வெளியீடாகும்.

எண்ணத்தின் உணர்வு அம்சமே பொறாமையாக வெளிப்படுகிறது. உடைமைகொள்ளும் உணர்வு அல்லது உடைமைகொள்ளப்படும்போது ஏற்படும் உணர்வு தடுக்கப்படும்போது, உருவாகும் வெற்றிடத்தில் நேசத்தின் இடத்தைப் பொறாமை இடம்பெயர்த்து விடுகிறது.

ஏனெனில் சிந்தனை, நேசத்தின் பாத்திரத்தைப் பாவிக்கும் நிலையில் அனைத்துச் சிக்கல்களும் துயரங்களும் எழுச்சியடைகின்றன. நீங்கள், அவரைப் பற்றி எண்ணமிடாத நிலையில், நீங்கள் அந்த நபரை நேசிக்கவில்லை என்று சொல்லக்கூடும். நீங்கள் ஒரு நபரை எண்ணுவதுதான் நேசமா? நீங்கள் விரும்புவதாக நினைக்கும் நபரைப் பற்றி நீங்கள் எண்ணவேயில்லையெனில், நீங்கள் பீதியாவீர்களா இல்லையா?

இறந்து போன ஒரு நண்பரைப் பற்றி உங்களுக்குச் சிந்தனையே வராமலிருந்தால், உங்களை நீங்கள் விசுவாசமற்றவர், அன்பேயற்றவர் என்று எண்ணிக்கொள்வீர்கள் அல்லவா? அந்த நிலையை நீங்கள் அலட்சியமற்ற உணர்வற்ற நிலை என்று கருதுவதால் அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறீர்கள், ஒளிப்படங்களை வைத்திருக்கிறீர்கள், கை அல்லது மனத்தால் சித்திரம் தீட்டுகிறீர்கள்.

மனத்தின் பொருட்களால் இதயத்தை நிறைக்கும்போது நேசத்துக்கு இடமேயில்லாமல் போகிறது. நீங்கள் ஒரு நண்பருடன் இருக்கும்போது, நீங்கள் அவரைப் பற்றி எண்ணுவதில்லை. அவரது இன்மையில்தான், எண்ணம் இறந்துபோன காட்சிகளையும் அனுபவங்களையும் மறுபடைப்பு செய்யத் தொடங்குகிறது. கடந்து சென்றவற்றைப் புதுப்பிப்பது நேசம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நேசம் மரணமாக, வாழ்வை மறுப்பதாக உள்ளது. நாம் இறந்த காலத்துடன், இறந்ததுடன் வாழ்கிறோம். அப்படி வாழும்நிலையில் நாமும் இறந்தவர்களாகிறோம். அப்படியானதை நாம் நேசம் என்கிறோம்.

சிந்தனை என்னும் செயல்பாடு எப்போதும் நேசத்தை மறுப்பது. அதைப் பற்றிச் சிந்திப்பதில் தான், உணர்வுரீதியான பிரச்சினைகள் வருகிறதே தவிர, நேசத்தில் அல்ல. எண்ணம், நேசத்துக்குப் பெரும் தடங்கல் ஆகும். என்ன இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும் என்பதற்குள் பிரிவினையை உருவாக்குவது சிந்தனைதான். இந்தப் பிரிவினை ஒழுக்கத்தின் அடிப்படையிலானது. ஒழுக்கம், ஒழுக்கமின்மை இரண்டுமே நேசத்தை அறியாது.

சமூக உறவுகளைப் பிணைத்துப் பராமரிப்பதற்காக மனம் உருவாக்கியதுதான் ஒழுக்கம். அது நேசம் அல்ல. நேசத்தைக் கடினமாக்கும் அமைப்பாக ஒழுக்கம் திகழ்கிறது. எண்ணம் நேசத்துக்கு இட்டுச் செல்லாது, எண்ணம் நேசத்தைப் பேணாது. தோட்டத்தில் செழிக்கக்கூடிய செடி அல்ல நேசம். நேசத்தைச் செழிக்கச் செய்யும் அந்த ஆசையே எண்ணத்தின் செயல்பாடுதான்.

நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பின், எவ்வளவு முக்கியமான பாத்திரத்தை எண்ணம் செய்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். எண்ணத்துக்கு அதற்கேயுரிய இடம் உண்டு. ஆனால், அதற்கும் நேசத்துக்கும் உறவே இல்லை.

எது நேசம் என்று நீங்கள் கேட்கலாம்? நேசம் என்பது எண்ணமில்லாத ஒரு இருப்பு நிலை. எண்ணமிடுதலைப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர எண்ணத்தால் நேசத்தைப் பிடிக்க முயல வேண்டியதில்லை. அதற்காக எண்ணத்தை மறுப்பதால் நேசம் வந்துவிடாது. அதன் முக்கியத்துவம் ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட்டால் மட்டுமே எண்ணத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

அதற்கு சுய- அறிவு என்பது மிகவும் அவசியமானது. வீணான, மேலோட்டமான உறுதிப்பாடுகள் உதவா. திரும்பச் செய்தல் அல்லாத தியானமும், வரையறையற்ற விழிப்புணர்வும் எண்ணத்தின் வழிகளை வெளிப்படுத்தும். விழிப்புணர்வற்ற , எண்ணத்தின் வழிகளை அனுபவிக்காத நிலையில் நேசம் சாத்தியமல்ல.

( ஜே. கிருஷ்ணமூர்த்தியின்

‘commentaries on living’ நூலிலிருந்து)

தமிழில் : ஷங்கர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close