[X] Close

அரிதான அரி அவதாரம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 10:47 am
  • அ+ அ-

நரசிம்ம ஜெயந்தி: மே 17

நளினி சம்பத்குமார்

“நரசிங்கப் பெருமாளே. எனக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்துவிட்டது. அது என்ன தெரியுமா? நீ ஒருவன் என்னைக் காக்க வேண்டும் என முடிவுசெய்து அடியேனைக் காக்க முற்பட்டுவிட்டால், அடியேன் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

நீ காக்கக் கூடாது என முடிவெடுத்து விட்டாயானால், அடியேன் வேறு தெய்வங்களை நாடுவதில் எந்தப் பலனும் இல்லை. வேகவதிக் கரையில் எழுந்தருளி இருக்கும் உன்னையே எந்நாளும் சரணடைகிறேன்” என்று ஸ்வாமி தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் நரசிம்மரைக் கொண்டாடுகிறார். லக்ஷ்மி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.

தன்னைச் சரணடைந்தவர்களின் கஷ்டங்களை நரசிம்மர் வேகமாகப் போக்கி விடுவார். நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை. நரசிம்மரின் நட்சத்திரம் ஸ்வாதி. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியான வாயு பகவான் வேகத்துக்குப் பெயர் போனவர். அந்த நட்சத்திரத்தில்தான் நரசிம்மர் தோன்றினார்.

வைகாசி மாதத்திலே மாலை வேளையிலே, சதுர்த்தசி திதியிலே, விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரமாக சிங்க முகமும், மனித உடலும் கொண்டு பாலகன் பிரகலாதனின் பக்தியை மெச்சி ஒரு தூணிலிருந்து அவர் தோன்றினார்.

வேகமாகப் பலனைக் கொடுக்கக் கூடிய தேவதை வாயு. தானும் அதேபோல வேகமாகப் பலனைக் கொடுக்கக்கூடிய பெருமான் என்பதைக் காட்டத்தான் சுவாதி நட்சத்திரத்திலேயே தோன்றினார் நரசிங்கப் பெருமாள்.

உண்மைத் தூற்றலா?

பகவானுக்கு அனுக்ரகம் பண்ண மட்டுமே தெரியும், அனுக்ரகம் செய்வது மட்டுமே தன் ஆசை அவா எல்லாம். திரெளபதியைக் காப்பாற்றியது யாம் அல்ல எம் நாமமே என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. வாயளவில் நாமத்தைச் சொல்லிவிட்டாலே போதும், அவர்களை நான் அனுக்ரகம் பண்ணி விடுவேன் என்று சொல்லும் பெருமாள், இரண்யகசிபுவைத் தன் மடியில் இருத்திக் கொண்டபோதுகூட, உடனடியாக அவனைக் கிழித்துவிட வில்லையே…

இரண்யகசிபுவின் இதயத்தின் ஒரு ஓரத்தில் எங்காவது தன் மீது துளி பாசம், பக்தி வைத்திருக்கிறானா எனப் பரிசோதித்துப் பார்த்ததாகச் சொல்வார்கள். அவன் இத்தனை நாள் தம்மைத் தூற்றியது, தம்மை நிந்தித்துப் பேசியது எல்லாமே வாயளவிலா அல்லது இதயத்தளவிலா என்று சிங்கப் பெருமாள் பார்த்தாராம்.

வாயளவில்தான் நிந்தித்தான் என்றால் அவனை விட்டுவிடுவோம் என்று நினைத்த கருணைக் கடல் அவன். ஒருவன் தன்னை வாயளவே கூப்பிட்டால்கூடப் போதும் ஓடோடி வந்துவிடுவேன் என்கிறான்.

தெள்ளிய சிங்கமாகிய அப்பெருமானின் இரு விழிகளில் ஒரு விழி காருண்யத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்யகசிபுவின் மீது ஒரு கண்ணால் கோபக் கணை வீசிக் கொண்டிருந்தாலும், தன் பக்தனான பிரகலாதனின் மீது மறு கண்ணால் கருணையை மட்டுமே பொழிந்துகொண்டிருந்தவன் அவன்.

உண்மை பக்தி

'என் பெருமாள் என்னை கைவிடவே மாட்டார்' என்ற மகா விசுவாசத்தை பிரகலாதனைப் போல நாமும் கொள்வோம். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என மகா விசுவாசத்தோடு சொன்ன அந்தப் பாலகனின் வாக்கு பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காகவே தூணிலிருந்து வந்து காட்டிய நரசிங்கப் பெருமாளை நாமும் சரணடைவோம், நன்மை எல்லாம் பெறுவோம். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் அந்த உண்மையான பக்தியை மட்டும்தானே, தவிர வேறெதுவும் இல்லையே?

சரணாகதி வத்சலனான அப்பெருமான் நம்மை நிச்சயம் காப்பாற்றி நற்கதி அருளுவார் என்று நம்பிக்கை கொள்வோம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close