[X] Close

ரோகிணியுடன் வரும் அட்சய திருதியையின் மகத்துவம்;நாளைய தினம் தர்மம் செய்யுங்கள்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 14:09 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வதிஸ்ஸ்ரீ விகாரி வருஷம், உத்தராயனம், வஸந்தருது, சித்திரை மாதம் 24ம் நாள் (மே 7) செவ்வாய்க்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை என்பது ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான சித்திரையில் வரும் வளர்பிறையில் மூன்றாவது திதியாக வரும் நாள். ஒவ்வொரு வருடமும் வரும் புனித நாட்களில் இது மிகவும் முக்கியமானதொரு நாள் என்கிறது சாஸ்திரம்.  இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் சமணர்களுக்கும் இந்த நாள் சிறப்புடையதாக இருக்கிறது. சமணர்கள் இந்த நாளை அக்ஷய தீஜ் என்று கொண்டாடுகிறார்கள்.

அட்சய என்றால் வடமொழியில் ”என்றும் குறையாமல் வளரும்” என்று பொருள்.

அட்சய திருதியை என்பது:

  • முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மாவால் உலகம் தோற்றுவித்த நாள்.
  • மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஜனித்த நாள்
  • திரேதாயுகம் தொடங்கிய நாள்
  • பகீரதன் தவம் இருந்து புனித நதியான கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாள்
  • சமணர்களின் இரண்டாவது தீர்த்தங்கரராண ரிஷப்தேவின் நினைவு நாள்

இந்த நாளில் ஆரம்பிக்கக்கூடிய எந்தச் செயலும் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும். தங்கம், வெள்ளி, நகைகள், வைரம் மற்றும் இதர கற்கள் வாங்குவதன் மூலம் அதீத வளர்ச்சி காண முடியும். வீடு மனைகள் போன்றவற்றை வாங்கவும் உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.

அட்சய திருதியை குறித்து ஜோதிட ரீதியாகப் பார்ப்போம்.

இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்கலகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை:

  • சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்
  • ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்
  • வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’அட்சய திருதியை யாகவும்’ (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.
  • கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும், கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முழுத்தத்தை வழங்குகின்றன. சோதிட சாஸ்திரத்தின்படி இந்தநாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

நாளைய தினம் அட்சய திருதியை (7.5.19). ரோகிணி நட்சத்திரத்துடன் வருகிற அட்சய திருதியை. எனவே நாளைய நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்பது உறுதி!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close