[X] Close

சொந்த வீடு இருந்தும் வாடகை வீடுதானா? வீடு வாங்குவதில் தடையா? - என்ன காரணம் தெரியுமா?


jodhidam-arivom-2-37

  • kamadenu
  • Posted: 07 May, 2019 12:01 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 37: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 பாபபர்த்தாரி யோகம்  பற்றி பார்த்து வருகிறோம். சென்ற பதிவில் திருமணம் சம்பந்தமான தடைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்த்தோம்.

இந்தப் பதிவில் மற்ற சில தடைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

அதற்கு முன்பாக இன்னும் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

சொந்த வீடு என்பது நம் அனைவரின் கனவு. ஆனால் எல்லோருக்குமா சொந்த வீடு அமைகிறது?

தேவையான பணம், எந்தத் தடையும் தாமதமும் இல்லாமல் கடன் தருவதற்கு வங்கிகள் தயார் என எல்லா அம்சமும் சாதகமாக இருந்தாலும் ஜாதகத்தில் அம்சம் இருந்தால்தான் சொந்த வீடு கிடைக்கும்.

சரி, இப்படி பணம் இருந்தும் ஏன் சொந்த வீடு அமைய மாட்டேன் என்கிறது?

எளிமையாக, நீங்கள் புரிந்து கொள்ளும்படியாகவே சொல்லுகிறேன்.

ராசி கட்டத்தில் லக்னம் இருக்கும் ராசியை ஒன்று என எண்ண ஆரம்பித்து 4வது ராசியாக வருவதே உங்களுக்கான சொந்த வீடு பாக்கியத்தைச் சொல்லும். வீடு மட்டுமல்ல... சொகுசு வாகனம், நிலபுலங்களையும் இதுவே காட்டும்.

இந்த 4ம் வீட்டை பாபகிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) முன்னும் பின்னும் இருந்தால், அதாவது பாபகர்த்தாரியாக இருந்தால் சொந்த வீடு அமைவதில் தடை உண்டாகும். 

தேவையான பணம், வங்கிக் கடனுதவி எல்லாம் கிடைத்து வீடும் வாங்கி விட்டாலும், அந்த வீட்டில் குடியிருக்க முடியாத நிலை உண்டாகும்.

அதாவது வீடு கட்டி முடித்து குடி போகலாம் என்கிற நேரம் வரும் போது டிரான்ஸ்பர் அல்லது அயல் நாடு வேலை என அந்த வீட்டில் குடியேற முடியாத சூழ்நிலை உண்டாகும்.

என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் பெரும் செல்வந்தர் சென்னையில் மட்டும் 14 வீடுகள் உள்ளன. சொந்த ஊரில் வீடு, நிலம் என ஏராளமான சொத்துகள் கொண்டவர். ஆனால் அவர் இருப்பது வாடகை வீட்டில் தான்.

இப்படியாக, பல பேரை நான் பார்த்திருக்கிறேன். ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்த 4ம் இடம் பாதிக்கப்பட்டால் சொந்த வீடு அமைவதில் பல தடைகள் ஏற்படும்.

இந்த 4ம் வீடு மட்டுமல்ல, சுக்கிரன் என்கிற சுப கிரகம் இப்படி பாபகர்த்தாரியாக இருந்தாலும் சொந்த வீடு என்கிற கனவு நிறைவேறாது. 

சுக்கிரன் என்கிற கிரகம் வீடு, நகை, ஆடம்பர வாழ்க்கை, பணப்புழக்கம், நண்பர்கள், சொகுசு வாகனம், திருமணம் என அனைத்துக்கும் காரணமானவர்.

இவர் இப்படி இரண்டு பாப கிரகங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தன் பலனைத் தர முடியாமல் முடங்கிப் போவார்.

சரி என்ன பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து பரிகாரம் பெறலாம் என்பதைப் பார்ப்போமா?

திருச்செந்தூர் முருகன் எல்லா செல்வத்துக்கும் அருள் பாலிப்பவர்.  அவரை ஒருமுறை தரிசித்து உங்கள் கோரிக்கையை வைத்தால் உடனடியாக பலன் தருவார்.

நவக்கிரகத்தில் உள்ள அங்காரகன் எனும் செவ்வாய் பகவானுக்கு அடர் சிவப்பு வஸ்திரம் சாத்தி, 9 தீபங்கள் ஏற்றி தொடர்ந்து 9 வாரம் வழிபட்டு வந்தால், சொந்த வீடு அமையும்,

"சுக்கிரனின் தோஷத்திற்கு செவ்வாய்க்கு பரிகாரம் சொல்கிறீர்களே" என நீங்கள் கேட்பது புரிகிறது.

செவ்வாய் பூமி காரகன். வீடு கட்டுவதே பூமியின் ஆதாரத்தில் தானே. மேலும் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் ரகசிய நட்பு உள்ளது. எனவே செவ்வாய்க்கு செய்கின்ற பரிகாரம் சுக்கிரனுக்கும் போய்ச் சேருவதாக ஐதீகம்!

சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று தரிசனம் செய்யுங்கள். சொந்த வீடு அமையும்.

சென்னைக்கு அருகில் இருக்கும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு 9 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து சென்று வர... நீங்கள் மனதில் நினைத்ததெல்லாம் நடக்கும். மிக அற்புதமான ஆலயம் இது!

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில்   ஸ்ரீபூமிநாதர் ஆலயம் அமைந்துள்ளது. வீடு வாங்கும் யோகம் இல்லாதவருக்கும் சொந்த வீடு கிடைக்கும் பாக்கியத்தை அருளுவார் பூமிநாதர்.

வேளாங்கன்னி மாதா ஆலயத்தில் உங்கள் வேண்டுதலை வையுங்கள். சொந்த வீடு கிடைத்தவுடன், சிறிய வீடு போன்ற வடிவத்தை காணிக்கையாக தாருங்கள். 

ஆலய கும்பாபிஷேகம் அல்லது ஆலயக் கட்டுமானங்களுக்கு செங்கல் தானம் செய்யுங்கள். சொந்த வீடு அமையும்,

லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வந்தாலும், குபேர லக்ஷ்மியை  வணங்கி வந்தாலும் சப்த கன்னிமார்களில் ஸ்ரீவைஷ்ணவியை வணங்கி பிரார்த்தனை செய்து வந்தாலும் சொந்த வீடு பேறு கிடைக்கும்.

அட்சய திருதியை அன்று ஏழு சுமங்கலிகளுக்கு புடவை ஜாக்கெட், விரலி மஞ்சள் வைத்து கூடவே மட்டை உறிக்காத தேங்காய் சேர்த்து தானம் தந்தால், சொந்த வீடு மட்டுமல்ல சகல ஐஸ்வர்யங்களையும் உங்களுக்கு மகாலட்சுமி தந்தருளுவாள்.

அடுத்த பதிவில் இன்னும் பல தகவல்களைப் பார்ப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close