[X] Close

தெய்வத்தின் குரல்: அன்னையும் குரு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:58 am
  • அ+ அ-

‘நல்வழிப்படுத்துவது’ என்பதுதானே குருவின் முக்கியமான காரியம்? அதனால் அம்மாவுக்கும் அப்பா மாதிரியே குரு ஸ்தானம் உண்டு. இதையும் ஆசார்யாள் எடுத்துக்காட்டிச் சொல்லியிருப்பதுண்டு.

சித்தே முந்தித் தானே பார்த்தோம், பிள்ளை குணவானாக இருப்பதில் அம்மாவுக்கே ப்ராதான்யம் (பிரதானமான ஸ்தானம்) என்று அவர் சொன்னதை? குணவதியான மாதாவின் கர்ப்பத்தில் ரூபமாகி, அவளிடமிருந்து ஆஹாரம் - பானம் பண்ணிக் குழந்தை வளர்வதாலேயே முக்கியமாக ஒரு ப்ரஜைக்கு குண சம்பத்து ஏற்படுகிறது.

இது அவளுக்கே தெரியாமல் அவள் புத்திரனை நல்வழிப்படுத்துவது!அப்புறம் சின்ன வயசில் அதற்குக் கதை புராணம் சொல்லி, ஸ்தோத்ரங்கள், நீதிப் பாடல்கள் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துகிறாள். 'இப்படிப் பண்ணப்பா, இப்படிப் பண்ணாதேப்பா!' என்று அநேகம் சொல்லிக் கொடுக்கிறாள்.

அவளுடைய நல்ல நடத்தையைப் பார்த்துப் பார்த்தே - அதன் சூட்சுமமான சக்தியாலேயேகூட - பாலப்பிராயத் தில் ஒருத்தன் நல்லவற்றைத் தெரிந்துகொண்டு அந்தப்படி செய்கிறான். ‘தாயைப் போலப் பிள்ளை' என்று வசனமே இருக்கிறது.

கடோபநிஷத்திலே ஒரு இடத்தில் ப்ருஹதாரண்யகத்தையும் எடுத்துக் காட்டி, வேதம் வகுத்துக் கொடுக்கிற விதிமுறையின்படி குருவைப் போலவே அம்மா - அப்பாவுக்கும் - ‘அம்மாவுக்கும்' என்பதைக் கவனிக்க வேண்டும், மாதா - பிதா - குரு என்று மூன்று பேருக்குமே - ‘ப்ரமாண காரணம்' என்ற பெருமை, உரிமை இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ‘ப்ரமாண காரணம்' என்பதற்கு 'அதிகாரபூர்வமான குரு ஸ்தானம்' என்று இங்கே அர்த்தம்.

அதாவது, தாயாருக்கும் குருஸ்தானம் உண்டு. தாயார்களின் பெயரைச் சொல்லி ப்ருஹதாரண்யகத்தில் ஏராளமான ரிஷிகளைத் தெரிவித்திருக்கிறதென்றால், சாந்தோக்யத்திலும் இரண்டு பேரை அந்த மாதிரியே சொல்லியிருக்கிறது.

புருஷ யக்ஞம்

அதிலே ஒருத்தர் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா ‘இதுதான் கிருஷ்ணரைப் பற்றிய earliest reference; அவர் வாஸ்தவமாகவே இருந்த historical personality என்று நிரூபிக்கிற reference என்று படிப்பாளிகள் சொல்கிறார்கள். அது எங்கே வருகிறதென்றால், சாந்தோக்யத்தில் 'புருஷ யக்ஞம்' என்பதைப் பற்றிச் சொல்கிற இடத்திலே. ஒருத்தரை 116 வயசு ஜீவிக்கச் செய்கிற யக்ஞம் அது.

கிருஷ்ணர் 120 வயசுக்கு அதிகமாக ஜீவித்தவர் என்பது கவனிக்கவேண்டியது. அவர் கோர ஆங்கிரஸ் என்ற ரிஷியிடமிருந்து இந்த உபதேசம் கேட்டுக்கொண்டார். கேட்டுக் கொண்டதற்கு அப்புறம் ‘தாகமில்லாதவராக ஆனார்' என்று சொல்லியிருக்கிறது.

அதற்கு அர்த்தம், ‘இந்த உபதேசம் பெற்றுக்கொண்ட பிறகு அவருக்கு வேறே வித்யை எதுவும் தெரிந்துகொள்ளணும் என்று ஆசை போய் விட்டது என்பதே' என்று ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

ஆசை ஒரு தீராத தாகம். ‘த்ருஷ்ணா' என்பது (தாஹம், ஆசை என்ற) இரண்டையும் குறிக்கும். புத்தர் ஆசையை ‘த்ருஷ்ணா' என்றே சொல்வார். அதை ‘தன்ஹா' ‘தன்ஹா' என்ற பாலி மொழியில் பௌத்தப் புஸ்தகங்களில் போட்டிருக்கும்.

‘பர்ணாவதாரமான கிருஷ்ணரா ஆயுர்விருத்தி மாதிரியான ஒரு ஐஹிகமான (இகவுலக) விஷயத்தைத் தெரிந்து கொண்டு அதிலே இவ்வளவு திருப்திப்பட்டார்?' என்று நினைக்கப்படாது. இந்த வித்யையில் ஒரு ஜீவன், தன்னுடைய பஞ்ச பிராணன்களையும் வரிசையாக வயசு ருத்ர - ஆதித்யர்களுக்கு அர்ப்பணம் பண்ணியே, அந்த 116 - வயசு கொண்ட வாழ்க்கையின் முதல், இரண்டாவது, மூன்றாவது பாகங்களைக் கடப்பதாக வருகிறது.

அதற்குள்ளே என்னவெல்லாம் ரகசியமான பாரமார்த்திகத் தத்துவங்களை ஒளித்து வைத்திருக்கிறதோ? '116 வயசு ஆயுசு' என்பதிலேயே என்னென்ன ‘மெடாபிஸிகல்' ரகசியங்கள் ஒளிந்துகொண்டிருக்குமோ? திருட்டு கிருஷ்ணர் அந்த ஆத்மார்த்தமான ரகசிய நவநீதத்தையெல்லாமும் சுவீகரித்துக் கொண்டே திருப்திப்பட்டிருப்பாராக இருக்கும்!

கிருஷ்ணாய தேவகிபுத்ரா

அவர் திருப்திப்பட்டது இருக்கட்டும். அம்மா பேரில் பிள்ளையைச் சொல்வதிலல்லவா இருந்தோம்? இங்கே கிருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது ‘கிருஷ்ணாய தேவகிபுத்ரா' என்றே இருக்கிறது!அவர் வசுதேவர் பிள்ளை என்பதாலேயே பிரஸித்தமான ‘வாஸுதேவ' நாமம் பெற்றவர். 116 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வசுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது.

ஆனாலும் தம்முடைய மாயவித்தனத்திற்கேற்ப, தேவகிபுத்ரர் என்றே இங்கே தம்மை ரிஷிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கிருஷ்ணாவதாரத்தை ஏற்படுத்திய வித்து எதுவோ அதை வசுதேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனசுக்கு அனுப்பி வைத்ததாகத்தான் - பௌதிகக் கர்ப்பமாக இல்லாமல் மானசீக ரீதியில் - பாகவதத்தில் சொல்லியிருக்கிறதே தவிர, சரீர சம்பந்தத்தால் அவர்களை அப்பா, அம்மா என்று சொல்லும்படியாகக் காட்டவில்லை.

ஆனாலும் அவர்களில் தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்துதான் அவரைப் பெற்றிருக்கிறாள். அதனால் அவளுக்குத்தான் ஓரளவுக்காவது மாத்ரு ஸ்தானம் கொடுக்க இடமிருக்கிறது, வசுதேவருக்கு (பித்ரு ஸ்தானம்) கொடுக்க அந்த அளவுக்குக்கூட நியாயமில்லை என்றே பகவான் நினைத்து அப்படிச் சொல்லியிருக்கலாம்.

( தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close