[X] Close

'10 வருடமாக கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளவே இல்லை; ஏன்? எதனால்? என்ன காரணம்?’


jodhidam-arivom-2-41

  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:54 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 41: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

ஜோதிடம் அறிந்த சிலர் சகடை யோகம் குருவுக்கு சந்திரன் 6-8 ஆக இருப்பதுதானே. ஆனால் நீங்கள் எழுதி வருவது சஷ்டாஷ்டகம் என்னும் தோஷம் பற்றித்தானே. இதை சகடை யோகம் என்கிறீர்களே என்று கேட்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் ஒருவிஷயம்... இரண்டுமே ஒன்றுதான் நண்பர்களே.  வடமொழியில் சஷ்டாஷ்டகம் என்பதுதான் தமிழில் சகடை ஆகும்.

சரி... இந்த சகடை யோகம் திருமண வாழ்வில் என்ன செய்யும்? கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் மனமொத்து வாழ்வது என்பது இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

அப்படியானால் இது மாறவேமாறாதா?

மாறும்... சுப சகடையாக இருந்தால்!

அது என்ன சுப சகடை?

பெண்ணின் ராசி மேஷம் என இருந்தால் ஆணின் ராசி விருச்சிகமாக இருக்க சுப சகடை. ரிஷப ராசி பெண், துலா ராசி ஆண் என்றிருந்தால் இதுவும் சுபம். கடக ராசி பெண், தனுசு ராசி ஆண் இதுவும் சுபம். சிம்ம ராசி பெண்- மகர ராசி ஆண் இதுவும் சுபமே!

இது மட்டுமல்லாமல் மிக மிக மிக முக்கியமானது... 

பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 6 அல்லது 8ல் செவ்வாய் இருந்தாலும்...

ஆணின் ஜாதகத்தில் குருவுக்கு 6 அல்லது 8ல் சுக்கிரன் இருந்தாலும்....

திருமணம் என்பது தாமதமாகும். மண வயதைத் தாண்டிய பிறகுதான் திருமணம் நடக்கும்.  

அப்படி நடந்தாலும் மனமொத்த வாழ்க்கை இல்லாமல் கடமைக்கு வாழ வேண்டி வரும்.

இந்த நிலை மாறுமா? மாறும் என்றால் எப்போது? 

நான் பார்த்த இரண்டு தம்பதிகளின் கதையைச் சொல்கிறேன். நீங்களே புரிந்துகொள்வீர்கள்,

எனக்கு நெருக்கமான நண்பர் அவர். நல்ல வேலை, உயர் பதவி, சிறந்த ஆன்மிகவாதி. ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். திருமணமாகி முதல் பதினைந்து வருடங்கள் சுமூகமாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை. ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி அறையில்தான் வாசம்.

மனைவியின் குடும்ப நிர்வாகத்தில் குறையில்லை. இவரும் சம்பாதித்து, சம்பாதித்ததை வீட்டுக்குக் கொடுத்துவிடுவார். மற்றபடி, இவரும் எதிர்பார்ப்பதுமில்லை. மதிய உணவு டிபன்பாக்ஸில் இருந்தால் எடுத்துச் செல்வார். இல்லை என்றால் வருத்தமோ, கோபமோ படமாட்டார். அவர்பாட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிடுவார்.  

இவர் ஜாதகத்தைக் கொடுத்து என்னிடம் ஆலோசனை கேட்டார். இவர் ஜாதகத்தில் இந்த சகடை யோகம் இருந்தது.

ஆனால் திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுக்காலம் கடந்தா மன வருத்தம் ஏற்படும்? என்ன செய்வது? இந்த சகடையில் இருந்த கிரகத்தின் திசை நடந்தபோது இந்த மன வேற்றுமை வந்தது என தெரிவித்தேன்.

என்ன பரிகாரம் என்று கேட்டார்.  பரிகாரத்தை பதிவின் கடைசியில் சொல்கிறேன். அதற்குள் இன்னொரு குடும்பத்தையும் பார்த்துவிடுவோம்.

அந்தக் குடும்பத்தில், திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகளாக மன ஒற்றுமை இல்லை. காரணம் இந்த சகடையே!

 இந்த தம்பதியினர் ஹனிமூன், பிக்னிக் என எங்கும் சென்றதில்லை.  ஆனால் நேரம் கிடைக்கும் போதும், ஆண்டுக்கொருமுறையோ குல தெய்வக் கோயில் திருவிழாவுக்கு தவறாமல் சென்று வருவார்கள்.

காலம் கனிந்தது. இப்போது இந்த இருவரும் made for each other ஆக வாழ்ந்து வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு பின் இரண்டு குழந்தைகள்.

என்ன நடந்தது? கிரகங்கள் செய்த பாதிப்பை குலதெய்வ வழிபாடு சரி செய்தது. இப்படி ஒரு தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கையே இவர்களை இணைத்து வைத்தது. குலம் தழைக்க குலதெய்வமே துணை.

அதேபோல் இஷ்ட தெய்வ வழிபாடும் நல்ல பலனைத்தரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இப்போது பரிகாரம் என்ன என்பதைப் பார்ப்போம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கச்செய்யும் தலம். பிரிந்த தம்பதி ஒன்று சேரவும், மன வருத்தம் உள்ள தம்பதியும் இந்த ஆலயம் சென்று வந்து தரிசித்தால்,  ஈருடல்ஓருயிராக மாறுவார்கள்.

அடுத்து, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே உள்ள  அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இரவு நடக்கும் பள்ளியறை பூஜை இந்த பூஜை சிறப்புவாய்ந்தது.

எல்லா சிவாலயங்களிலும் பள்ளியறை பூஜை உண்டு என்றாலும், திருவண்ணாமலையில் நடக்கும் பள்ளியறை பூஜை விசேஷமானது.

எல்லா ஆலயங்களிலும் ஈசன்... அம்பிகையின் கர்ப்பக்கிரகம் சென்று அம்பிகையை அழைத்துக்கொண்டு பள்ளியறைக்குச் செல்வார்.  ஆனால்... திருவண்ணாமலையில் அம்பிகை ஐயனின் கர்ப்பகிரகம் சென்று ஈசனை அழைத்துக்கொண்டு பள்ளியறைக்குச் செல்வார். 

இந்தப் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், விவாகரத்து வரை சென்ற தம்பதி, நிச்சயமாக மனம்மாறி மனமொத்த தம்பதியாய், கருத்தொருமித்த கணவன் மனைவியாக ஊரே மெச்சும்படி வாழ்வார்கள் என்பது உறுதி.

அடுத்து திருப்பரங்குன்றம் முருகப்பெருமான். திருமண தாமதம் உள்ளவர்கள் மட்டுமல்ல மன வருத்தமும் கருத்து வேற்றுமையும் உள்ள தம்பதியினரும் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கி வந்தால், வருத்தம் நீங்கிவிடும். கருத்து ஒற்றுமை மேலோங்கத் தொடங்கும்!

பொதுவாகவே முருகனை வணங்கிவந்தாலே எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close