[X] Close

'லட்டு கொடுத்து கொண்டே இருங்கள்; குருவருள் கிடைத்துக்கொண்டே இருக்கும்!’


jodhidam-airvom-2-31

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:58 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 31: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இப்போது நாம் பார்க்க இருப்பது “ஹம்ச யோகம்.” உண்மையில் இந்த யோகம் குறித்து உங்களுக்கு முதலில் சொல்லியிருக்கவேண்டும். காரணம், இதற்கு முந்தைய நான்கு பதிவுகளில் வந்த யோகங்களுக்கெல்லாம் முதன்மையானது இந்த ஹம்ச யோகம்.

அதாவது ஜோதிடத்தில் ’பஞ்சமகா புருஷ யோகங்கள்’ என்று இருக்கிறது. அந்த ஐந்து என்னென்ன தெரியுமா? 1) ஹம்ச யோகம், 2) மாளவிகா யோகம், 3) பத்ர யோகம்,4) ரூசக யோகம்,5) சச யோகம். ஆக, ஐந்து யோகங்களில் முதன்மையானது ஹம்ச யோகம்தான்!  

இந்த ரூசக யோகம் பற்றி பிறகு பார்க்கலாம்.

காரணம் இந்த யோகம் செவ்வாயால் உண்டாகும் யோகம். தோஷமும் யோகமும் எப்படி மாறுபடுகிறது என்பதை விளக்கப்போகிறேன்.

இப்போது... ஹம்ச யோகம் பற்றி பார்க்கலாம்.

 இந்த யோகம் யாரால் உண்டாகிறது? என்ன மாதிரியான பலன்களை தரும்? நம் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? ஜாதகத்தில் ஹம்ச யோகம் இல்லையெனில், என்ன மாதிரியான பரிகாரங்கள் மூலம் வரவழைப்பது? இதுகுறித்தெல்லாம் பார்ப்போம்.

ஹம்ச யோகம் குரு பகவானால் உண்டாகக்கூடியது.ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் கெட்டுப்போகிறதோ அல்லது எந்த பாவகம் பலமிழக்கிறதோ அந்த இடத்தை குரு பார்க்க அந்த கிரகம் மற்றும் பாவகம் சுபத்தன்மை பெறும் என்பது ஜோதிட உண்மை. இதுவே ஜோதிட சாஸ்திரம்.  

அப்படி பரிபூரண சுப கிரகமான குரு, இன்னும் பலமாக விசேஷமாக  அமர்ந்து இருந்தால், பலன்களின் அளவு அளவிட முடியாத அளவுக்கு அல்லவா இருக்கும்.

அப்படியானால் குரு நம் ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கவேண்டும்?

ராசி என்னும் சந்திரன் நின்ற இடத்திலிருந்து சந்திரனோடு இணைந்து ஒன்றாம் ராசியிலோ அல்லது 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தாலும், அல்லது லக்னத்திற்கு 1,5,9 ஆகிய இடங்களில் இருந்தாலும் இந்த ஹம்ச யோகம் உண்டு.

சரி... இதனால் என்ன பலன்களையெல்லாம் தருவார் குருபகவான்?

ஒரு மனிதன் பிறக்கும் போதே நல்ல சுகபோகமான வீட்டில் பிறந்து நல்ல கல்வி, அதிலும் விரும்பிய கல்வி, நல்ல வேலை அல்லது சுய தொழில் அமைந்து, மனமொத்த வாழ்க்கைத்துணை, அன்பான குழந்தைகள், வாழ்க்கைக்கான அடிப்படைத்தேவைகள் அனைத்தும் நிறைவாக கிடைத்தல் என்பதைப் போல் பலன் இருக்கிறதா என்ன? இவற்றையெல்லாம் தந்தருள்வார் குருபகவான்.  

இதைப் படிக்கும்போதே இப்படியெல்லாம் நமக்கு கிடைக்காதா? என்கிற கேள்வியும் ஏக்கமும் எழும். அதே சமயம்

நீங்கள் அறிந்த அல்லது பழகிய நபருக்கு இப்படி ஒரு திருப்திகரமான வாழ்க்கை இருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டிருப்பீர்கள்.

இந்த ஹம்சயோகம் உள்ளவர்கள் மேற்கண்ட நல்ல யோக பலன்களை பிறந்ததிலிருந்தே அனுபவிப்பார்கள். பிரச்சினைகள் இல்லாத, நோய்நொடி இல்லாத, நிம்மதியான நிறைவான வாழ்க்கையைக் கொண்டிருப்பார்கள்.

இந்த யோக பலனை மேலும் வலுப்படுத்தவும், இந்த யோகம் இல்லாதவர்கள் இந்த யோகங்களை வரவழைத்துக்கொள்ளவும் எளிமையான பரிகாரங்களை செய்து வாருங்கள். நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைப்பதையும் நடப்பதையும் நீங்களே உணருவீர்கள்.

தஞ்சாவூர் - கும்பகோணம் அருகில் ஆலங்குடி குரு பகவான் ஆலயம், தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை குரு பகவான் ஸ்தலம், திருச்செந்தூர் முருகன் ஆலயம், (இங்கு முருகப்பெருமானே குருவாக இருக்கிறார்), என வணங்கி வாருங்கள். குருவின் பரிபூரண அருளைப் பெறுவீர்கள். குருவின் அருளிருந்தால் ஹம்ச யோகம் நிச்சயம் கிடைக்கும்!  

மேலும் குருவும் வாயுவும் சேர்ந்து வணங்கிய குருவாயூர் குருவாயூரப்பன், மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில் சுயம்பு வடிவ குரு ( சுயம்பு சக்கரத்தாழ்வாருடன் இருப்பார்) மற்றும் அனைத்து சிவாலயங்களிலும்  தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகிய தலங்களுக்கும் ஆகியோரையும் வணங்குங்கள். முக்கியமாக, நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானை தவறாமல் வணங்குங்கள்.

குரு பகவான் இனிப்புப் பிரியர். அதிலும் முக்கியமாக லட்டு பிரியர். எனவே குரு பகவானுக்கு லட்டு நைவேத்தியம் செய்யுங்கள். பலருக்கும் லட்டு தானம் செய்யுங்கள்.  

உங்களால் எவ்வளவு லட்டு தரமுடியும்? ஐந்து, பத்து, ஐம்பது, நூறு... மொத்தமாகக் கொடுக்க முடியாது. இப்போது பத்து தரலாம். அடுத்த மாதம் பத்து கொடுக்கலாம். இப்படித்தான் கொடுக்கமுடியும் என்கிறீர்களா? கொடுங்கள். முடியும் போதெல்லாம் லட்டு கொடுங்கள். லட்டு கொடுக்கக் கொடுக்க, குருவின் அருள் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்!

அதேபோல், கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து பிரார்த்திப்பதும் நல்ல பலனைத்தரும். ஒருபோதும் கொண்டைகடலையை மாலையாக அணிவிப்பதை செய்யாதீர்கள், அது தவறான வழிபாடு ( எலுமிச்சை விளக்கு, பூசணி விளக்கு, தேங்காய் விளக்கு செய்யக்கூடாதவை, இதுபற்றி பிறகொரு பதிவில் விரிவாகவே விளக்குகிறேன்)

குருபகவான் குழந்தைகளைக் குறிப்பவர், எனவே நீங்கள் செய்கின்ற நைவேத்தியங்களை குழந்தைகளுக்கு வழங்குங்கள். குரு இன்னும் சந்தோஷப்படுவார்.

மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உரிய வண்ணம். எனவே மஞ்சள் நிற வஸ்திரங்களை குருவுக்குக் காணிக்கையாக்குங்கள். சுமங்கலிகளுக்கு மஞ்சள்சரடு வழங்குங்கள். இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  

குரு பகவான், தங்கத்திற்கு அதிபதி. எனவே ஏழைப் பெண்களின் திருமணத்தில் தாலியை தானமாக செய்து தாருங்கள். குருபகவான் இதில் மனம் குளிர்வார்.

கல்வியும் , கல்வியை போதிக்கும் ஆசிரியர்களும் குருவின் அம்சமே! எனவே ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.  இது, குரு பகவானுக்கே உதவுவதற்கு சமம்  என்கின்றன ஞானநூல்கள்.  

உங்கள் ஆசிரியருக்கு முடிந்தவரை ஏதாவது உதவி செய்யுங்கள், அவரை இறைவனுக்கு நிகராக வணங்குங்கள். அந்த குருபகவானே நேரில் வந்து உங்களுக்கு உதவுவார். 

அதேபோல், முக்கியமான இன்னொரு விஷயம்... எப்போதும், எல்லோரிடமும், எல்லா தருணங்களிலும் முழு நேர்மையுடன் இருங்கள். காரணம்... குரு பகவான் நேர்மையின் அடையாளம்.  நீங்கள் நல்லவராக, நேர்மையானவராக இருந்துவிட்டால், ஏதாவதொரு வடிவில் உங்கள் கஷ்ட காலத்தில் குருவே வந்து உங்களுக்கு உதவுவார்.  

இதற்கு சரியான உதாரணம் ராமாயணம்.

நல்லவராக இருந்தால் குரங்கு கூட உதவிக்கு வரும். கெட்டவராக இருந்தால் உங்கள் சகோதரன் கூட உறுதுணையாக இருக்க மாட்டான். இந்த உதாரணமே போதும்...

 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதற்கு, குரு பகவானை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். குருவருள் இன்றி திருவருள் இல்லை!

-தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close