[X] Close

கன்னி - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கன்னி ராசி வாசகர்களே!

மனத்துக்குச் சரியெனத் தோன்றுவதைத் திட்டவட்டமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடைய வர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிக்கள் மத்தியில் பிரபலமாக ப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.

வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனங்கள், மின்சாரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன், ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் ரசனை மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தைச் சரிபார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும்.

மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது வீட்டைப் பாதுகாப்பாக பூட்டிச் செல்லுங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். புகைப்பழக்க முள்ளவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது.

இந்த ஆண்டு முழுக்க ராகுவும் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சிறுசிறு அவமானங்கள், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

இந்த வருடம் முழுக்க குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்து கொள்வீர்கள். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.

தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக் கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கி னாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்துச் சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம்தவறிச் சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். நெஞ்செரிச்சல், வாயுக் கோளாறு வந்து போகும்.

kanni 2.jpg

வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்துப் பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். பங்குதாரர்களால் விரயம் வரும்.

உத்தியோகஸ்தர்களே! ராகுவால் உத்தியோ கத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கியமான கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.

பெண்களுக்கு: குரு ஓரளவு சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மாமனார், மாமியார், நாத்தனாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். இந்த ஆண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் சமையலறைச் சாதனங்கள் பழுதாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் மீது உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களைத் தலைநிமிர வைப்பதுடன் புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குப் புதன்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் வெள்ளரிப் பிஞ்சைத் தானமாகக் கொடுங்கள். வாழ்வு சிறக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close