[X] Close

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 77: யோகத்தைப் புகுத்திய திருமூலர்


77

  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:42 am
  • அ+ அ-

-கரு.ஆறுமுகத்தமிழன்

பழங்கதை மரபில் சிவனுக்குப் பல மக்கள். பிள்ளையார், முருகன் அல்லாது, மோகினி உருவெடுத்த பெருமாளோடு சிவன் கலந்ததால் தோன்றிய ஐயப்பன், சிவனின் கண்களை பார்வதி பொத்தியபோது பார்வையில்லாமல் பிறந்த அந்தகன், அந்தகனைக் கொல்லும்போது அவன் குருதி நிலத்தில் விழுந்தால் இன்னும் பல அந்தகர்கள் தோன்றிவிடுவார்கள் என்ற வரத்தால் குருதி நிலத்தில் விழுந்துவிடாமல் வாங்கிக்கொள்ள நிலத்துக்குள்ளிருந்து மற்றொரு கோளாய்த் தோற்றுவித்த செவ்வாய், இந்திரனை எரிப்பதற்காகத் தோன்றிய நெருப்பிலிருந்து பிறந்த சலந்தரன் இவர்களோடு, சிவனுக்குப் பெண்மக்கள் சிலரும் சொல்லப்படுகிறார்கள்.

சிவனுடைய மனத்திலிருந்து பிறந்தவளும் நாகத் தெய்வமுமான மானசை, கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரத்திடம் பார்வதி பெண்பிள்ளை வரம் கேட்டதால் பிறந்த அசோகசுந்தரி என்னும் பாலா திரிபுரசுந்தரி, சூரசம்ஹாரம் செய்ய முருகனுக்குக் கருவி வழங்கவேண்டிப் பார்வதி தன் ஆற்றலில் இருந்து பிறப்பித்த சோதி என்னும் வேலாயி.

பார்வதியால் பிறந்த அசோகசுந்தரி என்னும் பாலா திரிபுரசுந்தரியைத் தவிர்த்து, சிவனின் ஏனைய மக்களில் இருவர் அசுரர்; பிறரோ பழங்குடி வழிபாட்டு மரபுகளைச் சேர்ந்தவர்கள். செவ்வாய் வழிபாடு செவ்வேளாகிய முருக வழிபாட்டோடு ஒன்றுவது. சோதி என்னும் வேலாயி வழிபாடும் அவ்வாறே. சாத்தன் என்கிற ஐயப்பன், ஆனைக் கடவுளாகிய பிள்ளையார் இருவரும் பௌத்த, ஆசீவக மரபுகள் தொய்ந்தபோது சைவத்தால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டவர்கள். அதை விளக்கப் புகுவது வேறொன்று விரித்தல் ஆகும் என்பதால் விடுவோம்.

அசுரர்களாக ஆகமுடியுமா?

சிவனின் மக்களாகிய இவர்களில் தெய்வநிலை பெற்றவர்களைத் தவிர்த்துப் பார்க்க அந்தகன், சலந்தரன் ஆகிய இரு அசுரர்கள் எஞ்சுகிறார்கள். இனி நமக்குக் கேள்வி, இறைவனுக்குப் பிறந்தவர்கள் எப்படி அசுரர்கள் ஆக முடியும்? இறைவனுக்குப் பிறந்த மக்கள் சிறுதெய்வங்களாகவேனும் ஆவதுதான் மரபேயன்றி, அசுரர்கள் ஆவது மரபில்லையே? எனில் இவர்கள் எப்படி ஆனார்கள்?

அந்தகன், இரணியாட்சனால் வளர்க்கப்பட்டுச் சிற்றப்பன் இரணியகசிபுவின் மகன் பக்த பிரகலாதனால் அரசுரிமை மறுக்கப்பட்டவன். நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. அரசுரிமை கோரும் அரசமக்கள் இருவரில் ஒருவர் அரசுரிமையைக் கைப்பற்றி மற்றவர் ஏமாந்துபோனால், ஏமாந்தவர் உதவி தேடி வடக்கே போவார்; வடக்கின் உதவியோடு வந்து அரசுரிமையைக் கைப்பற்றுவார் அல்லது பங்காளியோடு பங்கிட்டுக் கொள்வார்.

எடுத்துக் காட்டாக இதைக் கருதலாம்: மதுரையின் மன்னன் குலசேகர பாண்டியன் காலமான பிறகு, அவன் மக்களாகிய சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் அரசுரிமைச் சண்டையிட்டார்கள். வீரபாண்டியன் அரசுரிமை கைப்பற்றிக்கொண்டான்.

ஏமாந்துபோன சுந்தரபாண்டியன் வடக்கே போய் இசுலாமியத் தளபதி மாலிக் கபூரின் துணைதேடிக் கொண்டுவந்து நாற்காலி பெற்றுக்கொண்டான். அதேதான் அந்தகன் கதையும். வடக்கு நோக்கித் தவம் செய்தான்; வரம் பெற்றான்; ஆட்சி அமைத்தான்; பக்தி செய்யாது அசுரத்தனம் செய்தான்; சிவனார் மகனாயினும் அழிந்தான்.

சலந்தரன் கதை வேறு. இந்திரன் போகும் வழியில் ஓகி ஒருவர் ஓகத்தில் இருந்தார். ‘விலகு’ என்றான் இந்திரன். தேனிப்பில் இருந்த ஓகி கவனிக்கவே இல்லை. ஆத்திரம் தாங்காத இந்திரன் தன் இடியாயுதத்தால் ஓகியை அடிக்க, இடியாயுதம் பொடிப்பொடியாயிற்று. ஓகி எழுந்தார்; நெற்றிக்கண் திறந்தார்; இந்திரன் மிரண்டான்; பொறுத்தருளக் கேட்டான்.

இறைவன் பொறுத்தான்; திறந்த கண்ணிலிருந்து வெளிவந்த நெருப்பு இந்திரனைப் பொசுக்காமல் கடலில் போக்கினார். கங்கையைச் சேர்ந்த நெருப்பு காங்கேயன் என்னும் முருகன் ஆனதுபோலக் கடல் என்னும் சலத்தில் சேர்ந்த நெருப்பு சலந்தரன் என்னும் அசுரன் ஆயிற்று.

கடல்அரசன் வருணன் சலந்தரனை வளர்த்தான். வீரனாக வளர்ந்த சலந்தரனிடம், உன் அப்பன் கடல்அரசனின் வயிற்றைக் கலக்கி உன் குலச்சொத்தான கடல் அமுதத்தைத் தேவர்கள் கொள்ளையிட்டார்கள் என்று நாரதன் கொளுத்திப்போட, பழிவாங்கும் கோபத்திலும் இழந்த சொத்தைக் கைப்பற்றும் வேகத்திலும் சலந்தரன் தேவர்களைப் பந்தாடினான்.

தேவர்கள் வழக்கம்போலத் திருமாலிடம் சரண் புகுந்தார்கள். திருமாலின் வீரம் சலந்தரனிடம் செல்லவில்லை. சலந்தரன் மனைவியான விருந்தை (துளசி) வேறு திருமால் பக்தை. திருமாலும் தோற்ற நிலையில் இந்திரன் சிவன் இருக்குமிடத்தில் ஒளிந்துகொண்டான். தேடிப் போனான் சலந்தரன். எதிர்ப்பட்டார் சிவன்.

சண்டைக்கு அழைத்தான் சலந்தரன். கால் பெருவிரலால் நிலத்தைக் குழித்துச் சக்கரம் வரைந்தார் சிவன். வீரன் என்றால் தரைச் சக்கரத்தைத் தூக்கித் தலையில் வைத்துக்காட்டு என்றார். அரும்பாடுபட்டுச் சக்கரத்தை நிலத்திலிருந்து பெயர்த்து இளவட்டக் கல் தூக்குவதைப்போலக் கட்டியணைத்துத் தூக்கித் தோள்வரைக்கும் கொண்டு வந்தான் சலந்தரன். தோளுக்குப் போன சக்கரம் அவன் சங்கை அறுத்தது. செத்தான்.

ஆயிரத்தை நிறைவு செய்த திருமால்

இப்படி ஒரு சக்கரப்படை இல்லாமல் அல்லவா குன்றிப் போனோம் என்று கருதிய திருமால் சக்கரத்தைச் சிவனிடமிருந்து பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளைக் கொண்டு வழிபடத் தொடங்கினான். ஆயிரத்தில் ஒன்று குறைந்தது. தன் தாமரைக் கண்களில் ஒன்றைப் பறித்துவைத்து ஆயிரத்தை நிறைவு செய்தான். சிவன் மகிழ்ந்து சுதரிசனச் சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கினான்.

சலம்உடைய சலந்தரன்தன்

உடல்தடிந்த நல்ஆழி

நலம்உடைய நாரணற்குஅன்று

அருளியவாறு என்னேடீ?

நலம்உடைய நாரணன்தன்

நயனம்இடந்து அரன்அடிக்கீழ்

அலராக இடஆழி

அருளினன்காண் சாழலோ!

(திருவாசகம், திருச்சாழல், 18)

சலந்தரனைக் கொன்ற சக்கரத்தை நாராயணனுக்கு அளித்தானே இறைவன், என்ன காரணம்? நாராயணன் தன் கண்ணையே பறித்துத் தாமரையாக இறைவன் திருவடியில் இட்டான் என்பதுதான் காரணம் என்று வைணவத்தைச் கீழ்ப்படுத்திச் சைவம் மேம்பட்ட பெருமையைப் பழங்கதைகள் பேச, திருமூலர் பேசுவது என்ன?

எங்கும் கலந்தும்என் உள்ளத்து எழுகின்ற

அங்க முதல்வன் அருமறை ஓதிபால்

பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்

அங்கு விரல்குறித்து ஆழிசெய் தானே.

(திருமந்திரம், 342)

எங்கும் கலந்திருப்பவன்; என் உள்ளத்தில் எழுகின்றவன்; அங்கங்களில் முதல்வன்; அரியவற்றை ஓதுகிறவன்; அப்பேர்ப்பட்டவனிடம் சலந்தரன் போர் செய்ய வந்தான். இவனோ விரலால் சக்கரம் வரைந்து வென்றான்.

உடம்பில் இயங்குகிற பத்து வகைக் காற்றுகளில் அபானன் என்கிற முக்கல் காற்று எப்போதும் கீழ்நோக்கியே இயங்கும்; நீர்மையான சலத்தையும் மலத்தையும் விந்தையும் பிள்ளையையும் முக்கிமுக்கி வெளியேற்றுவதற்கே வேலைசெய்து உயிராற்றலைக் குறைக்கும். கீழ்நோக்கி இயங்கும் அபானனை மேல்நோக்கி இழுத்துப் பயன்கொள்ள அடஓகத்தில் சில கட்டுமுறைகள் சொல்லப்படுகின்றன. முப்பெரும் கட்டுகள் (பந்தங்கள்) என்று சொல்லப்படும் அவை மூலக் கட்டு, ஒட்டியாணக் கட்டு, சலந்தரக் கட்டு ஆகியன.

மூலக் கட்டு என்பது மூலத்தைச் சுருக்கி மேல்இழுத்து அபானனை மேலேற்றுதல். ஒட்டியாணக் கட்டு என்பது வயிற்றைச் சுருக்கி மேல்இழுத்து அபானனை இன்னும் மேலேற்றுதல். சலந்தரக் கட்டு என்பது கழுத்துத் தசைகளைச் சுருக்கித் தாடையைக் கழுத்தெலும்பில் முட்ட வைத்து, அபானனை முண்டத்துக்குள்ளேயே (torso) மறித்தல்.

நீர்மையனாகிக் கீழ்நோக்கி ஓடும் அபானனை மூலத்திலும் வயிற்றிலும் கழுத்திலும் குழிவுசெய்து அழுத்தி மேலேற்றி மடக்கி, நீரிழிவு நேராமல் சலதாரைகளைக் கட்டுப்படுத்துதலே சலந்தர வதம் என்று புராணத்துக்குள் ஓகம் புகுத்துகிறார் திருமூலர்.

(நெறியில் புகுவோம்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close