[X] Close

81 ரத்தினங்கள்: திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்


81

  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:00 am
  • அ+ அ-

-உஷாதேவி

திருக்கோளூர் பெண் பிள்ளை என்பவள் திருக்கோளூரில் வசிக்கும் ஓர் ஏழைப் பெண். வறுமை, ஆற்றாமை காரணமாக அவ்வூரை விட்டே கிளம்புகிறாள். திருக்கோளூர் திருச்செந்தூருக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட நவதிருப்பதிகளில் ஒன்று.

வைத்தமாநிதி பெருமாள் அருளும் தலம் இது. பரம தரித்திரனையும் பணக்காரனாக்கும் பெருமாள் இவர் என்பது ஐதிகம். நமக்கெல்லாம் குறையாத நிதி ஒன்று உண்டு என்றால் அது நம் வைத்த மாநிதி பெருமாள்தான்.

ஆழ்வார் திருநகரியில் அவதரித்த சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் சீடர் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலம் திருக்கோளூர். இவ்வளவு சிறப்பான ஊரை விட்டுத் தன் முட்டை முடிச்சுகளுடன் அப்பெண் கிளம்புகிறாள். அவளுக்கு எதிரே ஸ்ரீராமானுஜர் சீடர்கள் சிலருடன் திருக்கோளூருக்கு வருகிறார்.

அப்பெண் பிள்ளையைப் பார்த்து அடி பெண்ணே, எங்கே போகிறாய் என்று வினவுகிறார். எல்லோரும் புகும் ஊர் உனக்குப் புறப்படும் ஊர் ஆயிற்றோ என்கிறார் ஆச்சார்ய சுவாமி. 

“இங்கிருந்து ஏன் போகிறாய்?’’ என்று யாரும் என்னைக் கேட்கவில்லை இந்த வைத்தமாநிதி பெருமாளும் கேட்கலையே! கோளூர் வள்ளியும் கேட்கலையே என் சொந்த பந்தங்களும் கேட்கலையே. தெய்வம் போல் நீங்கள் கேட்கிறீர்களே சுவாமி” என்கிறாள்.

தான் சிறப்பானவள் இல்லையே என்று வருத்தப்படுகிறாள். இறைவனை அடையும் வழியான ரகசியமாக வைர வரிகளாக 81 விஷயங்களை அந்தப்  பெண் பிள்ளை சொல்கிறாள். மடைதிறந்த வெள்ளம்போல் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் கிருஷ்ண சரிதம் போன்றவற்றின் சாரத்தை அவள் இந்த 81 விஷயங்களில் சொல்கிறாள்.

நம் ராமானுஜரோ அனந்தனாசு லட்சுமணனாக, பலராமனாக இக்கலியுகத்தில் பவிஷ்யதாச்சரியராக பிறந்து அனைத்தும் அறிந்த புண்ணிய புருஷர் என்று கருதப்படுபவர். அவரிடம் தன் இயலாமையைக் கூறுகிறாள். இதுவே திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம். இந்த வைர வரிகளின் விளக்கங்கள் வாரம்தோறும் இதில் இடம்பெறும்.

தமிழ் வைணவத்தின் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’. வைணவ அறிஞர்கள் அடர்த்தியாகக் காணப்பட்ட திருக்கோளூரில் தயிர் விற்றுக்கொண்டிருந்த பெண்தான் ராமானுஜரிடம் மனிதர்கள் செய்ய வேண்டிய 81 காரியங்களைப் பற்றி ஆற்றாமையுடன் பேசுகிறார். பின்னர் அந்தப் பெண் ராமானுஜரிடம் சீடரானதாகவும் கூறப்படுகிறது.

ராமனின் வாழ்க்கையில் நடந்த நிறைய சம்பவங்களை இந்த ரகசிய நூல் எடுத்தாள்கிறது. கிருஷ்ணரின் வாழ்விலும் வைணவ மகான்களின் வாழ்விலும் நடந்த முக்கியச் சம்பவங்களும் இந்தப் படைப்பில் உண்டு.

(ரகசியங்கள் வரும்…)

கட்டுரையாளர், தொடர்புக்கு:

uyirullavaraiusha@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close