[X] Close

சூபி வழி 14: இறைவனையே பரிசாகப் பெறுபவன்


14

  • kamadenu
  • Posted: 09 May, 2019 11:23 am
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

நிரம்பிக் கொண்டிருக்கும் நீர்க் கலயம் உனக்கு உணர்த்தும், அதைச் சுமந்து செல்ல ஒருவர் இருக்கிறார் என்பதை

                                              -ஜலாலுதீன் ரூமி

உண்மையை வாழ்வாகவும் அன்பைப் பாதையாகவும் மெய்ஞானத் தேடலை ஒளியாகவும் கொண்ட பெரும் ஞானியே இமாம் ஜஃபர் சாதிக். கி.பி 702-ல் இமாம் முகம்மது பாகிர், உம்ரு பர்வா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பாரசீக அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், அழகின் திருவுருவமாக, இறைபக்தியின் வழிகாட்டியாகத் தனது வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார்.

ராஜபோக வாழ்வு மட்டுமல்லாமல், மெய்ஞான வாழ்வும் அவருக்குச் சிறுவயதிலிருந்தே ஆசிர்வதிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக வாழ்வின் அடிச்சுவடுகளைத் தன்னுடைய தாத்தாவான ஜைனுலாபிதீன் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ஜைனுலாதிபிதீன் மறைவுக்குப் பின்னர் தன்னுடைய தந்தையை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். மெய்ஞான வாழ்வின் ரகசியங்களையும் தனிமனித ஒழுக்கவியலையும் இணைக்கும் நேசத்தின் மகிமையையும் அவருடைய தந்தை ஜஃபருக்குப் போதித்தார்.

முகம்மது பாகிரின் வளர்ச்சியும் புகழும் கண்டு அந்நாட்டு அரசர் பொறாமை கொண்டார். பொறாமை என்பதைவிட அச்சம் என்பதே சரியாக இருக்கும். அச்சத்தின் மிகுதியால், பாகிரை விருந்துக்கு அழைத்து, நஞ்சூட்டிய உணவை அளித்து, அவரின் உயிரைப் பறித்தார். மரணத்தருவாயிலும், பாகிர் தனது மகனான ஜஃபருக்கு, அன்பின் மேதைமையைப் போதித்துச் சென்றார்.

தந்தையின் மறைவுக்குப்பின், ஓர் ஆன்மிகப் பாடசாலையை ஜஃபர் நிறுவினார். தான் கற்ற மெய்ஞான வழிமுறைகளையும் நெறிகளையும் மார்க்க விதிகளையும் மாணவர்களுக்குப் போதித்தார்.

ஜஃபரின் இயல்பாக இருந்த அறிவின் வீரியத்தாலும் சிந்தனையின் தெளிவாலும், அவர் கற்றுக்கொடுத்தவை மாணவர்களின் நெஞ்சில் நிரந்தரமாகப் படிந்தன. அங்கே படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஞானிகளாக மாறினர். இந்தப் பாடசாலையின் புகழ் உலகெங்கும் பரவியது.

ஜஃபர், தனது பாடசாலைகளை நாடெங்கும் நிறுவினார். “தனது போதனைகளைக் கேட்டால் மட்டும் போதாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கேட்பது ஒருநாள் மறந்துவிடும்” என்று எப்போதும் தனது சீடர்களிடம் வலியுறுத்துவார்.

நடத்தையே பெரும் அறிவுரை

ஒரு நாள் “நீங்கள் இறைபக்தியுடையவராக இருங்கள். மக்களுடன் இனிய முறையில் பழகுங்கள். உங்களது போதனைகளைச் சுருக்கமாகவே சொல்லுங்கள்” என்று தனது சீடர்களுக்கு அறிவுரை கூறினார். அப்போது ஒரு சீடர், “சுருக்கமாகச் சொன்னால் மக்களுக்குப் புரியுமா?” என்று கேட்டார்.

அதற்கு அவர் “உங்கள் வாழ்வும் பக்தியும் உண்மையால் நிரம்பி இருக்குமேயானால், நீங்கள் பேச வேண்டிய தேவையே இல்லை. உங்கள் செயலே / நடத்தையே மக்களுக்கான பெரும் அறிவுரை. செயல்கள் பேசும்போது, அங்கே வார்த்தைகளுக்கு என்ன வேலை?” என்று திருப்பிக் கேட்டு, மாணவர்களை மெய்ஞானத்தின் அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றார்.

“ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், ஒருவனது இனவெறி, அவனது இனத்திலுள்ள தீயவர்களைப் பிற இனத்திலுள்ள நல்லவர்களைவிட அதிகமாக நேசிக்கச் செய்யும். எல்லா மனிதர்களிடமும் நேசத்துடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ளுங்கள். ஈகை உங்கள் குணமாகட்டும்.

உங்களது மனமும் அதன் எண்ணமும் மட்டுமல்ல, உங்களது உடலும் உடையும் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார்.

ஜஃபருக்குச் சினம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்லலாம். இன்னா செய்தவர்களுக்கு இனிய முகத்தைக் காட்டினார். ஒரு முறை பள்ளியில் தொழுதுவிட்டு வெளியேறும்போது, ஒரு வெளியூர்வாசி, “என்னுடைய பணப்பையை நீர் திருடிவிட்டீர்.

அதில் ஆயிரம் பொற்காசுகள் இருந்தன” என்று அவரை நோக்கிக் கத்தினார். தன் மீது திருட்டு பட்டம் சுமத்த முயன்ற அந்த நபரின் மீது ஜஃபருக்குச் சினம் ஏற்படவில்லை. மாறாகப் பரிதாபமே ஏற்பட்டது. “வீட்டுக்கு வாருங்கள் தருகிறேன்” என்று சொல்லி அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

முதலில் அவருக்கு வயிறு நிரம்ப உணவளித்தார். பின் வீட்டினுள் சென்று, ஒரு பணப்பையை எடுத்துவந்து கொடுத்தார். “பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்று விடுங்கள்” என்று கூறினார்.

பணத்தை எண்ணிய நபர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அந்தப் பணப்பையில் 2,000 பொற்காசுகள் இருந்தன. அந்த வெளியூர்வாசி, கண்ணில் நீர் மூழ்க நிமிர்ந்து பார்த்தார். பூட்டப்பட்ட ஜஃபர் சாதிக்கின் வீட்டின் கதவுகளே அவர் முன் இருந்தன.

ரொட்டிக் கூடைகளை சுமந்தவர்

சக மனிதர்கள் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார் அவர். இரவு நேரத்தில் ரொட்டி கூடைகளைச் சுமந்து சென்று, சத்திரத்தில் பசியோடு தூங்கும் யாசகர்களின் தலையருகே ரொட்டிகளை வைத்துவிட்டு தினமும் வருவார்.

 உதவ வாய்ப்பளித் தமைக்காக அவர்களுக்கு இவர் நன்றியும் கூறுவார். எவரேனும் சினங்கொண்டு தன்னை இகழ்ந்தால், அவர்களது நல்வாழ்வுக்காக இவர் இறைவனிடம் வேண்டுவார்.

பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். மார்க்கச் சட்டத் திட்டங்கள் குறித்து அவர் எழுதிய நூலே இன்றும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளது. மிகச் சிறந்த கவிஞர் இவர். சிந்தனைச் செறிவும் அறிவின் தெளிவும் மிகுந்த அவரின் கவிதைகளில் ஒன்று இது:

தனக்காகத் தன் மனத்துடன் போராடுபவன்

மாண்பு பெறலாம்; ஆனால்,

இறைவனுக்காகத் தன் மனத்துடன் போராடுபவன்

இறைவனையே பெற்றுக் கொள்வான்.

ஜஃபர், தனது வாழ்வின் இறுதியில் ஆன்மிக நிலையின் உச்சத்திலிருந்தார். அவருடைய சீடர்கள் உலகெங்கும் விரவியிருந்தனர். மன்னரைவிட அதிகமான புகழையும் செல்வாக்கையும் கொண்டவராக ஜஃபர் விளங்கினார்.

இவருடைய செல்வாக்கும் மன்னருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இறுதியில் ஜஃபருக்கும், அவருடைய தந்தையை போன்றே முடிவு அமைந்தது, இருப்பினும், இன்று காலத்தை வென்று நிற்பது அந்த மன்னரின் புகழ் அல்ல; ஜஃபரின் புகழே நிலையாய் நிலைத்து நிற்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close