[X] Close

அட்சய திருதியை : தானம் செய்யுங்கள், ஐஸ்வர்ய லட்சுமி உங்கள் வீட்டுக்கு வருவாள்!


  • kamadenu
  • Posted: 07 May, 2019 10:13 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

    அட்சய திருதியை நாளான இன்று, தானம் செய்யுங்கள். ஐஸ்வர்ய லட்சுமி உங்கள் வீட்டுக்கு வருவாள். சகல கடாட்சம் தந்து காத்தருள்வாள்!

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி நாள், அட்சய திருதியை! இன்று 7.5.19ம் தேதி செவ்வாய்க்கிழமை, அட்சய திருதியை நன்னாள். மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

  அட்சயம் என்றால் பூரணமானது என்று அர்த்தம். குறையாதது என்றும் பொருள் உண்டு. அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்று பொருள். இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் குசேலன் குபேரயோகம் பெற்றதும் இந்த நாளில்தான்!

  ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வக் குவியலைப் பெற்றுத் தந்ததும் இந்த நன்னாளில்தான்!

  கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார்.

  செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை!

  திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்!

  வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான், அன்ன வளம் குன்றாத, பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். அதுவும் அட்சய திருதியை நாளில்தான்!

  இந்தப் புண்ணிய நாளில்தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

   அன்னபூரணியான அம்பிகையிடம்,  பிட்சாடனர் திருக்கோலத்தில்  சிவபெருமான், பிட்சை பெற்ற திருநாளும் இதுதான்.. இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின.

இத்தனை புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந் து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி  வருவாள்; என்றைக்கும் குடியிருப்பாள்; எப்போதும் செல்வ வளத்துடன் உங்களைக் காத்தருள்வாள் என்பது உறுதி!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close