[X] Close

உங்கள் தலையெழுத்தையே மாற்றும் திருப்பட்டூர் பிரம்மா, காஞ்சி சித்ரகுப்தன்! - ஜாதகத்துடன் தரிசியுங்கள்


jodhidam-arivom-2-35

திருப்பட்டூர் பிரம்மா

  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 11:02 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 35: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

ணக்கம் வாசகர்களே.

 நாம் இப்போது பார்க்கப்போவது கேமத்துருவ யோகம்.  

இதுவரை யோகம் என்று பலவிதமான நல்ல பலன்களைத்தரும் யோகங்களை பார்த்தோம்.

என்ன ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சியாக இருக்கிறதா?

’’அது என்ன நல்ல பலன் தரும் யோகம் என்கிறீர்கள். அப்படீன்னா, கெட்டது தரும் யோகமும் உண்டா?” என்றுதானே கேட்கிறீர்கள்.

நம்மில் பலரும் யோகம் என்றாலே அது நன்மையைத் தருவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே, முதலில் யோகம் என்றால் என்ன அர்த்தம்? என்பதைப் பார்க்கவேண்டும்.

யோகம் என்றால் சேர்க்கை என்று அர்த்தம். அதாவது இரண்டு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதுதான் யோகம். அப்படி ஒன்றோடு ஒன்று சேரும்போது உண்டாகும் விளைவு, ஒரு புதிய சக்தியை உண்டாக்கும். இது ஜோதிடத்தில் யோகம் என்று அறியப்படுகிறது.

நாம் இதுவரை பார்த்த யோகங்கள் எல்லாமே இரண்டு கிரகங்களின் சேர்க்கை, பார்வை என இதை வைத்தே சொல்லப்பட்டு வந்தது.

குருமங்கள யோகம்-  குருவும் செவ்வாயும் இணைவதால் உண்டாவது.

குருசந்திர யோகம் -  குருவும் சந்திரனும் சேர்வதால் உண்டாகும் யோகம்,

கஜகேசரி யோகம் - குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் யோகம்

இப்படி பலவிதமான (நல்ல) யோகங்களைப் பார்த்தோம்.  

அதேசமயம் ஒன்றுக்கொன்று பகை கொண்ட கிரகங்கள் சேரும் போதோ ஒன்றையொன்று பார்க்கும்போதோ, அல்லது பகை வீட்டில் அமர்ந்த கிரகம், மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ, ஜாதகருக்கு பலவீனத்தை அல்லது பாதிப்பை உண்டாக்குகிறது.  

இப்படி பலவீனமாக இருக்கும் கிரகங்கள் தருகின்ற யோகங்கள் அவயோகங்கள் என அழைக்கப்படுகின்றன.

அந்த வரிசையில் இப்போது நாம் முதலில் பார்க்கும் அவயோகம்... கேமத்துருவ யோகம்.

இந்த யோகம் என்ன செய்யும் ? எப்படி வழிநடத்தும்? எப்போது செய்யும்? 

நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் வேறு ஒருவரோ, எப்போதும் தனிமையில் இருக்கிறீர்களா? ஏதேனும் விசேஷ வைபவங்களில் கூட ஓரமாக யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பவரா? தனிமையில் அல்லது தனியறையில் நேரம் கடத்துபவர்களா நீங்கள்? ’எனக்கு நண்பர்களே இல்லை’ எனும் அளவுக்கு எவரிடமேனும் ஒட்டுதலாக இல்லாமல் இருப்பவர்களா? நீங்கள்... கேமத்துருவ யோகத்தில் பிறந்திருப்பீர்கள் என்பது உறுதி!

ஒரு ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த வீடே ராசி என்பதாகும். இந்த சந்திரனுக்கு முன் ராசியிலோ, அடுத்த ராசியிலோ, ஏழாம் வீட்டிலோ.... எந்த கிரகமும் இல்லாமல் சந்திரன் தனித்து இருந்தால்... அதுவே கேமத்துருவ யோகம் எனப்படும்!  

இது தனிமையை உணர்த்தும் அமைப்பு. இவர்கள் யாரிடமும் பழக விரும்பமாட்டார்கள். அப்படியே பழகினாலும் அந்த நட்பு விரைவில் முறிந்து போகும்.  

காரணம் இவர்களின் பொஸஸிவ்னஸ் (possessive) குணம். அதாவது தன்னுடைய நண்பர் தன்னுடன் மட்டுமே பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதனால், விரைவில் அவருடைய நண்பருக்கு ஒருவித ஆயாசத்தையும் சலிப்பையும் தரும். மெல்ல மெல்ல அந்த நண்பர் விலகிச் சென்றுவிடுவார்.

அதுமட்டுமல்ல... எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் கடைசி காலத்தில் தனிமையில்தான் இருக்க வேண்டிவரும்.

நினைத்துப் பாருங்கள். ஆயிரமாயிரம் சொத்து இருந்தாலும் அதை எல்லாம் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்த பின் தன்னை கவனித்துக்கொள்ள தவணை முறையில் உன்னிடம் ஒருமாதம், என்னிடம் ஒருமாதம் என அலைக்கழிக்கப்படும் போது அந்த மன வேதனை “போதுமடா சாமி” என்று வீட்டை விட்டுவிட்டு, கோயில் குளம் என ஓடிப்போனவர்களும், முதியோர் விடுதியில் தஞ்சம் அடைந்தவர்களும் ஏராளம் ஏராளம்.

இன்னும் சிலர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் இருப்பதாக பெருமையுடன் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் புழுங்கியபடி குமைந்து போயிருப்பார்கள்.

இந்த மாதிரியான வேதனைகளைக் கொண்டவர்களை, அதாவது இப்படியான யோகம் கொண்டவர்களை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

உண்மையில், இளமைகாலத்திலேயே இப்படி தனிமை விரும்பியாக  இருப்பவர்கள் பின்னாளில் தன் தனிமையைக் கழிப்பதற்கான ஒத்திகையே!

இது உங்களை வேதனைப்படுத்துவதற்காக சொல்லவில்லை. உங்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வை தூண்டிவிடுவதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.

முடிந்தவரை உங்கள் கடைசிகாலம் வரை சொத்துக்களைப் பிரித்து தராதீர்கள், உங்களுக்கு பிறகே சொத்துக்கள் பிள்ளைகளைச் சேரும் என்ற அளவில் வைத்துக்கொள்ளுங்கள். சேமிப்பை பலமாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் ஒரு நல்ல விஷயம்... இப்படி கேமத்துருவ யோகம் உள்ளவர்களுக்கு மறு பிறப்பு இல்லை. ’இந்த ஒரு ஜென்மத்தோட அவ்ளோதான். போதும்டா சாமீ’ என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.

சரி, இந்த யோகத்துக்கான சில பரிகார முறைகளைப் பார்க்கலாம்.  கர்மவினைகளால்தான் இந்த அமைப்பில் இப்படியான ஜாதகம் உண்டாகிறது.

நமது விதியை மாற்றும் வல்லமை பிரம்மாவுக்கும் பாவபுண்ணியங்களைக் கணக்கிடுகிற சித்ரகுப்தனுக்கும் மட்டுமே உண்டு. இவர்கள்தான் மெயின் ஹீரோ. மூன்றாவது ஹீரோ... கர்மகாரகன் எனும் சனிபகவான்.

ஆக இந்த கேமத்துருவ யோகம் உள்ளவர்கள், கடைசி காலம் வரை குடும்ப சமேதரமாய் வாழவேண்டும் என்பதற்காக,  திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்கி வாருங்கள். உங்கள் தலையெழுத்தையே மாற்றி அருளும் அற்புதமான திருத்தலம் இது! பிரம்மாவின் சந்நிதியில், உங்கள் ஜாதகத்தை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நல்லவிதமாக தலையெழுத்தை திருத்தி அருள்வார் பிரம்மா!

அதேபோல காஞ்சி மாநகரில் நெல்லுக்காரத் தெருவில் சித்ரகுப்தன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வந்து, உங்கள் ஜாதகத்தை அவர் காலடியில் வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் குறைகளை களைந்து நல்ல வழி உண்டாக்குவார்.

கர்ம காரகனான சனிபகவான் குடும்ப சமேதரமாய் வீற்றிருக்கும் கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநரையூர் ராமநாதர் கோயிலுக்குச் சென்று சனிபகவானைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கர்ம வினைகளையெல்லாம் தீர்த்து இறுதிகாலம் வரை குடும்பத்தோடு சேர்ந்து வாழ அருள்வார், சனீஸ்வரர்!  

மீண்டும் சொல்கிறேன்...  இந்தப் பதிவு உங்களை அச்சப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, உங்களுக்கு விழிப்பு உணர்வு உண்டாக்கவும், ஒவ்வொருவரும் பிள்ளைப் பாசத்தால் ஏமாறாமல், அதிக கவனம் பெறவும் தான் இந்த யோகம் குறித்து தெரிவித்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் மற்றுமொரு யோகத்தைப் பார்க்கலாம்!

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close