[X] Close

பாபகர்த்தாரி யோகமும் பரிகாரங்களும்!


jodhidam-arivom-2-36

  • kamadenu
  • Posted: 04 May, 2019 14:54 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 36: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இப்போது நாம் பார்க்க இருக்கும் யோகம் “பாபகர்த்தாரி யோகம்.” 

முதலில் பாபகர்த்தாரி என்றால் என்ன? அதைப் பார்ப்போம்.

ஒரு கிரகத்திற்கு முன்ராசியிலும் பின்ராசியிலும் அசுப கிரகங்கள் இருந்தால் அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும். அதுவே சுப கிரகங்கள் இருந்தால் அது “சுபகர்த்தாரி யோகம்” எனப்படும்.  

நாம் இப்போது பார்க்கப்போவது பாபகர்த்தாரி யோகம் பற்றி மட்டுமே!

முன்னதாக சுப கிரகங்கள் எவை? அசுப கிரகங்கள் எவை? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சுப கிரகங்கள்:- குரு,சுக்கிரன்,புதன், வளர்பிறை சந்திரன்,

அசுப கிரகங்கள் :- சூரியன், செவ்வாய், சனி,ராகு,கேது,

தேய்பிறை சந்திரன் குரூரர் ஆவார். (குரூர குணம், எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சினையில் சிக்கினால் அதற்கு இந்த தேய்பிறை சந்திரனே காரணம்)

பாபகர்த்தாரி யோகம் என்பது என்ன செய்யும்? பரிகாரம் என்ன? பார்ப்போம்....

ஜாதகத்தில் எல்லாகிரகமும் நன்றாகத்தான் இருக்கிறது. நல்லநேரமும் நடக்கிறது, ஆனாலும் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி பலரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள், இன்னும் சிலர் “ஜாதகம் வாங்கிட்டு போறாங்க பதில் தர மாட்டேங்கிறாங்க” இதையும் கேட்டிருப்பீர்கள்.

என்ன காரணமாக இருக்கும்? காரணம்..... ஜாதகத்தில் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானம் அல்லது அந்த ஏழாமிடத்து அதிபதி இந்த பாபகர்த்தாரியாக இருக்கும்.

அதாவது அந்த கிரகம் மற்றும் அந்த பாவகம் பாபகர்த்தாரியாக இருக்கும். இது திருமணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல... பணம் வரும் ஸ்தானம், உத்தியோகம், தொழில், குழந்தை பாக்கியம், சொந்த வீடு பாக்கியம், வெளிநாடு செல்லுதல், ஆயுள் அரிஷ்டம் என பலவித யோகங்களையும் கெடுத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடும். 

இப்படி பாப கிரகங்கள் ஒரு பாவகத்தையோ அல்லது கிரகத்தையோ இருபுறமும் நசுக்குவதால் அந்த கிரகம் தன் பலனைச் செய்ய முடியாமல் திக்குமுக்காகி திகைத்துப்போகும்.

உதாரணமாக நீங்கள் ஒரு முக்கியமான இடத்தில் அமர்ந்து இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், உங்களுக்கு இருபுறமும் உங்கள் நண்பர்கள் இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும். அதேசமயம் உங்களுக்கு ஆகாத பரம எதிரிகள் இருபுறமும் இருந்தால்.....? உங்களால் அந்த நிகழ்ச்சியிலும் கவனம் கொள்ளமுடியாமல், உங்கள் எண்ணங்களையும் வெளிப்படுத்த முடியாமல், எப்படா வெளியே போவோம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவீர்கள் அல்லவா. அதேநிலைதான் பாபகர்த்தாரியில் அகப்பட்ட கிரகமும் தன்னிலை மறக்கும்.

சரி, இப்படி அகப்பட்ட கிரகங்கள் தன் கடமையைச் சரியாகச் செய்ய என்ன பரிகாரம் செய்யலாம்? இதை ஒவ்வொரு பாவகம் மற்றும் கிரக நிலை கொண்டு வரிசையாகச் சொல்கிறேன்.  

முதலில் திருமணம்:- உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடம் பாபகர்தாரியாக இருந்தால்......

இருபுறமும் இருக்கும் பாப கிரகம் எதுவோ... அந்த கிரகங்களை முதலில் சாந்தப்படுத்த வேண்டும், அதாவது அவரை குளிர்ச்சிப்படுத்த வேண்டும்,

சூரியன் இருந்தால்:- உங்கள் தந்தையை மிகவும் மதிக்க வேண்டும்.  அவரின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். தினமும் அவரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும். கோதுமையால் செய்த உணவை தானம் செய்யவேண்டும். காலையில் சூரியனை நோக்கி இருகரம் கூப்பி வணங்குங்கள். ஆதித்யஹிருதயம் தினமும் படியுங்கள் அல்லது கேளுங்கள்.

செவ்வாய் இருந்தால்:- உங்கள் சகோதரருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள். அவரிடம் அன்பு பாராட்டுங்கள். அவர் தவறு செய்தாலும் பெருந்தன்மையோடு மன்னியுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். மரிக்கொழுந்து மாலை சாற்றுங்கள். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யுங்கள். 

சனி இருந்தால்:- சித்தப்பா முறை உள்ளவர்களிடம் மரியாதை தாருங்கள். பிரச்சினை ஏதும் இருந்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வயதானவர்கள், மாற்றுத்திறானாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் ஊன்றுகோல், மூன்றுசக்கர வாகனம் என ஏதாவது வாங்கிக் கொடுத்து உதவுங்கள். கோளறு பதிகம் படியுங்கள். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். காகத்திற்கு எள் தயிர் கலந்த சாதம் வையுங்கள்.

ராகு இருந்தால்:- உங்கள் தாத்தா அல்லது தாத்தா வயதில் உள்ளவர்களுக்கு அதாவது வயது முதிர்ந்தவர்களுக்கு முடிந்தவரை உதவுங்கள். அவர்களிடம் ஆசி பெறுங்கள். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். தயவுசெய்து அவர்களை அலட்சியம் செய்யாதீர்கள். துர்கை அம்மனுக்கும், காளி அம்மனுக்கும் அரளிப் பூக்கள் சார்த்துங்கள். அர்ச்சனை செய்யுங்கள், எலுமிச்சை மாலை அணிவியுங்கள் (எலுமிச்சை விளக்கு போடாதீர்கள் அது தவறு). புளியோதரை சாதம் தானம் செய்யுங்கள்,

கேது இருந்தால்:- பாட்டிமார்களுக்கு உதவுங்கள். அவர்களின் தேவைகளை,விருப்பங்களைப் பூர்த்திசெய்யுங்கள். ஞானிகள் மகான்கள், சித்தர்களை வணங்குங்கள். ஜீவசமாதிக்குச் சென்று தியானம் செய்யுங்கள். தினமும் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு செய்யுங்கள். புளியோதரை சாதம் தானம் செய்யுங்கள்.

மேலே சொன்ன கிரகங்களில் எந்தெந்த கிரகங்கள் இருபுறமும் இருக்கிறதோ அந்த கிரகத்திற்கு உண்டான பரிகாரங்களை செய்து வர தீமைகள் விலகி நன்மைகள் நடப்பதை நீங்களே உணருவீர்கள்.  

- தெளிவோம்

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close