[X] Close

முல்லா கதைகள்: குளிர் நாள்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 10:56 am
  • அ+ அ-

அது ஒரு குளிர்கால இரவு. நஸ்ரூதின் எளிய ஆடைகளுடன் தன் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். குளிருக்கு ஏற்ற கம்பளியைச் சுற்றி அடுக்கடுக்காகச் மேலுடைகளை அணிந்திருந்த மனிதன் முல்லாவைப் பார்த்து, “எனக்கு இத்தனை ஆடைகள் போட்டும் குளிர்கிறது. நீங்கள் வெற்று மார்புடன் அமர்ந்திருக்கிறீர்களே. உங்களைக் குளிர் வாட்டவில்லையா?” என்று கேட்டான்.

“ஆமாம்.” என்றார் நஸ்ருதீன். “எனக்குக் கூடுதலாக ஆடைகள் அணிவதற்கு இல்லை. அதனால் எனக்குக் குளிரை அனுபவிப்பதற்கான வசதியும் இல்லை. உங்களுக்கு நிறைய ஆடைகள் உள்ளன. குளிரை நீங்கள் அனுபவிக்கும் வாய்ப்பும் உள்ளது.” என்றார் முல்லா.

முல்லா திருடிய காய்கறிகள்

யாரோ ஒருவரின் தோட்டத்துக்குள் ரகசியமாக நுழைந்த முல்லா, தான் வைத்திருந்த சாக்கில் காய்கறிகளைப் பறித்துப் போட ஆரம்பித்தார். அப்போது அங்கு தற்செயலாக வந்த தோட்டத்தின் உரிமையாளர், இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.

“புயல்போல வந்த காற்று என்னை இங்கே கொண்டு போட்டுவிட்டது.” என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார் முல்லா.

“சரிதான். ஆனால் கீழே கிடக்கும் காய்கறிகளுக்கு என்ன காரணம்?” என்று கேட்டார் தோட்டக்காரர்.

“மீண்டும் என்னை புயல்காற்றுத் தூக்கிப் போகாமலிருக்க நான் காய்கறிச் செடிகளைப் பிடிக்க வேண்டியதாகிவிட்டது.” என்று சளைக்காமல் பதிலளித்தார் முல்லா.

“அதெல்லாம் சரிதான். உன்னுடைய சாக்குக்குள் காய்கறிகள் போனது எப்படி?” என்றார் தோட்டக்காரர்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைத்தான் யோசித்துக்கொண்டே இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்” என்று சாவகாசமாகப் பதிலளித்தார் முல்லா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close