[X] Close

'ஜோஸ்யர்கிட்டயும் போகவேணாம்; ஜாதகமும் எடுக்கவேணாம்!’ -  இது ’கிரகமாலிகா யோகம்’ ஸ்பெஷல்


jodhidam-arivom2-34

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 10:45 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 34 - இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இப்போது பார்க்கப் போகும் யோகம்... கிரகமாலிகா யோகம்.  

வரிசையாக தொடுக்கப்பட்ட மாலையைப் போல் கிரகங்கள் அமர்ந்து இருந்தால் அதுவே கிரகமாலிகா யோகம். ஆனால் இதிலொரு விஷயம்... லக்னத்தில் தொடங்கி வரிசையாக ஏழு கட்டங்களில் கிரகங்கள் இருக்க வேண்டும். ஒரு கட்டம் காலியாக இருந்தாலும் அது மாலிகா யோகம் ஆகாது.

இந்த ராசிக் கட்டம் கொடுத்திருக்கிறேன். இதுவே கிரகமாலிகா யோகம் கொண்டது.

அதேசமயம் ராகு கேதுக்குள்ளாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது யோகத்துக்குப் பதிலாக, தோஷமாகிவிடும். அதாவது, காலசர்ப்ப தோஷமாகிவிடும்.

இந்த கிரக மாலிகா யோகத்தின் சிறப்பு என்னவென்றால், சுப கிரகங்கள் மேலும் சுபத்தன்மை பெறும். அசுப கிரகங்கள் தன் அசுபத்தன்மையை இழந்து சுபத்தன்மையைப் பெறும்.

சுருக்கமாகச் சொன்னால், “பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல” என்பார்களே. அப்படித்தான் இதுவும்!

 இன்னும் சொல்லப்போனால் ஒரு மாலையில் எத்தனையோ பூக்களுக்கு மத்தியில் வாடிய அல்லது வதங்கிய பூ ஒன்று இருக்கலாம். ஆனால் மாலை என்ற மொத்த உருவம் பெற்றபின், அந்த வாடிய பூ கண்ணுக்கும் தெரியாது, அதை உணரவும் முடியாது. அதுபோல கிரகமாலிகா யோகத்தில் இருக்கும் அசுப கிரகம் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தவும் முடியாது. தன் அசுப பலத்தைக் காட்டவும் முடியாது.

சரி... இந்த யோகம் என்ன மாதிரியான பலன்களைத் தரும்?

நாம் இதுவரை பார்த்து வந்தோமே பலவிதமான யோகங்கள். அவை  அனைத்தையும் இந்த  கிரகமாலிக யோகம் மட்டுமே வள்ளலென வாரிவழங்கும். இன்னும் சொல்லப்போனால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும், விரும்பியது உங்கள் கைக்கு வந்துசேரும். கேட்காமலேயே உதவி கிடைக்கும்.  இயல்பான சொத்து சேர்க்கை, வீடு வாகன சேர்க்கை என மொத்தத்தில் ராஜ போக வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைக் கொண்ட ஜாதகர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள் என்னென்ன? எளிமையான பரிகாரங்கள் என்ன?

இவற்றையெல்லாம் பார்ப்போம்.

நவக்கிரகங்களின் ஒட்டு மொத்த அம்சமாகத் திகழும் திருத்தலம் திருச்செந்தூர் முருகன் ஆலயம். இங்கு நவக்கிரக பீடம் கிடையாது. முருகப்பெருமானே அனைத்துமாக இருப்பதால் நவக்கிரகங்களுக்கு இங்கு அவசியம் இல்லை.  

மேலும் இங்கு முருகன் தவக்கோலத்தில் கையில் (ஜப) மாலையுடன் நிஷ்டையில் இருப்பதால் இந்தத் திருத்தலம் கிரக மாலிகா யோகத்திற்கு சிறந்த ஸ்தலம் என்று கொண்டாடப்படுகிறது.

நவக்கிரக நாயகி கருமாரி அன்னை.  அவளுக்கு இணையான அருளையெல்லாம் வாரி வழங்குகிற சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், பட்டீஸ்வரம் துர்கை, முதலானோர் குடிகொண்டிருக்கும் திருத்தலங்கள் இந்த யோகத்திற்கான சிறந்த பரிகார ஸ்தலங்கள்! இங்கே சென்று தரிசித்து பிரார்த்தனை செய்து வந்தால், இந்த கிரகமாலிகா யோக பலனானது மேலும் அதிகமாகும் என்பது உறுதி!

இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த கிரகமாலிகா யோகம் உடைய ஜாதகர்கள், தன் வாழ்நாளில் தன்னுடைய ஜாதகத்தை யாரிடமும் காட்டாமல், அவ்வளவு ஏன்.... ஜோதிடரிடம் கூட காட்டாமல் இருப்பது நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும்!

சரி, ஏதேனும் முக்கியமான நேரத்தில் ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. என்ன செய்வது? அதுவும் திருமணம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் எனும் நிலையில் ஜாதகம் கொடுப்பதா கூடாதா?

நீங்கள் நன்கறிந்த ஜோதிடரிடம் மட்டுமே காட்டுங்கள். ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும்.  வாழ்நாளில் கஷ்டம் என்பதே உங்களுக்கு இருக்காது. இருக்காது.  இருக்கவே இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். அப்படி கஷ்டம் இல்லை எனும் போது ஜாதகத்தை ஏன் எடுக்க வேண்டும்! 

ஒவ்வொருவரும் தங்கள் கஷ்ட காலத்தில்தான் ஜோதிடரைத் தேடிப் போவார்கள். நல்ல நேரம் இருந்து , வாழ்க்கையும் வசதியாக இருந்தால் ஜோதிடரின் வழிகாட்டுதல் தேவைப்படாது.  

ஆகவே, திருச்செந்தூர் முருகப்பெருமானையும் கருமாரியம்மன்னையும் மாரியம்மனையும் கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். இந்த யோகத்துக்கான பலன்களைக் கிடைக்கப் பெறுவீர்கள்.

இன்னும் பார்ப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close