[X] Close

தெய்வத்தின் குரல்: ஆதிசங்கரர் பரிந்துரைத்த ஞானக்கொடை


  • kamadenu
  • Posted: 09 May, 2019 11:44 am
  • அ+ அ-

-Mohamed Salman

கர்மத்திலிருந்து ஞானத்துக்குப் போக ஈச்வர கிருபை வேண்டும்; இதைக் கர்மா எல்லாம் போய் சன்னியாசம் வாங்கிக் கொள்வதையே முக்கியமாக விவரிக்கும் (கீதையின்) கடைசி அத்தியாயத்தில் ஆசார்யாள் சொல்கிறார்.

இதற்கு முதல்படி இரண்டாம் அத்தியாயத்தில் ஆரம்பிக்கிறது. அங்கே முதலில் ரொம்பவும் ஞானவேதாந்தத் தத்துவங்களைச் சொல்லிவிட்டு, “இதுவரை சாங்கியம் சொன்னேன். இனிமேலே யோகம் சொல்கிறேன்” என்று, கர்ம யோகத்தைப் பற்றி பகவான் ஆரம்பிக்கிறார்.

சாதாரணமாக சாங்கியம் என்றால் கபிலர் சொன்ன சாங்கிய சாஸ்த்ரமென்றும், யோகம் என்றால் பதஞ்சலி சொன்ன ராஜயோகமென்றும் நினைப்போம். இங்கே பகவானோ ஞான மார்க்கத்தையே சாங்கியமென்றும், கர்ம மார்க்கத்தை யோகமென்றும் பெயர் கொடுத்துச் சொல்கிறார்.

இப்படி ஸ்வகர்மாநுஷ்டானத்தைப் பற்றில்லாமல் செய்யும் யோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே, “இது கர்மா செய்கிற யோகமானாலும் இதுவேதான் கர்ம பந்தத்தை அறுக்கிறது” என்கிறார்.

ஆசையின் மேலே, பலனை உத்தேசித்து கர்மா பண்ணினால் அது சம்சாரப் பந்தத்தை உண்டுபண்ணுகிறது. ஆசையை விட்டு, பலனை உத்தேசிக்காமல், லோக க்ஷேமத்துக்காகவும், சித்த சுத்திக்காவும் சாஸ்திரிய கர்மாவைச் செய்தால் அது பந்தத்தை அறுக்கிறது. ‘இம்மாதிரி அறு அப்பா’ என்றுதான் அந்த சுலோகத்தில் பகவான் சொல்லியிருக்கிறார், ‘கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி’ கர்மக் கட்டை அறுத்துப் போடுவாய்” என்கிறார்.

இங்கேயும் அவர் சொல்லாவிட்டாலும் தாம் சொல்லாமலிருக்கக் கூடாது என்று ஆசார்யாள் நினைத்துத் தம்முடைய பாஷ்யத்தில், ‘ஈச்வராநுக்ரஹத்தைக் காரணமாகக் கொண்டு ஞானத்தை அடைந்து தர்ம அதர்மங்கள் எனப்படுகிற கட்டான கர்மாக்கட்டை அறுப்பாய்’ என்று விளக்கியிருக்கிறார்.

அதாவது கர்ம யோகம் அதுவாகவே பலன் தராமல் ஈச்வரன்தான் பலதாதாவாக இருப்பதை நிச்சயப்டுத்துகிறார். இங்கே இன்னொரு முக்கியமான விஷயம். ‘ஈச்வர ப்ரஸாத நிமித்த’ என்பதாக ஈச்வராநுக்ரஹம் என்ற காரணத்தைச் சொல்வதோடு மட்டும் ஆசார்யாள் நிறுத்தவில்லை.

ஸ்வதர்ம கர்மாவைப் பண்ணினவனின் கர்மாக்கட்டை (அதாவது பூர்வ வினைத்தளையை) ஈச்வரன் வெட்டிவிடுவது எப்படியென்றால், ஜீவனுக்கு ஞானப்ராப்தி உண்டாக்குவதாலேயே இப்படி அவன் செய்கிறானென்று தெளிவு செய்கிறார்.

 “ஈச்வர ப்ரஸாத நிமித்த ஞான ப்ராப்தே:” என்று பாஷ்யத்தில் இருக்கிறது. கர்மம் போவதை விட ஞானம் வருவது முக்கியம். ஞானத்தை அடைவதற்கு வழியாகவே ஒருவன் கர்மாவைப் போக்கிக் கொள்வதற்கு ஈச்வரன் அநுக்ரஹிக்கிறான் என்ற அபிப்ராயத்தை ஆசார்யாள் சந்தேகமின்றி வெளியிட்டிருக்கிறார்.

1.jpg 

குருவை அடைந்தால் தெரியும்

இப்படியாக கீதையில் கர்ம யோகத்துக்கு விதை விதைக்கிற ஆரம்பத்திலிருந்து அது தானாகவே பட்டுப்போய் நிஷ்கர்மத்திலே கொண்டுவிடுகிற முடிவுவரை ஈச்வர க்ருபையே இந்த யோகத்தினால் கர்ம நாசத்தைப் பண்ணி ஜீவனை ஞானத்தில் சேர்க்கிறது என்று ஆசார்யாள் காட்டியிருக்கிறார்.

அப்படி முடிக்கிற இடத்திலே “புத்தியால் எப்படி ஆத்மாவைப் பிடிக்க முடியும்?” என்று கேட்கிறவர்களுக்குப் பதிலாக, “குரு ப்ரஸாதத்தை அடைந்து தன்னிலேயே ப்ரஸாதம் பெறுகிறவர்களுக்கு இது எப்படி என்று தெரியும்” என்கிறார்.

“குரு ப்ரஸாதம்” என்கிற இடத்தில் ப்ரஸாதம் என்றால் ‘அநுக்ரஹம்’ என்று அர்த்தம். “ஆத்ம ப்ரஸாதம்” என்கிற இடத்தில் ப்ரஸாதம் என்றால் ‘தெளிந்த நிலை’ என்று அர்த்தம். குருவின் அநுக்ரஹத்தால் அந்தகரணம் தெளிவு பெற்றவர்களுக்கு ஆத்மாவைப் பிடிக்க முடியும் என்பது தாத்பர்யம்.

ஈச்வரனே எல்லா குருக்களுக்கும் முந்தைய முதல் குரு. ஈச்வரனேதான் குருவாக வந்து ஜீவனை நல்ல வழியில் கொண்டுபோகிறான் என்பதே நம் மதத்தின் கொள்கை. ஆனபடியால் இங்கே சொன்ன குரு ப்ரஸாதம் என்பது ஈச்வர ப்ரஸாதம்தான்; ஈசன் க்ருபைதான்.

ஈஸ்வரனுக்கு வந்தனம்

ஆசார்யாள் செய்துள்ள அத்வைத க்ரந்தங்களிலும் கீதை, உபநிஷத், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்குச் செய்துள்ள பாஷ்யங்களைவிட, அவரே செய்துள்ள ப்ரகரண க்ரந்தங்களான ‘விவேக சூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ்ரீ’, ‘அபரோக்ஷாநுபதி’ முதலிய நூல்கள் ‘அத்வைதந்தான் நம்முடைய லக்ஷ்யம்’ என்று வைத்துக் கொண்டிருப்பவர்களையே உத்தேசித்தவையாகும்.

இதே மாதிரிதான் ஆசார்யாளுக்குப் பிந்தி வந்திருப்பவர்கள் செய்துள்ள நூல்களும் அத்வைதத்தில் ஓரளவு ‘advanced student’ -களுக்கே உத்தேசிக்கப்பபட்டவை எனலாம். ஆகையினால் இவற்றில் த்வைதமான ஈச்வராநுக்ரஹ சமாசாரம் ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுவதில்லை.

ஆனாலுங்கூட இதைத்தான் ‘முக்கியமான விஷயம்’ என்று சொன்னேன். இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றிலுங்கூட எடுத்தவுடன் மங்கள சுலோகமாக ஈச்வரனுக்கோ குருவுக்கோ வந்தனம் சொல்லியிருக்கும். அவருடைய அநுக்ரஹத்தாலேயே ஞானம் உண்டாவதாகவும் அதில் ஸ்தோத்திரித்திருக்கும்.

‘விவேக சூடாமணி’ போன்ற அநேக அத்வைதக் கிரந்தங்களில் சிஷ்யன் குருவுக்கு அப்படியே சரணாகதி செய்து, அவர்தான் கதி என்று கிடப்பதாக ஆரம்பித்திருக்கும்.

கடைசியில் அவருடைய அநுக்ரஹத்தாலேயே தனக்கு மிகவும் உயர்ந்ததான அத்வைதானுபவம் ஏற்பட்டதாக ரொம்பவும் நன்றியுடன் நமஸ்காரம் தெரிவித்திருக்கும். இவை எல்லாம் ஈச்வராநுக்ரஹத்தால் ஞான ப்ராப்தி என்பதை அத்வைதம் ஒப்புக்கொள்வதற்கு நிரூபணம்தான்.

(தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close