[X] Close

இன்று அஷ்டமி; கஷ்டம் தீர்ப்பார் காலபைரவர்


  • kamadenu
  • Posted: 26 May, 2019 09:46 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

இன்று தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில் பைரவரை வழிபடுங்கள். நம் கஷ்டமெல்லாம் தீர்த்துவைப்பார் காலபைரவர்.

வாழ்வில் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே. எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என வருந்தாதவர்களே இருக்கமுடியாது.

தேவையே இல்லாத எதிர்ப்பு, எப்போதோ வந்த எதிரிகள் என்று நினைத்து நினைத்து மன உளைச்சல்களில் சிக்கித் தவித்து உழல்பவர்கள் ஏராளம். இவர்கள் அனைவருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பவர் காலபைரவர்.

அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகமே சொல்லிவைத்திருக்கிறார்கள்.

பைரவருக்கு உரிய நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி நாளில், அவரை வணங்கி வழிபட்டால், எல்லா எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். தடைகள் யாவும் விலகும். அடுத்தடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும் என்பது ஐதீகம்.

எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி உண்டு. இன்று (26ம் தேதி) தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று, பைரவரை வணங்குங்கள். அவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அனைத்து துக்கங்களையும் வாழ்வின் சகல தேக்கங்களையும் துடைத்தெறிந்து அருளுவார் காலபைரவர்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கு மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குவதும் முடிந்தால் ராகுகால வேளையில் வழிபடுவதும் கூடுதல் பலன்களைத் தரும். எனவே, மாலையில் ராகுகால வேளையில், பைரவரைத் தரிசியுங்கள். இன்னும் பலனும் பலமும் பெறுவீர்கள்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close