[X] Close

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 78: சிவன் எரித்த மூன்று கோட்டைகள்


78

  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:59 am
  • அ+ அ-

-கரு.ஆறுமுகத்தமிழன்

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! ...

                                       (புறம், 55)

- என்றொரு புறநானூற்றுப் பாட்டு. மலையை வில்லாக்கி, அவ்வில்லுக்குப் பாம்பை நாண் ஆக்கி, ஒரே அம்பைக் கொண்டு மூன்று கோட்டைகளை வீழ்த்தித் தேவர்களுக்கு வெற்றி பெற்றுத் தந்தவன் கறைக்கழுத்தனாகிய பிறைசூடிப் பெருமான்; அவனது இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணைப்போல, சேரர், சோழர் ஆகிய இரண்டு வேந்தர்களைவிடவும் மேலாக இருக்கும் பாண்டியனாகிய மாறா! என்று பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடுகிறார்.

சிவன், பெருமாள், பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்களில் முதல் தெய்வம் சிவனேபோல, பாண்டியர், சோழர், சேரர் ஆகிய மூன்று வேந்தர்களில் முதல் வேந்தன் பாண்டியனே என்று புகழ்வதும் பிறகு சொல்லவேண்டுவன சொல்வதும் புலவர் நோக்கம்.

சிவன் ஏன் முதல் தெய்வம்? ஏனென்றால் அவன் முப்புரம் எரித்தவன். அதென்ன முப்புரம்? வித்தியுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்று மூன்று அசுரர்கள். வரம் பெற்றுப் பொன்னால், வெள்ளியால், இரும்பால் மூன்று பறக்கும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டார்கள்; பறக்கும் கோட்டைகளுக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு தேவர்களைப் பதற அடித்தார்கள். தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் பறக்கும் கோட்டைகளான முப்புரத்தை எரிக்கப் புறப்பட்டான்.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா மலை வில் ஆக,

மூவகை ஆர்எயில் ஓர்அழல் அம்பின் முளிய,

மாதிரம் அழல, எய்து...

                       (பரிபாடல் 5:22-26)

- என்று சிவனாரின் போர்த்திறம் பாடுகிறது பரிபாடல். போருக்குச் செல்லத் தேர் வேண்டாமா? உலகமே தேர் ஆயிற்று. குதிரைகள்? நான்கு வேதங்களே குதிரைகள். செலுத்துவோன்? வேறு யார்? வேதங்களைச் செலுத்துகிற பிரம்மன்தான்.

பறக்கும் கோட்டைகளை அடிப்பதற்குப் படைக்கருவி வேண்டாமா? மேருமலை வில்லாயிற்று. அவ்வளவு பெரிய வில்லுக்கு நாண்? பெரும்பாம்பாகிய வாசுகியே நாண் ஆனது. இவற்றைக் கொண்டு ஓர் எரிஅம்பினைச் சிவனார் எய்ய, மூன்று கோட்டைகளும் எரிந்து அழிந்தன.

முப்புரம் எரித்த இக்கதையில் சில சேர்மானங்கள் உண்டு. போருக்காகத் தேரில் ஏறினான் இறைவன்; தாளமுடியாமல் தேரின் அச்சு முறிந்தது; திருமாலே காளையாகி இறைவனைத் தாங்கினான் என்பது ஒன்று. மற்றொன்று: மலை வில்லாக, பாம்பு நாணாக, திருமாலே அம்பானான் என்பது.

இனி, திருமால் என்னும் அம்பைக் கொண்டுதான் சிவன் முப்புரங்களை அழித்தான் என்றால் எய்தவனைக் காட்டிலும் அம்புக்குப் பெருமை வந்துவிடுமோ என்று எண்ணி, அந்த அம்பையும் எய்யாமல் முப்புரங்களையும் வெறும் சிரிப்பாலே அழித்தான் சிவன் என்று புனையப்பட்டது.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்

ஓர்அம்பே முப்புரம் உந்தீபற;

ஒன்றும் பெருமிகை உந்தீபற.

                  (திருவாசகம், திருவுந்தியார், 2)

ஓர் அம்பு தப்பினால் மற்றொன்றை எய்ய இறைவன் கையில் இரண்டு அம்புகள் இல்லை; ஓர் அம்புதான் இருந்தது. அந்த ஓர் அம்புமே கூடுதல்தான். ஏன்? அதைத்தான் அவர் எய்யவே இல்லையே? அம்பே எய்யாமல் எப்படி முப்புரம் எரித்தார்? ‘அட போங்கப்பா! இந்தச் சில்லறை வேலைக்கு இவ்வளவு முன்னேற்பாடா?’ என்று சிரித்தாராம் இறையனார்; அந்தச் சிரிப்பிலேயே முப்புரங்களும் வெந்து அழிந்தனவாம். திருமால் என்கிற ஒற்றை அம்பையும் செலுத்தாமலே வேலை முடிந்தது. இதை வேடிக்கையாகப் பாடுகிறார் சொக்கநாதப் புலவர்:

சொல்லுக்கு இனிய கழுக்குன்றரே!

உமைச் சொல்லஎன்றால்,

அல்லல் பிழைப்புப் பிழைத்துவிட்டீர்;

முப்புர ஆதியர்மேல்

வில்லைக் குனித்து எய்யமாட்டாமல்

நீர்அந்த வேளைதனில்

பல்லைத் திறந்துவிட்டீர்; இதுவோநும்

படைத் தொழிலே?

             (தனிப்பாடல் திரட்டு,

             சொக்கநாதப் புலவர் பாடல், 19)

திருக்கழுக்குன்றத்து ஈசா! உன்னைப்பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால், சொல்லும்படியாக இல்லையே உன் பிழைப்பு? முப்புரத்து அசுரர்கள்மேல் வில்லை வளைத்து அம்பை எய்வாய் என்று பார்த்தால் பல்லைக் காட்டிப் போய்விட்டாயே? சண்டைக்குப் போன இடத்தில் வில்லைக் காட்டாமல் பல்லைக் காட்டுவதுதான் உன் படைத் தொழிலா?

சிவனின் எட்டு வீரச் செயல்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது முப்புரம் எரித்த கதை. அதைக் குறித்துத் திருமூலர் சொல்வதென்ன?

அப்புஅணி செஞ்சடை ஆதிபு ராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்;

முப்புரம் ஆவது மும்மல காரியம்;

அப்புரம் செற்றமை யார்அறி வாரே?

                                      (திருமந்திரம் 343)

தலையில் நீர்க்கங்கை அணிந்த செஞ்சடையனும் முதற் கடவுளுமான இறைவன் முப்புரங்களை அழித்தான் என்று கதை சொல்கிறார்கள் மூடர்கள். முப்புரம் என்பது என்ன? மும்மலம். இறைவன் அழித்தது மும்மலங்களை என்பதை யார் அறிவார்கள்? பூசி மெழுகாமல் நேரடியாகவே பேசிவிடுகிறார் திருமூலர். நல்லது. மும்மலங்கள் எவை?

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்;

காணும் முளைக்குத் தவிடு,உமி; ஆன்மாவும்

தாணுவை ஒவ்வாமல் தண்டுல மாய்நிற்கும்;

பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

                                           (திருமந்திரம் 2192)

ஆணவம், மாயை, கன்மம் ஆகியனவே மும்மலங்கள். அரிசியை உமி (husk), தவிடு (bran), முளை (germ) ஆகியன பற்றி நிற்பதுபோல, உயிரை ஆணவம், மாயை, கன்மம் ஆகியன பற்றி நிற்கின்றன.

இவை பற்றி நிற்பதால்தான் உயிர் இறைமை அடையாமல் இருக்கிறது. அரிசியைப் பற்றியிருக்கும் உமி, தவிடு, முளை ஆகியவற்றை அவித்தும் குற்றியும் தீட்டியும் நீக்குவதுபோல, உயிரைப் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கினால் உயிர் இறைமை பெறும்.

இவற்றில் ஆணவம் என்பது அறியாமை. உயிர்கள் இயல்பாகவே அறிவாற்றல் உடையவை; அந்த அறிவாற்றலைப் பரந்து விரியவிடாமல் அமுக்கி வைத்துக்கொண்டு அணுவைப்போலச் சிறுமைப்படுத்துவது அறியாமை; அறிவை அணுத்தன்மைப்படுத்துவதால் அது ஆணவம்.

ஆணவத்தைத் திமிர் என்று பொதுப் பொருளில் புரிந்துகொள்கிறோம்; திமிர் என்பது ஆணவத்தின் ஒரு கூறுமட்டுமே. அறியாமையால் விளைகிற பலவற்றில் அதுவும் ஒன்று. பாசி படிந்து பச்சை ஏறிய பித்தளை விளக்கு துலக்கத் துலக்கப் பாசி நீங்கித் துலங்குவதுபோல, அறியாமை படிந்து இருண்டு கிடக்கிற உயிர் அறிய அறிய ஆணவம் நீங்கி அறிவுபெற்றுத் துலங்கும்.

மாயை என்பது சடப்பொருள் (inert matter); உடம்பாகவும் உலகமாகவும் உயிருக்குப் புகலிடம் தந்து நிற்பது. அறிகருவிகளான ஐம்புலன்களையும் அவற்றால் அறியப்படும் பொருள்களையும் உருவாக்கித் தருவது. உடலால் வந்த அறிகருவிகளை மெய்யறிவையும் பேரின்பத்தையும் தேடுவதற்காகப் பயன்படுத்தாமல் பொய்யறிவையும் சிற்றின்பத்தையும் தேடுவதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் கோளாறு.

கன்மம் என்பது மனத்தால், மொழியால், உடம்பால் நாம் செய்கிற வினைகள்—நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகள். வினைகளைப் பற்றுவைத்துச் செய்யும்போது விளைவுகள் நம்மைப் பற்றிக்கொள்கின்றன; பற்றில்லாமல் செய்யும்போது விளைவுகள் நம்மைப் பற்றுவதில்லை. ஆனால், நாம் பற்றில்லாமல் வினைகள் செய்வதே இல்லை என்பதுதான் கோளாறு.

மும்மலங்களே நம்மைப் பதறடித்துப் பறக்கும் கோட்டைகள். அறியாமை சேராமல் அறிவு சேர்வார்க்கு இறையருள் இவற்றை எரித்துத் தரும். அறிவே துணை.

(கோளறுப்போம்…)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close