[X] Close

ஓஷோ சொன்ன கதை: இரவல் வெளிச்சம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:09 am
  • அ+ அ-

-ஷங்கர்

மலையுச்சியில் வசிக்கும் குருவைத் தேடி வந்த சீடனின் கதை இது. மலையோ அடர்ந்த காட்டின் நடுவேயிருந்தது. மாலை இருண்டுவந்த போது, சீடன் குருவிடம் விடைபெற பலமுறை நினைத்தான். ஏனெனில் மலைப்பாதையில் இறங்கி காட்டில் பல மைல்கள் நடந்த பின்னரே அவன் வசிக்கும் கிராமத்துக்குத் திரும்ப முடியும்.

ஆனால் குருவுடன் இருப்பதோ மிகுந்த களிப்பைத் தருவதாக இருந்தது. அவரிடம் போகவேண்டுமென்று சொல்வதற்கு மனமேயில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட, நள்ளிரவில், ‘நீ கிளம்பலாம்.

அதற்கான நேரமாகிவிட்டது.’ என்றார் குரு. சீடனோ குடிலுக்கு வெளியே பார்த்தான். இருட்டாக இருந்தது. நிலவுகூட இல்லாத இரவு அது. அவனுக்கோ மிகுந்த தயக்கம். கும்மிருட்டில் காட்டில் பயணிப்பதன் அபாயத்தை எண்ணி நடுக்கமாயிருந்தது.

“என்ன பிரச்சினை? எதற்கு பயப்படுகிறாய்?” என்று கேட்டார் குரு. சீடனும் தன் அச்சத்தைப் பகிர்ந்தான். குரு, அவனிடம் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதைத் தீபத்தில் காண்பித்து, எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

சீடனும் தயாராகி, விடைபெற்று வாசலுக்கு வரும்போது, குரு ,அவன் கையிலிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டார். முன்பைவிட இருட்டும் மௌனமும் அந்த இடத்தைச் சூழ்ந்தது.

“எனக்குப் புரியவில்லை” என்றான் சீடன். “புரியவேண்டுமென்ற அவசியமில்லை. உனக்கு நீ ஒளியாக இரு. எனது ஒளி உனக்கு உதவாது. உனது ஒளியை நீ தான் கண்டுபிடிக்க வேண்டும். இரவு இருள் பொதிந்தது. வாழ்வும் இருள் சூழ்ந்ததுதான். அபாயமும் துணிகரமும் ஒவ்வொரு எட்டிலும் இருக்கும். ஆனால் நீ தான் உனக்கான ஒளியைத் தேடவேண்டும்.” என்றார்.

இதைக் கேட்டவுடன் அந்தச் சீடன் தனது முதல் சடோரியை (ஞானத்தின் உதயக் கீற்று) அனுபவித்தான். “குருவே, எனக்கு முழுமையாகப் புரியவில்லை. முதலில் புரிவதற்கான முயற்சியை எடுப்பதாவது சாத்தியமாக இருந்தது. ஆனால் தற்போது எனக்குப் புரியவேயில்லை.” என்றான். இருட்டில் மலைப் பாதையெங்கும் அதிர்ந்து பரவுமாறு குரு சிரித்தார்.

“தற்போது எதுவுமே அவசியமில்லை. ஏதோவொன்று உன்னில் நிகழ்ந்ததை நீ உணர்ந்து கொண்டதை என்னால் பார்க்க முடிகிறது. என்ன நடந்ததென்று எனக்குப் புரிகிறதே தவிர, என்னால் அதை உனக்குச் சொல்ல முடியாது. உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எனக்குத் தெரிந்தாலும், அடுத்த முறை அது நிகழும் போது உனக்குப் பரிச்சயமானதாகிவிடும், அதை நீ புரிந்துகொள்ளத் தொடங்கிவிடுவாய்.”

உனக்கு அது புரியத் தொடங்கும்போது, அது உயிரற்ற பொருளாகிவிடுகிறது. அதனால் அதை தூக்கி எறிந்துவிடு- அதுதான் அறிவு. உனக்கு ஒரு விஷயம் புரியும்போது, அது அறிவாகி விடுகிறது. உனக்கு புரியாமல் இருக்கும் போது, அது அறிதலாக இருக்கிறது. அங்கே தான் திறப்பென்பது உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close