[X] Close

எமனை வணங்கினால் 'சக்ரவர்த்தி யோகம்!’


jodhidam-arivom-2-33

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 10:12 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 33: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 நாம் இதுவரை பலவிதமான யோகங்களைத் தரும் கிரக அமைப்புகளைப் பார்த்தோம். இவை எல்லாவற்றுக்கும் உச்சபட்சமான யோகம்... சக்ரவர்த்தி யோகம். இது யாருக்கு இருக்கும்? எப்படி பலன் தரும்? அரச வாழ்வு மட்டும்தானா? அல்லது அரசனுக்கு நிகரான வாழ்வா?

இதையெல்லாம் பார்ப்போம்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், கடினமான இந்த யோக ஜாதக அமைப்பின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் ஜாதகத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சம் என்ற நிலையில் இருந்தால் யோகம் உண்டு. ஆனால், எந்த உச்ச கிரகமும் மற்ற உச்ச கிரகத்தை பார்க்கக்கூடாது.

ஏனென்றால் “உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பர்” என்ற ஜோதிட பழமொழி உண்டு.  

உதாரணமாக, சூரியன் ( மேஷத்தில்) உச்சம் என வைத்துக்கொள்வோம். சனி துலாராசியில் இருக்கக்கூடாது , ஏனெனில் துலாம் ராசியில் சனி உச்சம்.  

அப்படியானால் எப்படி இருக்க வேண்டும், அதற்கு முன்பாக கிரகங்கள் எப்படி இருந்தால் இந்த சக்ரவர்த்தி யோகம் ஏற்படும் என்பதை பார்ப்போம். 

கடக லக்னம் என வைத்துக்கொள்வோம். கடக லக்னம், கடகத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆக லக்னாதிபதி உச்சம்.  

இந்த கடக லக்னத்திற்கு யோகத்தைத் தரும் யோகாதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சமாக இருக்க வேண்டும்.

சனி துலாத்தில் உச்சமாக இருக்க வேண்டும். சுகம் மற்றும் லாப ஸ்தான அதிபதி சுக்கிரன். இவர் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருக்க வேண்டும். அதாவது சுக்கிரன் மீனத்திலோ, ரிஷபத்திலோ இருக்க வேண்டும்.  

ஆக இப்போது சந்திரன் உச்சம். செவ்வாய் உச்சம். வெகு ஜன ஆதரவு என்னும் சனி உச்சம், எந்த உச்ச கிரகமும் பார்த்துக்கொள்ளவில்லை. இதுதான் சக்ரவர்த்தி யோக ஜாதகம்.  இது தமிழக அரசியல் தலைவரின் ஜாதக அமைப்பு, இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த அமைப்போடு ஒருவர் பிறக்க வாய்ப்பில்லை.

ஏறக்குறைய இந்த ஜாதக அமைப்பு தமிழகத்தில் ஒருவருக்கு உண்டு. ஆனால் ஆச்சரியமாக அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது அதிசயம். அவர் எடுத்த முடிவு அமர்க்களம்தான், அட்டகாசம்தான், ஆனால் அவர் யோசிக்க வேண்டிய நேரமிது.

இன்னும் ஒரு ஆச்சரியமும் உள்ளது. பெரும்பாலான கிரகங்கள் நீசமாக இருந்தால், சில ஜோதிடர்கள் இப்படியான ஜாதகம் விளங்காத ஜாதகம் என ஒதுக்கிவிடுவார்கள். உண்மையில் அப்படி மூன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் நீசமடைய அந்த ஜாதகர் சக்ரவர்த்தியாக வாழ்வார்! 

இதில் நீச கிரகம் ஒன்றுக்கொன்று பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் நீசனை நீசன் பார்த்தால் நீச பங்க ராஜ யோகம் என்ற அடிப்படையில் சக்ரவர்த்தி யோகம் உண்டாகும். 

உதாரணமாக மகரத்தில் குரு நீசம், கடகத்தில் செவ்வாய் நீசம், விருச்சிகத்தில் சந்திரன் நீசம், மேஷத்தில் சனி நீசம். இப்படி ஒரு ஜாதக அமைப்பும் சக்ரவர்த்தி யோகத்தைத் தரும். இந்த ஜாதக அமைப்பு உலக அளவில் தொழில் செய்து வரும் இந்திய தொழிலதிபரின் ஜாதகம்.

இந்த  சக்ரவர்த்தியோகம் அரசியலில் மட்டுமல்ல தொழிலிலும் சக்கரவர்த்தியாக இருக்க வைக்கும். 

அரசியல் என்பது சேவை மனப்பான்மை மட்டுமே. அதில் பண ஆதாயம் தேடுபவர்கள் ராகுவின் அம்சம், கொடுப்பதுபோல் கொடுத்து பறிகொடுக்க, வேண்டாததையெல்லாம் பறிகொடுத்து வேதனையில் உருக்குலைக்க வைக்கும். அப்புறம் பணம் இருந்தென்ன ?இல்லாதிருந்தென்ன? 

ஆக சக்ரவர்த்தியோகம் என்பது இயல்பான வளர்ச்சி. அதிலும் நேர்மையான வளர்ச்சி, தலைமுறைகளை தாண்டிய புகழ், பொருளாதார நிறைவு என பரிபூரணமாக உண்டாக்கும்.  

தற்போதைய அரசியல்வாதிகள் யாருக்கும் இந்த சக்ரவர்த்தி யோகம் கிடையாது, ஒருசில யோகங்களின் அடிப்படையில் வண்டி ஓடுகிறது. சரித்திரத்தில் இடம்பிடிக்கக் கூடிய அளவில் எவரும் இல்லை. அனைவரும் “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” என்ற அளவில்தான் ஜாதகம் உள்ளது.  

சரி நாம் யோகத்தைப் பார்ப்போம். இந்த யோகம் வேண்டுபவர்கள், ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

சிவன்? முருகன்? விஷ்ணு? லக்ஷ்மி? சரஸ்வதி? இவர்களில் யாரும் இல்லை.

தர்மராஜா... ஆமாம்... எமதர்மராஜாவேதான்! 

ஸ்ரீவாஞ்சியம் ... எமதர்மராஜா சாபம் நீங்கி உயிர் பெற்ற திருத்தலம். இங்கு வந்து எமதருமராஜனை வணங்குங்கள். அழியாப்புகழைப் பெறுவீர்கள்.

திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலம் அறிவீர்கள்தானே. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்கே எமதருமனுக்கு தனிச்சந்நிதியே அமைந்துள்ளது. இங்கு வந்தும் வேண்டிக்கொள்ளலாம்.

கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வதற்கு உதவுங்கள்.  ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுங்கள், அல்லது உதவுங்கள், வாயில்லா ஜீவன்களுக்கு விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றுக்கும் உணவளியுங்கள். அழியாப்புகழ் உங்களை வந்தடையும். எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோல்வியே இல்லாமல் முழு வெற்றி பெறுவீர்கள். 

இன்னும் சில நல்ல யோகங்களும், அவ யோகங்களும்( தீய யோகங்கள்) இருக்கின்றன.

- தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close