[X] Close

மீனாட்சிக்கு கல்யாணம்!


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 10:06 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

தமிழகத்திலேயே, எல்லா ஊரிலும் கோயிலும் உண்டு. கோயிலில் திருவிழாக்களும் நடைபெறும். என்றாலும் கூட, திருவிழா என்றாலே சித்திரைத் திருவிழாதான் எனும் அளவுக்கு பிரமாண்டமும் ஆனந்தமும் கொண்டது, மதுரை சித்திரைத் திருவிழா.

மதுரை மீனாட்சியம்மனின் கோயிலில், 12 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது சித்திரைத் திருவிழா. வைகாசியில் விசாகம்,  ஆனியில் உத்திரத் திருவிழா, ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் பௌர்ணமி, ஐப்பசியில் சஷ்டி திதி, கார்த்திகையில் திருக்கார்த்திகை, மார்கழியில் பௌர்ணமி திதி, தை மாதத்தில் பூசம், மாசியில் மகம் என விழாக்கள் நடந்தாலும் மன்னருக்கும் மக்களுக்கும் மட்டுமின்றி, அந்த மகேசனுக்கே பிடித்த ஒப்பற்ற விழா... சித்திரைத் திருவிழா!

  ‘உங்கள் வீட்டில், மதுரையா, சிதம்பரமா?’ என்று கேலியும்  ஜாலியுமாகக் கேட்போம். அந்தக் காலம் தொடங்கி இன்றளவும் மதுரை, மீனாட்சியம்மையின் ஆளுகைக்கும் அருளுக்கும் உட்பட்டே இருந்து வருகிறது என்பதே உண்மை!  

   நான்மாடக்கூடல், மதுராபுரி, மதுரையம்பதி என்பது உள்ளிட்ட இன்னும் பல பெயர்கள் மதுரைக்கு உண்டு. 1622-ம் வருடத்திய ஓலைக் குறிப்பு ஒன்றில், ‘ஸ்ரீதலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீனாட்சியம்மைக்கான பட்டாபிஷேக விழாவையும், கையில் செங்கோலுடன் மகாராணி மாதிரி அவள் அழகும் கம்பீரமும் ததும்பக் காட்சி தருவதையும், திருமலை நாயக்க மன்னர் அவற்றையெல்லாம் நேரில் வந்து, தரிசித்து மகிழ்ந்த தகவல்களையும் ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. 

  சித்திரைத் திருவிழாவின்போது, உலகில் எங்கெல்லாம் மதுரைக் காரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும் மதுரையில் ஆஜராகிவிடுவார்கள். மதுரை என்றில்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குவிந்துவிடுவார்கள்.

‘நல்லா இருக்கீங்களாண்ணே.  போன தடவை அழகர் ஆத்துல இறங்கும்போது பார்த்தது! ஐயா எப்படி இருக்காங்க?’ முதலான நல விசாரிப்புகள், பாசப் பரிமாற்றங்கள்... திருவிழாவின்போது மாநகர் மதுரை முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததிலும் சரி உறவுகள் கைகோர்த்து பாசம் வளர்த்ததிலும் சரி... மதுரையை அடித்துக் கொள்ள எந்த ஊரும் இல்லை. அவ்வளவு ஏன்... தென்னாடுடைய சிவனார் கூட, தன் திருவிளையாடல்கள் பலவற்றை மதுரையம்பதியில்தான் நிகழ்த்தியிருக்கிறார் என்றால் பாருங்களேன்!

  ஒவ்வொரு வருடமும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடப்பதும், அப்போது மன்னர் மகாராணியுடன் வந்து தரிசனம் செய்வதும் மரபாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் பட்டாபிஷேகத்தின்போது செங்கோலுடன் காட்சி தரும் மீனாட்சி அன்னையைக் கண்குளிரத்  தரிசிக்கலாம்.

 மதுரை திருக்கோயிலில், மீனாட்சியம்மையின் சந்நிதிக்கு முன்னே, மண்டப விதானத்தில், அம்பிகையின் உத்ஸவத் திருமேனி சர்வ அலங்காரத்தில் செங்கோலுடன் இருக்க, அருகில் கைகூப்பி வணங்குகிற ராணிமங்கம்மாளின் ஓவியம் அந்தக் காலத்தில் வரையப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில், அந்த ஓவியம் பாதுகாக்கப்படாமல் போய் விட்டது என்று வருத்தப்பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இப்படி புராதன, புராண, சரித்திரங்களின் உறைவிடமாகவே திகழ்ந்த ஒப்பற்ற பூமி... மதுரை. அங்கே நிகழும் இணையற்ற வைபவம்... சித்திரைத் திருவிழா!

  சித்திரை மாதம் துவங்கியதுமே, மதுரையில் திருவிழா களை கட்டத் தொடங்கிவிடும். விழாவின் 10-ம் நாள் திருக்கல்யாணம். 9-ம் நாளில் மீனாட்சி திக் விஜயம் நடைபெறும். அப்போது, இந்திர விமானத்தில் வரும் மீனாட்சி அன்னையைத் தரிசிப்பவர்கள், பரவசமாகிப் போவார்கள். சிலர் தங்கள் வீட்டுப் பெண் அலங்காரத்துடன் வருவதாக நினைத்து மகிழ்வார்கள். இன்னும் சிலர், தங்கள் தேசத்தின் மகாராணி என்று வணங்கி ஆனந்தப்படுவார்கள். சிவனடியார்கள் நம் வீட்டு மருமகள் என்றே கொண்டாடுவார்கள். ‘ஆமாம்யா... எங்கவீட்ல மட்டுமில்ல... எங்க தேசத்துல எப்பவும் மதுரைதான். அவளோட ஆட்சிதான்’ என பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

  ‘இது கோயில் விழாவா, குடும்ப விழாவா’ என்று குழம்பும் அளவுக்கு மக்கள் மனத்தில் இரண்டறக் கலந்துவிட்ட சித்திரைத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்ற வைபவம் என்பதில் சந்தேகமே இல்லை.

  ‘’திட்டமிட்ட நகரமயமாக்கம், நகரத்தைத் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்குதல் என்றெல்லாம் இப்போது சொல்கிறோம். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே, மதுரை மாநகரம் திட்டமிட்ட நகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகக் கோயில்களில், மிகவும் புராதனமான, தொன்மையான, பழைமையான கோயில் ஸ்ரீமீனாட்சி அம்பாள் கோயில்தான். மதுரைக் காஞ்சி எனும் சங்க இலக்கிய நூல், கோயிலின் பிரமாண்டத்தையும், சுந்தர பாண்டிய மன்னர் காலத்தில் கிழக்கு கோபுரம் கட்டப்பட்டதையும், கோயிலின் பெருமைகளையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது. பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருந்தாலும் திருமலை நாயக்க மன்னரின் கைக்கு மதுரை வந்த பிறகுதான், கோயில் விரிவுபடுத்தப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டுள்ளது என்று, ‘மதுரை திருப்பணி மாலை’ எனும் தலைப்பிலான ஓலைச்சுவடி தெரிவிக்கிறது.

மதுரையில் சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும் இன்று விமரிசையாக நடந்திருக்கிறது திருக்கல்யாணம். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கலந்துகொண்டு திருமணக் கோலத்தை தரிசித்தார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close