[X] Close

‘பூ கொடுத்து’ அருள்பாலிக்கும் பாரியூர் கொண்டத்துக் காளி !


  • kamadenu
  • Posted: 27 May, 2019 08:57 am
  • அ+ அ-

-எஸ்.கோவிந்தராஜ்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வமாகப் போற்றப்படும் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் காத்து வருகிறார். ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தக் குவியும் பக்தர்கள் கூட்டமே, அம்மனின் அற்புதங்களுக்கு சாட்சி. எந்த காரியத்திலும் முடிவெடுப்பதில் குழப்பமிருப்பின், கொண்டத்துக் காளியம்மனிடம் பூகேட்டு, அதன்படி நடந்தால் வெற்றி நிச்சயம் என்று பெருமிதம் கொள்கின்றனர் அம்மனின் பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகே அமைந்துள்ளது பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில். இந்த இடம் புராண காலத்தில் அழகாபுரி என்றும், பாரபுரி என்றும் அழைக்கப்பட்டதாக, கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழமையான ஓலைச்சுவடி இந்த தலத்தின் சிறப்பை விளக்குகிறது.

இங்குள்ள அம்மன், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் என்று நம்பப்படுகிறது. எனவே, பாரியூர் என்று பெயர் மாற்றம் பெற்றதாகவும், இங்கு அருள்பாலிக்கும் கொண்டத்துக் காளியம்மனே, ஊரின் வளமைக்குக் காரணம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால், கோபிசெட்டிபாளையம் என்று பெயர் பெற்றது. அவர் ஒருமுறை ஏழைகளுக்கு கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி, கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு, புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து, அதனுள்ளே குதித்தார்.

அந்தப் புதருக்குள் மறைந்து, தாங்கள் களவாடியப்  பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த திருடர் கூட்டம், புலிதான் பாய்கிறது என்று எண்ணி, அப்பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு ஓடினர். அந்தப்  பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்க வைத்து, அவரது வேண்டுதலை அம்மன் நினைவேற்றினார் என்ற பழங்கதையும் பக்தர்களிடையே உலவுகிறது.

இந்த கோயிலின் துணை கோயிலான அமரப்பணீஸ்வரர் கோயிலிலிருந்து, பல்வேறு  கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாரியூர் நகரின் மீது அந்நியர் படையெடுத்து வந்தபோது, இங்கு வசித்த மக்கள் அனைவரும் பயந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அம்மன் சிலையை பகைவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை.

அதன்பின், தடப்பள்ளி வாய்க்கால் வெட்டப்பட்டு, பாரியூர் பகுதி வயல் வெளியானது. வெகுநாட்களாக சிறு கோயிலாக இருந்து, அதன் பின் தங்கமணிமுத்து வேலப்பக் கவுண்டரின் பெருமுயற்சியாலும், அறநிலையத் துறையின் ஒத்துழைப்பாலும், தற்போதுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில்,  கரும்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இந்தக்  கோயிலின் பிற வரலாற்றுத் தகவல்கள்,  காலவெள்ளத்தில் அழிந்து விட்டன.

கோயில் கட்டமைப்பு!

பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோயிலின் முன்புறம்,  ஐந்து நிலைராஜகோபுரம் கம்பீரமாக  காட்சி யளிக்கிறது. அம்பாளுடன், விநாயகர், மகா முனியப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலின் பிரதான கோபுரம், தெற்கு மூலையில் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி,  கருப்பு பளிங்குக் கற்களாலான வெளிமண்டபம் அமைந்துள்ளது.

கோயிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அம்மனின் வாகனமாக விளங்கும், சிங்கத்தின் வாயில் காணப்படும் பந்து வடிவிலான ஒற்றைக்கல் சிற்பம் வியக்கவைக்கிறது. அதேபோல, அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும், காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்மனின் தலையில் ருத்ரன் உள்ளதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஸ்ரீபொன் காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் ஏழு கன்னிமார் சிலைகளும் காணப்படுகின்றன. இதுதவிர,  ஸ்ரீமகா முனியப்பனின் பிரம்மாண்ட சிலையும் காணப்படுகிறது. இவர், குழந்தை வரம் அளிப்பதுடன், பயத்திலிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மக்களைக் காப்பாற்றி வருவதாக நம்பப்படுகிறது.

இரு சன்னதிகளில் இருந்தும் அளிக்கப்படும் தாயத்துகள், மக்களை தீய சக்திகளிடமிருந்தும்,  நோய்களிலிருந்தும் காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.  இவற்றைத் தவிர, காவல் தெய்வம், பிரம்மா உள்ளிட்ட சிலைகளும்,  கோயில் பிரகாரத்தில் உள்ளன.

அதேபோல,  பிராமினி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, மஹேந்தரி மற்றும் சாமுண்டி  சிலைகளும் காணப்படுகின்றன. இத்துடன், ‘சின்ன அம்மன்’ என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்குள்ளது. மேலும், அருகில் வெள்ளைபளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அமரபநீஸ்வரர் கோயில், ஆதி நாராயண பெருமாள் கோயில், அங்காளம்மன் கோயில்ஆகியவையும்  அமைந்துள்ளன.

இந்தக் கோயிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழாவில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள். குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முன்னணி அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரும் அம்மனின் அருள்பெற இங்கு குவிகின்றனர்.

குண்டத்துக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை,  ராஜராஜேஸ்வரியாக புஷ்பத் தேரில் எழுந்தருள்கிறார் அன்னை. திருவிழாவின்  சிறப்பம்சமாகக் கருதப்படும் இந்நாளிலும்,  பக்தர்கள் கூட்டம் அம்மனைத் தரிசிக்க அலைமோதும். இத்துடன், நவராத்திரி திருவிழாவின்போது ஒன்பது நாட்களும்,  அம்பாள் வெவ்வேறு உருவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோல, சித்திரைத் திருவிழா மற்றும் பொங்கல் பண்டிகை இங்கு விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது.

பூஜை அட்டவணை!

கொண்டத்துக் காளியம்மன் கோயில் நடை காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 4  மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணிக்கு  அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். காலை 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, இரவு 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close