[X] Close

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்ச்சுனேஸ்வரர் கோயில்!


  • kamadenu
  • Posted: 20 May, 2019 08:27 am
  • அ+ அ-

-எம்,நாகராஜன்

சோழ மன்னர்கள் காலத்தில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், அமராவதி ஆற்றங்கரைப் பகுதியில் பல சைவ, வைணவக்  கோயில்கள் கட்டப்பட்டன. மன்னர்கள் தங்கள் நாட்டின் எல்லைகளை வரையறை செய்யவும், பரிகாரங்களுக்காகவும்  கோயில்களைக் கட்டினர். நூற்றாண்டுகளைக் கடந்தும் பல கோயில்களில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. உடுமலையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில், மாவட்ட எல்லையில் உள்ள கடத்தூரில், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது  கோமதி அம்மன் உடனமர் ஸ்ரீஅர்ச்சுனேஸ்வரர் அல்லது திருமருதுடையார் கோயில்.

கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ள இக்கோயிலில்  3 அடக்கு ராஜகோபுரம், கிழக்கு மற்றும் தெற்கில் பலி பீடம், சிவனை பார்த்தபடி பெரிய அளவிலான நந்தி சிலை, பிரகார சன்னதியில் கோமதி அம்மன், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள லிங்கம் சுயம்புவாக உருவாகியுள்ளது. மூலவர் விமானம் 5 அடுக்குகளுடன், 45 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் அழகிய சிற்பங்கள் உள்ளன.

கருவறைக்குள் பாயும் சூரிய வெளிச்சம்!

கோயிலின் கிழக்குப்புறமாக பாயும் அமராவதி ஆற்றில், சூரிய உதயத்தின்போது பிரதிபலிக்கும் வெளிச்சம் 500 அடி தொலைவில் உள்ள சன்னதியில் உள்ள மூலவர் சிலை மீது நேரடியாகப்படும்படியாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நமது முன்னோரின் கட்டிடக் கலைக்கு சான்றாகும்.

கொங்கு சோழர்கள் காலத்தில் வீர சோழன், வீர நாராயணன்,  வீர ராஜேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் இக்கோயிலுக்கு காணிக்கை அளித்துள்ளது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

1302-ல் மூன்றாவது விக்கிரம சோழ திரிபுவன சிங்கன், பிரமேகம் என்ற நோயால் அவதிப்பட்டுள்ளார். அவர், நோய் நீங்குமாறு சங்கமேஸ்வரரை வேண்டி பிரார்த்தனை செய்துள்ளார். குணமடைந்த பிறகு இக்கோயிலுக்கு நிலங்களை தானமாக அளித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வனவாசத்தின்போது,  பஞ்ச பாண்டவர்கள் இக்கோயிலில் தங்கியதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இறைவனை தரிசிக்கலாம். இதேபோல, மாலை 4.30 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

தென் திருமணஞ்சேரி!

இந்தக் கோயிலில் வழிபடுபவருக்கு திருமணத்  தடைகள் நீங்குவதால் இக்கோயிலை  தென்திருமணஞ்சேரி என்றழைக்கின்றனர். இக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அது எங்கு சென்று முடிகிறது, உள்ளே என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆள் நடமாட்டம் இல்லாத சுரங்கப் பகுதியை, வவ்வால்கள் ஆக்கிரமித்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close