[X] Close

முல்லா கதைகள்: போதனையா? சாப்பாடா?


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:57 am
  • அ+ அ-

முல்லா நஸ்ரூதினை அந்த ஊரின் மதகுரு இரவு உணவுக்காக அழைத்திருந்தார்.

முல்லா அன்று பகல் முழுக்க ஒழுங்காகச் சாப்பிடாத நிலையில் பசியுடன் மதகுருவின் வீட்டுக்குப் போனார். சீக்கிரமாகச் சாப்பாடு போட்டால் வளைத்துக் கட்டிவிடலாம் என்ற எண்ணத்துடன்தான் அவர் வீட்டுக்குள்ளேயே நுழைந்தார்.

மதகுரு, முல்லாவை வரவேற்றுப் பேசத் தொடங்கினார். இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. மதகுரு வெவ்வேறு கதைகளைப் பேசிக்கொண்டேயிருந்தார்.

ஒவ்வொரு நிமிடம் கழியக் கழிய முல்லாவுக்கு பதற்றம் தொற்றியது. “அய்யா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றார்.

மதகுருவுக்கு ஒரே உற்சாகமாகிவிட்டது. முல்லா, தன்னிடம் ஏதோ மத விஷயம் குறித்துக் கேட்டு விளக்கம் பெறப் போகிறார் என்று தயாரானார்.

“நீங்கள் எத்தனையோ விஷயங்களைப் பற்றியும் மனிதர்கள் பற்றியும் என்னிடம் சொன்னீர்கள். அதில் வருபவர்கள் யாராவது சாப்பிட்டார்களா?” என்று கேட்டார் முல்லா.

சொதி எப்படி?

முல்லா நஸ்ரூதினை அந்த நகரத்தின் ஆளுநர் விருந்துக்கு அழைத்தார். ஆளுநரின் மனைவி, முல்லா வுக்கு சிறப்பு உணவாக தேங்காய் சொதியைப் பரிமாறினார்.

முல்லா சாப்பிடுவதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற ஆளுநர், சொதி எப்படி என்று கேட்டார்.

“அற்புதம் ஐயா.” என்று சப்புக்கொட்டியபடி பதிலளித்தார் முல்லா.

“அப்படியா. எனக்கு ஏனோ இன்று சொதி சரியாக வரவில்லை என்று தோன்றியது.” என்றார் ஆளுநர்.

முல்லா சிறிதும் அசரவில்லை. “ நீங்கள் சொல்வது சரிதான். சொதி கேவலமாக இருக்கிறது.” என்றார்.

முல்லாவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் ஆளுநர். “இப்போதுதான் நீங்கள் சொதியை அற்புதம் என்றீர்கள்” என்று கேட்டார்.

“உண்மைதான். நான் இந்த நகரில் வாழும் உங்களுக்குச் சேவை செய்வதற்கானவன். சொதிக்கு அல்ல.” என்று பதிலளித்து அடுத்த கவளத்தைச் சாப்பிட்டார் முல்லா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close